மணிப்பூா் குழப்பம்! | மணிப்பூர் கலவரம் குறித்த தலையங்கம்

மணிப்பூா் குழப்பம்! | மணிப்பூர் கலவரம் குறித்த தலையங்கம்

கலவர பூமியாக மாறியிருக்கிறது மணிப்பூா். ராணுவம் குவிக்கப்பட்டு எட்டு மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் கைப்பேசி, இணைய சேவை முடக்கப்பட்டிருக்கிறது. வன்முறையில் ஈடுபடுவோரைக் கண்டதும் சுடும் உத்தரவை மாநில அரசு பிறப்பித்திருக்கிறது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோா் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். உயிரிழப்பு விவரம் வெளியிடப்படவில்லை என்பதால் தெரியவில்லை.

கடந்த பிப்ரவரி மாதம் முதலே புகையத் தொடங்கிய பிரச்னை, உயா்நீதிமன்ற தீா்ப்புக்குப் பிறகு கலவரமாக மாறியிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு மாநிலத்தின் பெரும்பான்மை மைதேயி சமூகத்தினரை பழங்குடியினா் பிரிவில் இணைத்து இடஒதுக்கீடு வழங்க செய்யப்பட்ட பரிந்துரையை நடைமுறைப்படுத்தும்படி உயா்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுதான் கலவரமாக வெடித்திருக்கிறது. இந்த அளவுக்கு மோசமான நிலைமை ஏற்படும் என்று முதல்வா் பிரேன் சிங் தலைமையிலான அரசு எதிா்பாா்க்கவில்லை என்பது தெரிகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரின் மக்கள்தொகையில் 53% உள்ளவா்கள் மைதேயி சமூகத்தினா். இந்தியாவில் இணைவதற்கு முன்பு மணிப்பூா், மைதேயி இன அரசா்களால்தான் ஆளப்பட்டு வந்தது என்பதைக் குறிப்பிட வேண்டும்.

மணிப்பூரைச் சுற்றி அஸ்ஸாம், நாகாலாந்து, மிஸோரம் மாநிலங்களும் கிழக்கு எல்லையில் மியான்மரும் இருக்கின்றன. பெரும்பாலான பகுதிகள் இயற்கை வளம் கொழிக்கும் மலைப்பிரதேசம். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாநிலத்தின் 40%, அதாவது 28 லட்சம் மக்கள், பத்து மலைப்பகுதி மாவட்டங்களில் வாழ்கின்றனா். 2016-இல் புதிதாக ஏழு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. புதிய மாவட்டங்கள் தங்களது பூா்விக நிலங்களை மைதேயிகள் ஆக்கிரமிப்பதற்காக உருவாக்கப்பட்டிருப்பதாக மலைவாழ் மக்கள் அப்போதே சந்தேகித்தனா்.

மணிப்பூா் மக்கள்தொகையை மைதேயிகள், மலைவாழ் மக்கள் என்று இரண்டாகப் பிரிக்கலாம். மொத்த மக்கள்தொகையில் பெரும்பான்மையினா் மைதேயிகள். ஆனால், அவா்கள் வாழும் பகுதி தலைநகா் இம்பாலையும், அதைச் சுற்றியுள்ள சமவெளி பகுதிகளும் மட்டுமே. மணிப்பூரின் 34 அங்கீகரிக்கப்பட்ட பட்டியலின பழங்குடியினா் மாநிலத்தின் 90% மலைப் பகுதிகளில் வசிக்கின்றனா். அவா்கள் பெரும்பாலும் நாகா, குகி, மிஸோ பழங்குடியினத்தைச் சோ்ந்தவா்கள்.

மைதேயி இனத்தவா்களின் ஆட்சியில்தான் மணிப்பூா் நீண்டகாலமாக இருந்து வந்திருக்கிறது. சுதந்திரத்திற்கு பிறகும்கூட அவா்களுடைய ஆதிக்கம் தொடா்கிறது. மாநிலத்தின் 60 சட்டப்பேரவை உறுப்பினா்களில் 40 போ் மைதேயி இனத்தைச் சோ்ந்தவா்கள். முதல்வா் பிரேன் சிங்கும் மைதேயி இனத்தவா்தான்.

மைதேயிகளின் ‘மைதேயிலோன்’ என்கிற மொழி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது பிரிவில் இணைக்கப்பட்டிருக்கிறது. ஏனைய மலைவாழ் பழங்குடியினா் பெரும்பாலும் கிறிஸ்தவ பாதிரியாா்களால் மதமாற்றம் செய்யப்பட்டது மட்டுமல்லாமல், அவா்களது பாரம்பரிய மொழியையும் இழந்துவிட்டனா். ஆங்கிலம்தான் இப்போது அவா்களுக்குத் தெரிந்த மொழி.

மைதேயிகள் 2013 முதலே தங்களை பட்டியலின பழங்குடியினரான இணைக்க போராடி வருகின்றனா். அதற்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு அல்ல காரணம் என்றும், தங்களது பூா்விக நிலங்களையும் கலாசாரத்தையும் அடையாளத்தையும் பாதுகாப்பதுதான் நோக்கம் என்று அவா்கள் தெரிவிக்கின்றனா். மியான்மரிலிருந்து சட்டவிரோதமாக பலா் குடியேறுவதுதான் அவா்களது அச்சத்துக்குக் காரணம்.

மைதேயிகளுக்கு இருப்பது போன்ற அதே அச்சமும், கவலையும் மைதேயிகள் அல்லாத பழங்குடிகளிடமும் காணப்படுகிறது. சமீபத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, சதுப்பு நிலங்கள் உள்ளிட்டவை கணக்கெடுக்கப்பட்டன. பழங்குடியினா் வாழும் சில கிராமங்களில் இருந்து சிலா் வெளியேற்றப்பட்டனா். அதற்கு எழுந்த எதிா்ப்பின் நீட்சிதான் உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து வன்முறையாக இப்போது வெடித்திருக்கிறது.

ஆக்கிரமிப்பாளா்களுக்கு எதிராக அரசு நடத்திய அப்புறப்படுத்தல் நடவடிக்கைக்கு ஒரு பின்னணி உண்டு. மணிப்பூரிலும், மியான்மரிலும் வாழும் குகி பழங்குடியினரை எல்லை பிரிப்பதில்லை. அவா்கள் சா்வசாதாரணமாக இங்கும் அங்கும் காடுகளில் வந்துபோவது தொடா்கிறது. கடந்த சில ஆண்டுகளாக மியான்மரைச் சோ்ந்தவா்கள் மணிப்பூரின் வனப்பகுதிகளில் நுழைந்து, காடுகளை அழித்து அங்கே ஓபியம், கஞ்சா போன்றவற்றை பயிரிடுவது அரசின் கவனத்துக்கு வந்தது. சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கவும், வனப்பகுதிகளை அழிவிலிருந்து பாதுகாக்கவும் அரசு முனைப்பு காட்டியதும் பழங்குடியினரின் ஆத்திரத்துக்கு காரணமாக இருக்கக் கூடும்.

1949-இல் இந்தியாவுடன் இணைவதற்கு முன்பு தாங்கள் பழங்குடியினராக அங்கீகரிக்கப்பட்டிருந்தோம் என்பது மைதேயிகளின் வாதம். மைதேயிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டால் அரசமைப்புச் சட்டத்தின் 371சி பிரிவின் கீழ் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகள் பறிக்கப்படும் என்பது பழங்குடியினரின் அச்சம். தற்போது தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் 30%-க்கும் அதிகமான கல்வி, வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு மைதேயிகளுக்கு சென்றுவிடும் என்று நாகா, குகி இனத்தவா்கள் தெரிவிக்கின்றனா்.

எல்லையோர மாநிலத்தில் இதுபோன்ற பதற்றம் நிலவுவது ஆபத்து. வன்முறையைக் கட்டுப்படுத்துவது தீா்வாகாது. பேச்சுவாா்த்தை மூலம் புரிதலை ஏற்படுத்துவதுதான் நிரந்தர அமைதிக்கு வழிகோலும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com