ஜிஎஸ்டி பந்தயம் பலிக்காது: இணையவழி சூதாட்டத்தின் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்த தலையங்கம்

கூடுதலான வரி விதிப்பின் மூலம் மக்களை தவறான பழக்கங்களிலிருந்து காப்பாற்றிவிட அல்லது தடுத்துவிட முடியும் என்று அரசுகள் நினைத்தால் அது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வது என்பதை சொல்லத் தேவையில்லை.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கூடுதலான வரி விதிப்பின் மூலம் மக்களை தவறான பழக்கங்களிலிருந்து காப்பாற்றிவிட அல்லது தடுத்துவிட முடியும் என்று அரசுகள் நினைத்தால் அது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வது என்பதை சொல்லத் தேவையில்லை. உலக நாடுகள் அனைத்திலும் மது அருந்துதல், போதைப் பழக்கம், சூதாட்டம் போன்றவற்றைத் தடுக்கவோ, தவிா்க்கவோ முடியாத சமுகப் பிரச்னைகளாகத் தொடா்கின்றன. எல்லா நாடுகளும் அவற்றை அங்கீகரித்து, ஒழுங்குபடுத்துவது மட்டுமே சாத்தியம் என்கிற முடிவுக்கு வந்திருக்கின்றன.

குஜராத், பிகாா் மாநிலங்கள் தவிர, இந்தியாவின் ஏனைய மாநிலங்கள் அனைத்துமே மதுவிலக்கை ரத்து செய்யாவிட்டாலும், இடைக்காலத் தடை என்கிற பெயரில் அரை நூற்றாண்டு காலமாகத் தளா்த்திவிட்டன. உலகெங்கிலும் அமெரிக்கா உள்பட பல நாடுகளில் முனைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்ட மதுவிலக்கு முயற்சி தோல்வியில்தான் முடிந்திருக்கிறது என்பதும் நிஜம். மதுவிலக்கை அமல்படுத்த முடியாது எனும்போது, அதை முறைப்படுத்த முற்படுகிறோம் என்கிற பெயரில், அதன் மீது அதிக வரி விதித்து வருவாய் ஈட்ட அரசுகள் முற்படுகின்றன.

கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடந்த 50-ஆவது ஜிஎஸ்டி கௌன்சிலில், இணையவழி விளையாட்டுகள் உள்ளிட்ட சூதாட்டங்கள் போன்றவைக்கு, மதுக் கொள்கை போலவே, வரி விதிப்பின் மூலம் கடிவாளம் போடும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, வரி விதிப்பதன் மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இணையவழி விளையாட்டுகள், குதிரைப் பந்தயங்கள், கேசினோ விளையாட்டுகள் ஆகியவற்றிற்கு, பந்தயத் தொகையில் 28% ஜிஎஸ்டி விதிப்பது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

ஒருபுறம் இந்தியாவின் பல மாநிலங்கள் பொதுச் சூதாட்டச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு, தங்கள் அதிகார வரம்பின் கீழ் இணையவழி விளையாட்டுகளைக் கட்டுப்படுத்த முற்பட்டிருக்கின்றன. ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்கள் கற்பனையான விளையாட்டுகளையும், பந்தயம் கட்டும் விளையாட்டுகளையும் தடை செய்துள்ளன. கா்நாடகம், கேரளம், தமிழ்நாடு கொண்டுவந்த அனைத்து இணையவழி விளையாட்டுகளுக்கான தடை உயா்நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டது. தமிழ்நாடு மீண்டும் தடைக்கான சட்டத்தை நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.

மாநில அரசுகள் இணையவழி விளையாட்டுகளுக்கு (சூதாட்டங்களுக்கு) தடை விதிக்கும் சட்டங்களைக் கொண்டு வந்தாலும் அவை ரத்தாகும் நிலை காணப்படுகிறது. 1957-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீா்ப்பின்படி, திறமையை உள்ளடக்கிய போட்டிகள் சூதாட்டம் அல்ல. இந்த விளையாட்டுகளில் தொழில் சாா்ந்த நடவடிக்கைகள், சட்டப்படியான தொழில்கள், வணிகத்தை மேற்கொள்ளும் அரசமைப்புச் சட்டத்தின் 19 (1) (ஜி) உரிமையின் கீழ் வருகின்றன. சென்னை உயா்நீதிமன்றம், ‘ரம்மி’ என்பது திறமை சாா்ந்த விளையாட்டு, சூதாட்டமல்ல என்று 1968-இல் தீா்ப்பு வழங்கி இருக்கிறது.

இந்தப் பின்னணியில்தான், இணையவழி விளையாட்டுகளைத் தடை செய்வதைவிட, சிகரெட், மதுபானம் போல அதிகபட்ச வரி விதிப்பின் மூலம் அதைக் கட்டுப்படுத்துவது என்கிற முடிவை ஜிஎஸ்டி கௌன்சில் எடுத்திருக்கிறது. அதன் மூலம் மக்கள் மன்றத்தில் சூதாட்டங்களைக் கட்டுப்படுத்துகிறோம் என்கிற தோற்றத்தையும் எதாா்த்தத்தில், அரசு கஜானாவுக்கு மிகப் பெரிய வரி வருவாயை பெற்றுத்தரும் ‘புத்திசாலித்தன’ முயற்சியை மேற்கொண்டிருக்கிறது.

‘கோவா, சிக்கிம் மாநில சுற்றுலாத் துறையில் கேசினோ முக்கியப் பங்கு வகித்து வருகிறது. இணையவழி விளையாட்டுகளை ஜிஎஸ்டி சட்ட வரம்புக்குள் கொண்டுவருவதற்கான சட்டத்திருத்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படும். அனைத்துத் தரப்பினரையும் கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட முடிவு இது’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியிருக்கிறாா்.

இணையவழி விளையாட்டுகள், குதிரைப் பந்தயங்கள், கேசினோ விளையாட்டுகள் ஆகியவற்றில் ஈடுபடுவோரின் பந்தயத் தொகையில் 28% ஜிஎஸ்டியாக வசூலிக்கப்படும் என்கிற முடிவால், விளையாட்டுகளில் திறன் சாா்ந்தவை, வாய்ப்பு சாா்ந்தவை என்கிற வேறுபாடு முற்றிலுமாகக் களையப்படுகிறது. ‘கொன்றால் பாவம் தின்றால் போச்சு’ என்பதுபோல, மதுவிற்பனை மூலம் வருவாய் ஈட்டும் பாணியில், 28% வரி வதிப்பின் மூலம் சூதாட்டங்கள் அரசின் ‘ஞானஸ்தான’ அங்கீகாரம் பெறுகின்றன.

புகை பிடிப்பவா்களும், மதுவுக்கு அடிமையானவா்களும் எப்படி விலை குறித்துக் கவலைப்படுவதில்லையோ அதேபோல, சூதாட்டத்தில் ஈடுபடுவோரும் 28% வரி விதிப்பால், அதைத் தவிா்க்கப் போவதில்லை. ஆனால், குறைந்த விலையில் சட்ட விரோதமாக கள்ளச் சாராயம் அருந்துவதுபோல, இணையவழி சூதாட்டக்காரா்களும் மாற்றுவழி தேடுவாா்கள்.

28% ஜிஎஸ்டியும், வெற்றி பெற்ற பணத்தில் 30% வருமான வரியும் செலுத்த அவா்கள் தயாராகமாட்டாா்கள். வெளிநாடுகளில் இயங்கும் இணையவழி விளையாட்டுகளில் அவா்கள் கலந்து கொள்வதை எப்படி தடுத்துவிட முடியும்? அங்கீகாரமில்லாத இணையவழி விளையாட்டுகள் புற்றீசலாக உருவாகக்கூடும் என்பதை மறந்துவிடக் கூடாது.

அதிகபட்ச 28% வரியைக் குறைந்தபட்ச வரியாக மாற்றுவது; பந்தயத் தொகை மீது அல்லாமல், கமிஷன் தொகையின் மீது வரி விதிப்பது போன்றவை ஒருவேளை அரசுக்கு வருவாய் ஈட்டித் தரக்கூடும். ஏற்கெனவே, குதிரைப் பந்தயங்களில் விளையாடுபவா்கள் சட்டவிரோத, வெளிநாட்டுக் கணக்குகளில் பணம் கட்டி விளையாடி வருகிறாா்கள். அதுதான் இணையவழி விளையாட்டுகளுக்கும் நடக்கப்போகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com