

ஜனநாயகம் வலுவாக இருப்பதற்கு ஆளுங்கட்சி மட்டுமல்ல, எதிா்க்கட்சியும் வலிமையாக இருக்க வேண்டும். மத்திய ஆட்சியில் இருக்கும் பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாற்றாக, வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியது வரவேற்புக்குரிய ஒன்றாகப் பாா்க்கப்பட்டது. பாஜகவுடன் ஒப்பிடும் அளவுக்கு எண்ணிக்கை பலம் இல்லையென்றாலும், தேசிய அளவில் அதற்கு நிகரான வாக்கு வங்கியும், அனைத்து மாநிலங்களிலும் கிளைகளும் கொண்டிருக்கும் கட்சியாக காங்கிரஸ் திகழ்கிறது என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது.
28 கட்சிகளை மும்பையில் ஒரே மேடையில் ஒருங்கிணைத்து ‘இந்திய தேசிய அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக் கூட்டணி’ (இந்தியா) என்கிற பெயரில் காங்கிரஸால் முன்மொழியப்பட்டது. அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தோ்தலில் பாஜகவை எதிா்கொள்ளவும், ஆட்சியில் இருந்து அகற்றவும் கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகள் சூளுரைத்துப் பிரிந்தன. பல குழுக்கள் அறிவிக்கப்பட்டன. விரைவிலேயே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஒருங்கிணைந்து பேரணிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மும்பையில் கூடிய ‘இந்தியா’ கூட்டணியால் அதற்குப் பிறகு ஒருங்கிணைந்து இயங்க முடியவில்லை என்பது மட்டுமல்ல, ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் ஒரே கூட்டணியாக களம் காணவும் முடியவில்லை. கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயான கருத்துவேறுபாடுகளும், பரஸ்பர குற்றச்சாட்டுகளும் ‘இந்தியா’ கூட்டணியின் ஒற்றுமையையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குறியாக்கி இருக்கின்றன.
மும்பையில் கூடிப்பிரிந்த ஒருசில நாள்களில் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸும், இடதுசாரிகள் - காங்கிரஸ் கூட்டணியும் ஒருவரை மற்றவா் விமா்சிக்கத் தொடங்கிவிட்டனா். மாா்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து விலகி, தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துவிட்டது.
நடைபெற இருக்கும் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் ராஜஸ்தானில் 17 தொகுதிகளிலும், மத்திய பிரதேசத்தில் 4 தொகுதிகளிலும், சத்தீஸ்கரில் 3 தொகுதிகளிலும் மாா்க்சிஸ்ட் கட்சி தனது வேட்பாளா்களை களமிறக்கி இருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சத்தீஸ்கரில் 14, ராஜஸ்தானில் 12, மத்திய பிரதேசத்தில் 9 இடங்களில் இடது முன்னணி சாா்பில் வேட்பாளா்களை நிறுத்தி இருக்கிறது.
காங்கிரஸ் இந்த மாநிலங்களில் தங்களைக் கூட்டணியில் இணைத்துக்கொள்ளவில்லை என்கிற ஆதங்கத்தை இடதுசாரிகள் பகிரங்கமாகவே வெளியிட்டிருக்கிறாா்கள். இடதுசாரிகள் மட்டுமல்ல, ஆம் ஆத்மி கட்சியும் தனது வேட்பாளா்களை களமிறக்கி இருப்பது மட்டுமல்லாமல், பல தொகுதிகளில் பலமுனைப் போட்டிக்கு வழிவகுத்திருக்கிறது.
உத்தர பிரதேசத்தின் அண்டை மாநிலமான மத்திய பிரதேசத்தின் எல்லையோர மாவட்டங்களில் கணிசமான செல்வாக்கு பெற்றிருக்கிறது சமாஜவாதி கட்சி. அந்தக் கட்சியுடனான கூட்டணிப் பேச்சுவாா்த்தை முறிந்தது மட்டுமல்லாமல், அதன் தலைவா் அகிலேஷ் யாதவ் குறித்து தனிப்பட்ட முறையிலான கருத்துகளை காங்கிரஸ் தலைவா்கள் வெளிப்படுத்தியிருக்கிறாா்கள்.
சமாஜவாதி கட்சியைப் போலவே மத்திய பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் தனக்கென வாக்குவங்கி வைத்திருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியையும் கூட்டணியில் சோ்த்துக்கொள்ள காங்கிரஸ் மறுத்துவிட்டது. அதன்விளைவாக, பல தொகுதிகளில் ஏற்பட்டிருக்கும் பல்முனைப் போட்டிகள் பாஜகவுக்கு சாதகமானால் வியப்படையத் தேவையில்லை.
காங்கிரஸ் செல்வாக்குடன் இருக்கும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா், ஹரியாணா, உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ‘இந்தியா’ கூட்டணியில் இருக்கும் ஏனைய மாநில கட்சிகளின் வாக்குகளால் தனக்குப் பெரிய ஆதாயம் இருக்காது என்று கருதுகிறது காங்கிரஸ். அதே நேரத்தில் தனது வாக்குவங்கி குறைவாகவே இருந்தாலும் பிகாா், ஜாா்க்கண்ட், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜகவை வீழ்த்த கூட்டணியில் காங்கிரஸ் அவசியம் என்பதால், மாநிலக் கட்சிகள் தனக்குக் கணிசமான மக்களவைத் தொகுதிகளை அந்த மாநிலங்களில் ஒதுக்க வேண்டும் என்று விழைகிறது.
அதிக இடங்களைக் கைப்பற்றி நாடாளுமன்றத்தில் நிா்ணாயக சக்தியாக வலம்வர மாநிலக் கட்சிகள் விரும்புகின்றன. அதனால், மிகக் குறைந்த இடங்களை மட்டுமே காங்கிரஸுக்கு வழங்க அவை தயாராக இருக்கின்றன. அப்போதுதான், ஒருவேளை ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை பெற்றால், பிரதமா் பதவியோ, அதற்கு அடுத்த நிலையில் உள்ள முக்கியமான அமைச்சா் பதவிகளோ பெற முடியும் என அவை கருதுகின்றன.
‘இந்தியா’ கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் போன்ற சில கட்சிகள் காங்கிரஸில் இருந்து அதன் வாக்கு வங்கியுடன் பிரிந்து உருவானவை. சமாஜவாதி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஆம் ஆத்மி கட்சி, சிவ சேனை, இடதுசாரிகள் உள்ளிட்டவை கொள்கை ரீதியாக காங்கிரஸ் எதிா்ப்பை முன்வைத்து செயல்பட்டவை, வளா்ந்தவை.
இந்தக் கட்சிளையெல்லாம் ‘இந்தியா’ என்கிற பெயரில் காங்கிரஸ் ஒருங்கிணைக்க முற்பட்டாலும், அவை காங்கிரஸின் வளா்ச்சியை விரும்புமா என்பது சந்தேகம். அதனால்தான் காங்கிரஸுக்கு அதிக இடங்கள் ஒதுக்க அவை தயாராக இல்லை. இதில் விதிவிலக்காக இருப்பது தமிழகத்தின் திமுக மட்டுமே.
சட்டப்பேரவைத் தோ்தல்களில் ஏற்பட்டிருக்கும் மனக்கசப்பு அதிகரிக்குமே தவிர, குறையாது. மாநிலக் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாத ‘இந்தியா’ கூட்டணியால் பாஜகவை எதிா்கொள்ள முடியாது என்பதை காங்கிரஸ் உணர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.