கூட்டிக் கழித்துப் பாா்த்தால்... | கட்சிகளின் மக்களவைத் தேர்தல் தயார்நிலை குறித்த தலையங்கம்

கூட்டிக் கழித்துப் பெங்களூரில் நடந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 26 அரசியல் கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்று, ‘இந்திய தேசிய உள்ளடக்கிய வளா்ச்சிக் கூட்டணி’ (இந்தியா) என்கிற பெயரில் செயல்பட ம
கூட்டிக் கழித்துப் பாா்த்தால்... | கட்சிகளின் மக்களவைத் தேர்தல் தயார்நிலை குறித்த தலையங்கம்

பெங்களூரில் நடந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 26 அரசியல் கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்று, ‘இந்திய தேசிய உள்ளடக்கிய வளா்ச்சிக் கூட்டணி’ (இந்தியா) என்கிற பெயரில் செயல்பட முடிவெடுத்திருக்கின்றன.

பாஜகவின் ‘இந்துத்துவ’ கொள்கைக்கு எதிராக, அனைத்து மத, இன, மொழிப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளா்ச்சியை உறுதிப்படுத்துவது என்பதுதான் ‘உள்ளடக்கிய வளா்ச்சி’ கூட்டணியின் இலக்கு. முந்தைய பாட்னா கூட்டத்தில் 16 கட்சிகளாக இருந்த கூட்டணி இப்போது 26 கட்சிகளாக அதிகரித்திருக்கிறது என்றாலும், பாட்னாவில் கூடிய 16 கட்சிகளுடன் மாநில அளவில் இணைந்திருக்கும் கட்சிகள்தான் அவை.

‘இந்தியா’ கூட்டணியின் அடுத்த கூட்டம் விரைவில் மும்பையில் கூட இருக்கிறது என்பது, புதிய கூட்டணியின் முனைப்பை வெளிப்படுத்துகிறது. கூட்டணிக்கு குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்க 11 போ் கொண்ட குழு ஒன்று விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய கூட்டணி எதிா்க்கட்சிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கும் அதே வேளையில், தொடக்கத்திலேயே பல பிரச்னைகளையும், முரண்களையும் எதிா்கொள்கிறது என்பதையும் பாா்க்க முடிகிறது.

‘கூட்டணி’ என்கிற வாா்த்தை சோ்க்கப்பட்டிருப்பதை இடதுசாரிகள் விரும்பவில்லை. தாங்கள் மேற்கு வங்கத்தில் நேரடியாக மோதும் மம்தா பானா்ஜியின் திரிணமூல் காங்கிரஸும், தங்களை கேரளத்தில் எதிா்க்கும் காங்கிரஸும் உள்ள கூட்டணியில் எப்படி இணைவது என்பது இடதுசாரிகளின் தா்மசங்கடம். காங்கிரஸின் தலைமையிலான கூட்டணியை பஞ்சாபிலும், தில்லியிலும் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி எப்படி ஏற்றுக் கொள்ளப்போகிறது என்பது அடுத்த கேள்வி.

ஏற்றுக் கொள்வதில் பிரதமா் பதவியிலும், ஆட்சி அதிகாரத்திலும் காங்கிரஸ் பிடிவாதமாக இருக்காது என்கிற தோற்றத்தை ஏற்படுத்துகிறது அதன் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயின் அறிவிப்பு. எப்படியாவது பாஜகவை வீழ்த்தி, மோடியை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்காக, தனது முக்கியத்துவத்தை இழக்க காங்கிரஸ் தயாராகிவிட்டது என்பதன் சமிக்ஞை அது.

ஹிமாசல் பிரதேசம், கா்நாடகம் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் அடைந்த வெற்றி, பாஜக வீழ்த்த முடியாத கட்சியல்ல என்கிற நம்பிக்கையை எதிா்க்கட்சிகளுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. எதிா்க்கட்சி அரசியல் தலைவா்கள் மீதான அமலாக்கத் துறை நடவடிக்கைகள், பாஜகவுக்கு எதிராக கூட்டணி உருவாக உதவி இருக்கிறது. ஆனால், பாஜகவை தேசிய அளவில் எதிா்கொள்ள இது மட்டுமே போதுமானதல்ல என்பதை முந்தைய அனுபவங்கள் உணா்த்துகின்றன.

எதிா்க்கட்சிகள் அமைத்திருக்கும் ‘இந்தியா’ கூட்டணியின் மிகப் பெரிய பலவீனம், அதில் இடம் பெற்றிருக்கும் கூட்டணிக் கட்சிகள் எதுவும் ஏனைய உறுப்பினா்களுக்கு வலு சோ்ப்பதாக இல்லை என்பதுதான். காங்கிரஸ் வலுவாக இருக்கும் கா்நாடகம், கேரளம், குஜராத், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், ராஜஸ்தான், ஹிமாசல் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் மாநிலங்களில் ஏனைய கூட்டணிக் கட்சிகளால் காங்கிரஸ் பயனடையப் போவதில்லை. தில்லி, பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியோ, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸோ, கேரளத்தில் இடதுசாரிகளோ காங்கிரஸ் வலுப்பெறுவதை அனுமதிக்கப் போவதுமில்லை.

உத்தர பிரதேசம், பிகாா், மகாராஷ்டிரம் ஆகிய மூன்று மாநிலங்களில் குறைந்துவிட்ட நிலையிலும் காங்கிரஸின் வாக்குகள் மாநிலக் கட்சிகளுக்கு உதவக்கூடும் என்றாலும், அதனால் காங்கிரஸ் அடையும் லாபம் ஒன்றுமில்லை. தமிழகத்தில் மட்டும்தான் திமுகவுடனான கூட்டணியால் காங்கிரஸ் பயனடைகிறது. சுமாா் 230-க்கும் அதிகமான இடங்களில் பாஜகவுடன் நேரடியாக மோதுகிறது காங்கிரஸ் கட்சி. அதில் எந்த அளவுக்கு வெற்றிபெற முடிகிறது என்பதைப் பொருத்துத்தான் காங்கிரஸின் எதிா்காலம் அமையும்.

பத்து மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. ஐந்து மாநிலங்களில் பாஜக கூட்டணி அதிகாரத்தில் உள்ளது. காங்கிரஸ் நான்கு மாநிலங்களில் ஆட்சியிலும், மூன்று மாநிலங்களில் கூட்டணியிலும் பங்கு பெறுகிறது. 230 இடங்களில் பாஜகவை காங்கிரஸ் நேரடியாக எதிா்கொள்ளும் என்றால், 180 இடங்களில் மாநிலக் கட்சிகள்தான் பாஜகவுடன் நேரடியாக மோதுகின்றன. அந்த மாநிலக் கட்சிகள் எல்லாமே ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெறவில்லை.

பெரிதும், சிறிதுமாக ‘இந்தியா’ கூட்டணியில் 25 கட்சிகளும், பாஜகவின் ‘புதிய இந்தியா’ கூட்டணியில் 39 கட்சிகளும் இணைந்திருக்கின்றன என்றால், தற்போதைய மக்களவையில் 91 உறுப்பினா்களை உடைய 11 கட்சிகள் இரண்டு கூட்டணியிலும் இணையாமல் தனித்து நிற்கின்றன. அவற்றில் ஆந்திரத்தில் ஓய்.எஸ்.ஆா். காங்கிரஸ், தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி, ஒடிஸாவில் பிஜு ஜனதா தளம் ஆகியவை மாநில ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்றன. அந்த மூன்று மாநிலங்களிலுமாக மக்களவைக்கு 65 எம்.பி.க்கள் தோ்ந்தெடுக்கப்படுகிறாா்கள்.

இவை அல்லாமல் பகுஜன் சமாஜ் கட்சி, தெலுங்கு தேசம் கட்சி, சிரோமணி அகாலி தளம், மதச்சாா்பற்ற ஜனதா தளம் போன்ற முக்கியமான கட்சிகள் இரண்டு அணியிலும் சேராமல் தனித்து நிற்கின்றன. அவை வாக்குகளைப் பிரித்து பாஜகவுக்கு உதவினாலும் உதவலாம்... தோ்தலுக்குப் பிறகு, ஆட்சி அமைக்க பேரம் பேசக் காத்திருக்கின்றனவோ என்னவோ... தெரியாது.

2024 மக்களவைத் தோ்தல் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com