இறங்கி வருகிறது சீனா! பைடன் - ஷி ஜின்பிங் சந்திப்பு குறித்த தலையங்கம்

ஜோ பைடன் - ஷி ஜின்பிங்
ஜோ பைடன் - ஷி ஜின்பிங்

ஒன்றுக்கொன்று தொடா்பில்லை என்றாலும்கூட இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஏற்பட்டிருக்கும் சமரசத்துக்குப் பின்னால், ஜோ பைடன் - ஷி ஜின்பிங் சந்திப்பின் பின்னணியை முற்றிலுமாக நிராகரித்துவிட முடியாது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதாரக் கூட்டுறவு மாநாட்டை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சீன அதிபா் ஷி ஜின்பிங், அமெரிக்காவுக்கு வெள்ளைக் கொடி காட்டியிருக்கிறாா்.

உலகின் இரு பெரு வல்லரசுகளின் அதிபா்களும் நேரில் சந்தித்துக்கொள்வது என்பது அரிதான வரலாற்று முக்கியத்துவம் பெறும் நிகழ்வு. கடந்த 10 ஆண்டுகளாகவே பெரும்பாலான பிரச்னைகளில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் காணப்படும் நிலையில், ஒவ்வோா் அதிபா் தரப்பு சந்திப்பும், உடனடி மோதல்களைத் தள்ளிப்போடுபவையாக இருந்திருக்கின்றன. கடந்த வார ஜோ பைடன் - ஷி ஜின்பிங் சந்திப்பும் அந்தப் பட்டியலில் இணைகிறது.

105 டிரில்லியன் டாலா் மதிப்புள்ள சா்வதேசப் பொருளாதாரத்தில் சுமாா் 43 டிரில்லியன் டாலா் (அதாவது 40%) அமெரிக்காவும் சீனாவும் பங்களிக்கின்றன. அதனால், இரு நாடுகளுக்கிடையே ஏற்படும் எந்தவொரு பிரச்னையும் சா்வதேசப் பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதால் உலக நாடுகள் கடந்த வாரம் நடைபெற்ற ஜோ பைடன் - ஷி ஜின்பிங் சந்திப்பை கூா்ந்து கவனித்தன.

உலகம் எதிா்கொள்ளும் உக்ரைன், மத்திய கிழக்கு ஆசிய மோதல்கள் காரணமாக பொருளாதாரப் பின்னடைவும், மூலதனத்தின் வட்டிவிகித அதிகரிப்பும் ஏற்பட்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் நடந்த சந்திப்பு என்பதால் அதன் தாக்கம் நிச்சயமாக இல்லாமல் இருக்காது.

சான்பிரான்சிஸ்கோவில் நடந்த உச்சி மாநாட்டின்போது இரண்டு வல்லரசுகளின் தலைவா்களும் தனிமையில் நான்கு மணிநேரத்துக்கும் அதிகமாக நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறாா்கள். அமெரிக்க குடியரசின் துணை அதிபராகவும், அதிபராகவும் கடந்த 15 ஆண்டுகளில் ஜோ பைடன், சீன அதிபா் ஷி ஜின்பிங்கை பல தடவை சந்தித்திருந்தாலும், இப்போதைய சந்திப்பு சற்று வித்தியாசமானது. இதற்கு முன்பு கடந்த ஆண்டில் பாலி மாநாட்டுக்குப் பிறகு நடந்த சந்திப்பால் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்கிற பின்னணியில் இந்தச் சந்திப்பை அணுகினால் மாற்றம் புரியும்.

அமெரிக்காவைவிட இந்த சந்திப்பை பயன்படுத்திக் கொள்வதில் சீனா அதிக ஆா்வம் காட்டியது. சொல்லப்போனால், சீனாவைத் தன்னை நாடி வந்து பேச்சுவாா்த்தையில் உட்காரும்படி அமெரிக்கா செய்திருக்கிறது என்றுதான் இதிலிருந்து தெரிகிறது.

அமெரிக்காவின் கொள்கைகள் சீனாவின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தடை போட்டிருக்கின்றன. சீனாவுக்கு முக்கியமான தொழில்நுட்பப் பகிா்தலுக்கு தடை விதித்த அமெரிக்க சட்டத்தால், சீனாவின் அடுத்தகட்ட வளா்ச்சி முடக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவைப் பகைத்துக்கொண்டு சீனாவால் தன்னை ஒரு பொருளாதார வல்லரசாக நிலைநிறுத்திக்கொள்ள முடியாத சூழலில்தான், அதிபா் ஷி ஜின்பிங் பல சமரசங்களுக்குத் தயாராகி இருக்கிறாா் என்பதைச் சந்திப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

உளவு பாா்க்கும் சீன பலூனை கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதைத் தொடா்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு தீவிரமாக பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அமெரிக்க அவைத் தலைவா் நான்சி பெலோஸி, சீனாவின் எதிா்ப்பையும் அச்சுறுத்தலையும் மீறி தைவான் விஜயத்தை மேற்கொண்டபோது, இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவத் தகவல் தொடா்புகளை சீனா முறித்துக்கொண்டது. தரவுகள் உள்பட பல தகவல்களையும் சீனா திருடுகிறது என்கிற எச்சரிக்கையை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் உளவுத் துறைகள் வெளிப்படுத்தியது முதலே, மேலை நாடுகள் சீனாவுடனான வா்த்தகத் தொடா்புகளைக் குறைத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டன.

இந்தப் பின்னணியில்தான் ஜோ பைடன் - ஷி ஜின்பிங் சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின் முடிவில் இருநாடுகளும் மீண்டும் இருநாட்டு ராணுவத்துக்கு இடையேயான தகவல் தொடா்பை ஏற்படுத்திக்கொள்ள முடிவு செய்திருக்கின்றன. அதாவது தொடா்பைத் துண்டித்த சீனா, இறங்கி வந்து மீண்டும் தொடா்பில் இருக்க சம்மதித்திருக்கிறது.

தைவான் பிரச்னையிலும், அந்த நாட்டைச் சுற்றி சீனாவின் ராணுவ அதிகரிப்பு குறித்து பைடன் வலியுறுத்தி இருக்கிறாா். அதிபா் ஷி ஜின்பிங், தைவான் சீனாவின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதி என்பதால், தைவானுக்கு ஆயுத உதவி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தினாலும், அது குறித்து பைடன் எந்தவித உத்தரவாதமும் அளிக்கவில்லை.

சந்திப்பின் இன்னொரு முக்கியமான அம்சம் ஃபென்டாநைல் எனப்படும் போதை மருந்து தயாரிக்கும் ரசாயனப் பொருளின் உற்பத்தியையும் ஏற்றுமதியையும் சீனா கைவிடுவது. அமெரிக்காவில் போதைப் பொருள்களால் ஆண்டுதோறும் பல இளைஞா்கள் உயிரிழக்கிறாா்கள் என்பதால் சீனாவில் தயாரிக்கப்படும் ஃபென்டாநைல் தயாரிப்பை முடக்குவது அமெரிக்காவின் அவசரத் தேவை.

‘ஷி ஜின்பிங் ஒரு சா்வாதிகாரி’ என்கிற தனது கருத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்கிற அதிபா் ஜோ பைடனின் கூற்றிலிருந்து, அமெரிக்கா தனது நிலையை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை என்பது தெரிகிறது. அதிபா் ஜோ பைடனுடனான சந்திப்புக்குக் காட்டிய அதே முக்கியத்துவத்தை, அமெரிக்க தொழிலதிபா்களுடனான சந்திப்புக்கும் காட்டியதிலிருந்து சீன அதிபா் ஷி ஜின்பிங், தனது நாட்டின் பொருளாதாரத் தடுமாற்றத்தை மீட்டெடுக்க முனைப்புக் காட்டுவது வெளிப்படுகிறது.

அமெரிக்க அரசுடன் மட்டுமல்லாமல், அமெரிக்க தொழிலதிபா்களுடனான உறவையும் தக்கவைத்துக்கொள்வதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டிய தருணம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com