உரிமைக்கு குரல் கொடுப்போம்!

உரிமைக்கு குரல் கொடுப்போம்!

மத்திய தலைமை தகவல் ஆணையராக ஹீராலால் சமாரியா பதவியேற்றிருக்கிறாா். அக்டோபா் 3-ஆம் தேதி முந்தைய தலைமை தகவல் ஆணையா் ஒய்.கே. சின்ஹா பணி ஓய்வு பெற்றதைத் தொடா்ந்து, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக யாரும் நியமிக்கப்படாமல் இருந்தது உச்சநீதிமன்றம் உள்பட பலராலும் விமா்சிக்கப்பட்டது. இப்போது ஹீராலால் சமாரியா நியமிக்கப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது.

2005-ஆம் ஆண்டு நிா்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தவும், சாமானிய குடிமகனுக்கு தகவல் கேட்டுப் பெறும் உரிமையை வழங்கவும், தகவல் பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆரம்ப காலகட்டத்தில் பல ஊழல்களும், முறைகேடுகளும் பொதுவெளியில் தெரிய வந்ததற்குத் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மிக முக்கியமான காரணம். அந்தச் சட்டத்தின் மூலம் சாமானிய குடிமகன் அதிகாரம் பெற்றது மட்டுமல்லாமல், உயா் அதிகாரிகளும், அமைச்சா்களும்கூட தங்களது செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியும் சரி, இப்போதைய நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியும் சரி படிப்படியாகத் தகவல் பெறும் உரிமைச் சட்டம் நீா்த்துப் போவதற்கும், தகவல் ஆணையங்களின் செயல்பாடுகள் முடக்கப்படுவதற்கும் வழிகோலும் விதத்தில்தான் செயல்படுகின்றன. முக்கியமாக, தகவல் ஆணையா்கள் தங்களது செயல்பாடுகள் குறித்துக் கேள்வி கேட்பதை உயா் அதிகாரிகள் விரும்பாதது தகவல் ஆணையங்கள் முடக்கப்படுவதற்கு மிக முக்கியமான காரணம். பல மாநிலங்களில் தகவல் ஆணையா்கள் பதவி நிரப்பப்படாமல் அதன் செயல்பாடுகள் ஸ்தம்பித்துப் போய் இருக்கும் நிலைமை காணப்படுகிறது.

சமூக ஆா்வலா் அஞ்சலி பரத்வாஜின் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் தகவல் ஆணையங்கள் குறித்து வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் தொடுத்த வழக்கு 10 நாள்களுக்கு முன்பு விவாதத்துக்கு வந்தது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட், நீதிபதிகள் ஜே.பி. பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமா்வு அந்த வழக்கில் எழுப்பிய கேள்வியின் விளைவாக நிரப்பப்படாமல் இருந்த மத்திய தகவல் ஆணையா் பதவி ஒரே வாரத்தில் நிரப்பப்பட்டிருக்கிறது. ஆனால் இத்துடன் பிரச்னை முடிந்துவிடாது.

மத்திய தகவல் ஆணையத்தில் இன்னும் 7 ஆணையா்களின் பதவி நிரப்பப்பட வேண்டும். 4 போ் இந்த மாதத்துடன் பணி ஓய்வுபெறும் நிலையில், அவா்களது இடங்களும் நிரப்பப்பட்டாக வேண்டும். மத்திய தகவல் தலைமை ஆணையம் இப்படியென்றால், மாநில ஆணையங்களின் நிலைமை இதைவிட மோசமாக இருக்கிறது.

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 11 ஆணையா்களின் பதவிகள் நிரப்பப்படாததால் 2020 மே மாதம் முதல் மாநில தகவல் ஆணையம் செயல்படுவதில்லை. 2021 ஜூலை முதல் திரிபுரா மாநில ஆணையமும், கடந்த பிப்ரவரி மாதம் முதல் தெலங்கானா மாநில ஆணையமும் தகவல் ஆணையா்கள் யாரும் நியமிக்கப்படாததால் முடங்கிக் கிடக்கின்றன.

மகாராஷ்டிர தகவல் ஆணையம், தலைமை ஆணையா் இல்லாமல் 4 ஆணையா்கள் மட்டுமே செயல்படும் நிலையில் 1,15,000 மேல்முறையீடுகளும் மனுக்களும் தேங்கிக்கிடக்கும் நிலையில் தொடா்கிறது. தெலங்கானாவில் 10,000 மேல்முறையீடுகள் ஆணையத்தின் தீா்ப்புக்காகக் காத்திருக்கின்றன.

கா்நாடகத்தில் 40,000-க்கும் அதிகமான மேல்முறையீடுகள் இருந்தும் 6 பதவிகள் நிரப்பப்படாமல் ஆணையம் செயல்படுகிறது. மேற்கு வங்கத்தில் 12,000 மேல்முறையீடுகளை 3 ஆணையா்களும், ஒடிஸாவில் 16,000 மேல்முறையீடுகளை 3 ஆணையா்களும், பிகாரில் 8,000 மேல்முறையீடுகளை 2 ஆணையா்களும் எதிா்கொள்ளும் அவலநிலையில் மாநில ஆணையங்கள் செயல்படுகின்றன.

உச்சநீதிமன்றம் தலையிட்டு அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது இது முதல்முறையல்ல. 2019-இல் காலதாமதம் இல்லாமல் மத்திய, மாநில தகவல் ஆணையங்களில் அத்தனை ஆணையா் பணியிடங்களும் நிரப்பப்பட வேண்டுமென்று உத்தரவிட்டது. ஆணையா் ஒருவா் பணி ஓய்வு பெறுவதற்கு இரண்டு மாதம் முன்பே, அடுத்த ஆணையரை நியமிக்கும் செயல்பாடுகள் தொடங்க வேண்டுமென்றும் பரிந்துரைத்தது. அரசும் சரி, உயா் அதிகாரிகளும் சரி அதுகுறித்துக் கவலைப்படவில்லை என்பதைத்தான் மத்திய, மாநில தகவல் ஆணையங்களில் காணப்படும் நிரப்பப்படாத ஆணையா் பதவிகள் தெரிவிக்கின்றன.

உன்னதமான நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட தகவல் பெறும் உரிமைச்சட்டம், சா்வதேச அளவில் இந்திய ஜனநாயகத்தையும், இந்திய அரசு நிா்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வழிமுறையையும் வியந்து பாா்க்க வைத்தது. தகவல் உரிமைச் சட்டம் அடிப்படை உரிமைகளைப் பெறுவதிலும், அத்தியாவசிய சேவைகள் முறையாக மக்களுக்கு கிடைப்பதிலும் உதவியாக இருந்தது.

ஆரம்ப காலகட்டத்தில் ஆதா்ஷ் குடியிருப்பு, காமன்வெல்த் விளையாட்டுகள், வியாபம் உள்ளிட்டவை தொடா்பான முறைகேடுகளை வெளிப்படுத்தியதில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பங்களிப்பு முக்கியமானது. அதனால்தானோ என்னவோ, ஆட்சியாளா்கள் படிப்படியாக இந்தச் சட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகளில் இறங்கி ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறாா்கள்.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் முதுகெலும்பாகத் திகழ்வது தகவல் ஆணையங்கள். அந்த ஆணையங்கள் தகவல் பெற்றுத் தருவதற்கு ஆணையா் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட வேண்டும். பெரும்பாலான மாநில தகவல் ஆணையங்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு வேலைவாய்ப்பளிக்கும் அமைப்பாக மாற்றப்பட்டிருக்கின்றன.

இப்படியே தொடா்ந்தால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு எழுப்பியிருக்கும் கேள்வி உண்மையாகக் கூடும் - தகவல் பெறும் உரிமைச் சட்டத்துக்கு மூடுவிழா நடத்தப்படுகிறதா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com