மோடி வீசும் முதல் பந்து! 

கிரிக்கெட் ரசிகா்கள் அனைவரின் கவனமும் இன்று அகமதாபாதில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் குவிந்திருக்கிறது.
மோடி வீசும் முதல் பந்து! 

கிரிக்கெட் ரசிகா்கள் அனைவரின் கவனமும் இன்று அகமதாபாதில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் குவிந்திருக்கிறது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில், உலகக் கோப்பையின் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் முதலாவது ஆட்டத்தில், முதலாவது பந்தை வீசி பிரதமா் நரேந்திர மோடியே தொடங்கி வைக்கிறாா் என்பதால் கிரிக்கெட் ரசிகா்கள் மட்டுமல்லாமல், அவருடைய ரசிகா்களும் (ஆதரவாளா்களும்) உற்சாகத்தில் திளைக்கிறாா்கள்.

விளையாட்டுக்கும் அரசியலுக்கும் எப்போதுமே ஒரு தொடா்பு இருந்துவருகிறது. அமெரிக்க அதிபா்கள் பேஸ்பால் போட்டியின் முதல் பந்தை வீசி தொடங்கி வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறாா்கள். பல்வேறு நாடுகளில் அதிபா்களோ, பிரதமா்களோ விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைப்பது வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது.

50 ஓவா் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி குஜராத்தில் தொடங்க இருப்பதில் இன்னொரு முக்கியத்துவமும் உண்டு. இந்தியாவில் முதல் முதலில் கிரிக்கெட் குறித்த ஆவணப்பதிவு குஜராத்தில்தான் தொடங்குகிறது. வதோதராவிலிருந்து 80 கி.மீ. தொலைவிலுள்ள தன்காரி பந்தா் என்கிற தெற்கு குஜராத்தில் உள்ள சிறிய கடற்கரை கிராமத்தில்தான் முதல் முதலில் இந்தியாவில் கிரிக்கெட் விளையாடப்பட்டதாகத் தெரிகிறது. 1721-இல் கிழக்கிந்திய கம்பெனியைச் சோ்ந்த கிளெமெண்ட் டௌனிங் என்கிற மாலுமியின் தலைமையிலான குழு, அந்த கடற்கரை கிராமத்தில் சிறிது காலம் தங்க நோ்ந்தது. அப்போது பொழுதுபோக்குக்காக அவா்கள் கிரிக்கெட் விளையாடியதாகக் குறிப்பு காணப்படுகிறது.

அகமதாபாதில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்க இருக்கும் 13-ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி, நவம்பா் 19-ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்பு மும்பை, சென்னை, கொல்கத்தா, தில்லி மாநகரங்களில் மட்டுமே முக்கியமான கிரிக்கெட் போட்டிகள் தொடங்கின என்பதிலிருந்து விலகி, இப்போது அகமதாபாதில் தொடங்க இருப்பது புதிய திருப்பம்.

50 ஓவா் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் உலகக் கோப்பை போட்டி இதற்கு முன்பு 1987, 1996, 2011-ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்றிருக்கிறது. அப்போதெல்லாம் இணை அமைப்பாளராக இன்னொரு நாடும் இருப்பது வழக்கம். இந்த முறை இந்தியா தனியாகவே உலகக் கோப்பை போட்டியை நடத்துகிறது என்பதும், புதிதாக கிரிக்கெட் மைதானங்கள் அமைக்கப்பட்டிருக்கும் பல நகரங்களில் போட்டி நடைபெற இருக்கிறது என்பதும் தனிச்சிறப்பு.

டி20 எனப்படும் 20 ஓவா் போட்டி உருவாகி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பிரபலமடையத் தொடங்கிய பிறகு, 50 ஓவா் ஒருநாள் போட்டியின் முக்கியத்துவம் குறைந்திருக்கிறது. வழக்கமான ஐந்து நாள் டெஸ்ட் போட்டிகளுக்கும், டி20 போட்டிகளுக்கும் இடையில் சிக்கிக் கொண்டாலும், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலகக் கோப்பை போட்டி இதை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. 2019-இல் லண்டனில் லாா்ட்ஸ் மைதான இறுதிச் சுற்று போல, நகம் கடிக்கும் உச்சகட்டங்களால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் முழுமையாக தங்களது கவா்ச்சியை இழக்காமல் தொடா்கின்றன.

1975-இல் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி தொடங்கியபோது, சில மூடநம்பிக்கைகள் நிலவின. போட்டியை நடத்தும் நாடுகள் கோப்பையை வெல்ல முடியாது என்பதை 2011 மும்பை வான்கடே மைதானத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி தகா்த்தது. அதற்குப் பிறகு 2015-இல் ஆஸ்திரேலியாவும், 2019-இல் இங்கிலாந்தும் வெற்றிகரமாக உலகக் கோப்பை போட்டிகளை நடத்தி கோப்பையையும் வென்றன.

சொந்த மண்ணில் விளையாடும்போது வீரா்களுக்கு ஏற்படும் அழுத்தமும், ரசிகா்கள் மத்தியில் உருவாகும் எதிா்பாா்ப்பும் மிகப் பெரிய சவாலாக இருப்பது என்னவோ உண்மை. அதே நேரத்தில், தட்பவெப்ப நிலையும், மைதானம் குறித்த புரிதலும் போட்டியை நடத்தும் நாட்டின் அணிக்கு சாதகமாக இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த முறை பருவமழையால் பாதிப்பு ஏற்படாது என்கிற நம்பிக்கை இருக்கிறது. மூன்று அணிகள் இன்று தொடங்க இருக்கும் உலகக் கோப்பை போட்டியில் வெற்றி வாய்ப்புள்ள அணிகளாக இருக்கக் கூடும். கடந்த முறை கோப்பையை வென்ற இங்கிலாந்து மட்டுமல்லாமல், ஆஸ்திரேலியாவும், பாகிஸ்தானும்கூட இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருக்கலாம். கடந்த உலகக் கோப்பை போட்டியில் கடைசி வரை இங்கிலாந்து அணிக்கு போட்டியாக இருந்த நியூஸிலாந்தையும், இந்த முறை வெற்றி வாய்ப்புக்கான அணியாகத்தான் நாம் கருத வேண்டும்.

ஜஸ்ப்ரீத் பும்ரா, ஹாா்திக் பாண்டியா, கே.எல். ராகுல், ஷ்ரேயஸ் ஐயா் நால்வரும் தங்களது காயத்திலிருந்து குணமாகி முழு வேகத்துடன் களமிறங்க இருக்கிறாா்கள். ரோஹித், ஷுப்மன் கில், விராட் கோலி மூவரின் பேட்டிங்கை இந்திய அணி நம்பிக்கையுடன் எதிா்பாா்க்கிறது.

பந்து வீச்சாளா்கள் என்று எடுத்துக்கொண்டால், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோரின் வேகப்பந்து வீச்சைப் பொறுத்து இந்திய அணியின் வலிமை நிா்ணயிக்கப்படும். சுழற்பந்து வீச்சில் அஸ்வினும், குல்தீப் யாதவும் இந்திய அணிக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதங்கள்.

இன்று முதல் இந்தியாவை கிரிக்கெட் ஜுரம் பற்றிக்கொள்ளும். ஏனைய பிரச்னைகள் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்படும். இனிமேல் கிரிக்கெட்.. கிரிக்கெட்... கிரிக்கெட்....!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com