உரைவீச்சும் ஒற்றுமையின்மையும்!

தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
உரைவீச்சும் ஒற்றுமையின்மையும்!

தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. வழக்கமாக எதிர்க்கட்சிகள்தான் தேர்தல் பரப்புரையை நிர்ணயித்து பிரசாரத்தை முழுவீச்சில் ஏற்படுத்துவது வழக்கம். 2014-இல் நரேந்திர மோடி பிரதமரானதற்குப் பிறகு, எதிர்க்கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி, திட்டமிட்டுக் கட்டமைத்த பிரசாரத்துடன் களம்காணும் புதிய உத்தி பாஜகவால் முன்னெடுக்கப்படுகிறது.

காங்கிரஸும் மற்ற கட்சிகளும் என்றிருந்த இந்திய அரசியலின் கடந்த நூற்றாண்டு நிலையிலிருந்து மாறி, பாஜகவும் மற்ற கட்சிகளும் என்கிற தலைகீழ் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஏனைய கட்சிகளைப் போலல்லாமல் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் களம் காணும் கட்சியாக நரேந்திர மோடி தலைமையிலான பாஜக உயர்ந்திருக்கும்போது, அதை எதிர்கொள்ள வேண்டிய காங்கிரஸ் தனது தேசிய அந்தஸ்தை தக்க வைத்துக்கொள்ள, மாநிலக் கட்சிகளுடனான கூட்டணியில் ஒருசில இடங்களுக்காக சமரசம் செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

பாஜக தன்னை முன்னிறுத்தி களம் காணும்போது சுதந்திர இந்தியாவை ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, மாநிலக் கட்சிகளின் கூட்டணி பலத்துடன் அதை எதிர்கொள்ள வேண்டிய வலுவிழந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது சற்று வேதனையாகத்தான் இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய மூன்றாவது பதவிக் காலத்துக்கான தேர்தல் களத்தின் பிரசாரத்தைத் திட்டமிட்டு உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் ஆரம்பித்திருக்கிறார். "ஊழலுக்கு எதிரான போரை மேற்கொண்டு வருகிறேன்' என்று தொடங்கிய அவரது உரையில், "ஊழலை வேரோடு அழிக்க உறுதி பூண்டுள்ள பாஜக கூட்டணிக்கும், ஊழல் தலைவர்களைப் பாதுகாக்கும் ‘இண்டியா' கூட்டணிக்கும் இடையிலான போட்டிதான் இந்தத் தேர்தல்” என்று பரப்புரையில் ஊழலை மையப்படுத்தி இருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்க மீரட்டை தேர்ந்தெடுத்ததற்கு ஒரு பின்னணி உண்டு. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, மீரட்டில் இதே மைதானத்தில் இருந்துதான் பிரதமர் வேட்பாளராக முதல் முதலில் களம் கண்டார் நரேந்திர மோடி. இந்திய விடுதலைக்கான முதலாவது போராட்டம் மங்கள் பாண்டேயால் மீரட்டில்தான் தொடங்கப்பட்டது என்பதை நினைவுபடுத்துவதாக அமைந்தது அது.

குறிப்பிட்ட வேட்பாளருக்கோ, திட்டத்துக்கோ அல்லது தனது கட்சிக்கோ வாக்களிக்கும்படி கேட்காமல் தன்னுடைய வலிமையான பேச்சாற்றலின் மூலம் புதியதொரு இலக்கை மீரட்டில் முன்மொழிந்திருக்கிறார் அவர். இந்தியாவின் நேரம் வந்துவிட்டது என்றும், வலிமையான முன்னேறிய இந்தியாவை உருவாக்குவதற்கான வாய்ப்பாக 2024 மக்களவைத் தேர்தல் அமைய வேண்டியதையும், அதற்கு ஊழல்வாதிகள் அகற்றப்பட வேண்டும் என்றும் தனது வலிமையான பேச்சாற்றலின் மூலம் பாஜகவின் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியிருக்கிறார் அவர்.

2014-இல் 11-ஆவது பொருளாதாரமாக இருந்த இந்தியாவை, கடந்த பத்து ஆண்டுகளில் 5-ஆவது இடத்துக்கு உயர்த்தி இருப்பதாகவும், 25 கோடி பேரை வறுமையின் பிடியிலிருந்து மீட்டிருப்பதாகவும், அனைவரையும் வறுமையிலிருந்து மீட்பதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் அவர் தனது உரையில் தெரிவித்தபோது, கூட்டம் கரகோஷம் எழுப்பியதில் வியப்பில்லை.

இப்போது மீண்டும் வெற்றிபெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்போம் என்கிற தன்னம்பிக்கையுடன் அவர் இருப்பதை மீரட் உரை தெரிவிக்கிறது. அடுத்தாற்போல் அமையப்போகும் தனது அரசின் முதலாவது 100 நாட்களுக்கான வளர்ச்சித் திட்டத்தை தயாரித்து இருப்பதாகவும், தனது தலைமையிலான அரசின் கவனக் குவிப்பு இப்போதைய தலைமுறையைப் பற்றியது மட்டுமல்லாமல், வருங்காலத் தலைமுறைகளைப் பற்றியதும்கூட என்று அவர் அறிவித்தார்.

தேர்தல் வெற்றியைப் பேச்சாற்றல் நிர்ணயிப்பதுபோல, வேறெதுவும் நிர்ணயிக்காது என்பது அனுபவம் உணர்த்தும் பாடம். பிரதமர் நரேந்திர மோடியின் வலிமையான முதலாவது தேர்தல் பரப்புரையை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் கடுமையான பிரயத்தனத்தில் இறங்க வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்கிறது பாஜகவின் மீரட் பொதுக்கூட்டமும் பிரதமரின் உரையும்.

பொதுவாக ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைவதுதான் வழக்கம். 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளால் ஏற்படுத்திக்கொள்ள முடியாத ஒற்றுமையை ஆளுங்கட்சியான பாஜக அக்கட்சிகளுக்கு உருவாக்கித் தர முற்பட்டிருக்கிறது.

மீரட்டில் பிரதமர் மோடியும், பாஜகவும் தங்களது தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் அதே வேளையில், தில்லி ராம் லீலா மைதானத்தில் எதிர்க்கட்சிகளின் "இண்டியா' கூட்டணியும் ஒரு பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆகிய இருவரின் அமலாக்கத் துறை கைதின் பின்னணியில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

"ஜனநாயகத்தைக் காக்க, மக்களவைத் தேர்தலில் பாஜவை மக்கள் வீழ்த்த வேண்டும்' என்பது "இண்டியா' கூட்டணிக் கட்சித் தலைவர்களின் அறைகூவல். "இண்டியா' கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமுகமாக நடைபெறாத மேற்கு வங்கம், பஞ்சாப், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகள் இணைந்து செயல்படாத நிலையில், அந்தக் கூட்டணியின் அறைகூவல் தொண்டர்களையும், வாக்காளர்களையும் எட்டுமா என்பது சந்தேகமாக இருக்கிறது.

1977-இல் ஜனதா கட்சிக்கு நாடு தழுவிய அளவில் காணப்பட்ட பேராதரவும், எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்ட ஒற்றுமையும் இப்போது இல்லாத நிலையில், "பாஜகவை வீழ்த்துங்கள்' கோஷம் ராம் லீலா மைதானத்துக்கு வெளியே ஒலிக்குமா என்பதுதான் கேள்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com