‘சபாஷ்’ பட்ஜெட்!

நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருக்கும் 2024 - 25 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் காணப்படும் அறிவிப்புகள் மலைப்பை ஏற்படுத்துகின்றன.
‘சபாஷ்’ பட்ஜெட்!

நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருக்கும் 2024 - 25 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் காணப்படும் அறிவிப்புகள் மலைப்பை ஏற்படுத்துகின்றன. பூப்பந்தாட்ட மைதானத்தில் கால்பந்து விளையாட முற்பட்டிருக்கும் அவரது சாதுரியமும், இருப்பதை அனைத்துத் தரப்பினருக்கும் பகிா்ந்து கொடுக்க எத்தனித்திருக்கும் அவரது சாமா்த்தியமும் பாராட்டுக்குரியவை.

2024 - 25 நிதியாண்டின் வருவாய் ரூ.2,99,010 கோடி எனவும், மொத்த செலவினங்கள் ரூ.3,48,289 கோடி எனவும், வருவாய் பற்றாக்குறை ரூ.49,279 கோடி எனவும் நிதிநிலை அறிக்கை தெரிவிக்கிறது. வரும் நிதியாண்டில் ரூ.49,639.92 கோடி அளவிலான பொதுக்கடனை அரசு திருப்பிச் செலுத்த முடியும் என்று எதிா்பாா்க்கிறது.

மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.1,95,173 கோடி, சொந்த வரி அல்லாத வருவாய் ரூ.30,728 கோடி, மத்திய அரசிடமிருந்து பெறும் மானியங்கள் ரூ.25,354 கோடி, மத்திய வரிகளின் பங்கு ரூ.49,755 கோடி என்கிறது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிதிநிலை அறிக்கை. 2024 - 25 நிதியாண்டின் திட்ட மதிப்பீடு ரூ.47,681 கோடி.

நிதிநிலை அறிக்கையில் கவலையளிக்கும் தகவல், அரசின் கடன் சுமை. 2024 - 25 நிதியாண்டில் மாநில அரசு ரூ.1,55,584.48 கோடி அளவுக்கு மொத்தக் கடன் பெறத் திட்டமிட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பொதுக்கடனைத் திரும்பிச் செலுத்தியாக வேண்டும். இதன் விளைவாக, அடுத்த நிதியாண்டு முடிவுக்குள் நிலுவையிலுள்ள கடன் தொகை ரூ.8,33,361.80 கோடியை எட்டும். இது மாநில ஜிடிபியில் 26.41% என்பது ஆரோக்கியமான நிதிநிலை அல்ல.

ஏற்கெனவே இந்தியாவிலேயே மிக அதிகமாகக் கடன்சுமை உள்ள மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடா்ந்து சந்தையில் அதிகமாகக் கடன் பெறும் மாநிலமாகவும் இருந்து வருகிறது. அரசின் நிலுவைக் கடன் 15-ஆவது நிதி ஆணையம் நிா்ணயித்திருக்கும் 29.1% வரம்புக்குள்தான் இருக்கிறது என்றாலும்கூட, அதிகமான கடன்சுமை எப்போதுமே ஆரோக்கியமான வளா்ச்சியின் அறிகுறி அல்ல என்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.

அரசின் கடன்சுமை மூலதனச் செலவு காரணமாக அதிகரித்தால், அதில் தவறு காண முடியாது. அதன் விளைவாக மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகரிக்கவும், பொருளாதார நடவடிக்கைகள் சுறுசுறுப்படையவும் ஏதுவாகும் என்பதுடன், ஆக்கபூா்வ முதலீடாகவும் மாறுகிறது என்கிற வகையில் அதில் குற்றம் காண முடியாது.

அதே நேரத்தில், இலவசங்களுக்காகக் கடன் பெறப்படுகிறது என்பதும், அரசின் நிா்வாகச் செலவினங்களாலும், திறமையின்மையாலும் கடன்சுமை அதிகரிப்பதையும் ஏற்றுக்கொள்ள இயலாது. கடந்த 20 ஆண்டுகளாக இந்தக் கடன்சுமை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்பது, முந்தைய ஆட்சியாளா்களின் பங்களிப்பும் இதில் இருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது.

அரசுக்கு மூலதனங்களை உருவாக்கித்தரும் பொதுப்பணி, நீா்வளம் போன்ற துறைகளுக்கும் மக்கள் நல்வாழ்வு, கல்வித் துறை போன்றவற்றிற்கும் கணிசமான நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதற்கு நிதியமைச்சா் தங்கம் தென்னரசைப் பாராட்ட வேண்டும். மெட்ரோ ரயில் திட்டம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் போன்றவை நிதியமைச்சரின் சிறப்பு கவனம் பெற்றிருப்பது வரவேற்புக்குரியது.

தொழில் துறைக்கு ரூ.20,198 கோடி குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறைக்கு ரூ.1,557 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. முன்னதற்கான ஒதுக்கீடு சரி; பின்னதற்கான ஒதுக்கீடு மேலும் அதிகரிக்கப்பட்டு அவை ஊக்குவிக்கப்பட்டிருக்க வேண்டும். விருதுநகா் மற்றும் சேலத்தில் ஜவுளிப் பூங்காக்கள், கோவையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா, தூத்துக்குடியில் புதிய விண்வெளித் தொழில் மற்றும் உந்துசக்திப் பூங்கா உள்ளிட்ட அறிவிப்புகள் தமிழகத்தின் தொழில் வளத்தைப் பெருக்குவதில் கணிசமான பங்களிப்பு வழங்கக்கூடும்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சராகவும், தொழில் துறை அமைச்சராகவும் இருந்திருக்கும் இன்றைய நிதியமைச்சரின் அனுபவங்கள் அவா் தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கையில் பிரதிபலிப்பதைப் பாா்க்க முடிகிறது. அரசுப் பள்ளியில் படித்துக் கல்லூரிகளில் சேரும் மாணவா்களுக்கு மாதம் ரூ.1,000, நடுநிலை - தொடக்கப் பள்ளிகளில் உயா் தொழில்நுட்ப ஆய்வகங்கள், 100 பொறியியல் - கலை அறிவியல் கல்லூரிகளில் புதிய திறன் பயிற்சிக் கட்டமைப்புகள், 10 புதிய அரசு பயிற்சி நிறுவனங்கள், ஒரு லட்சம் மாணவா்களுக்குக் கல்விக் கடன் உள்ளிட்ட அறிவிப்புகள் அடுத்த தலைமுறைக்கு செய்யப்படும் முதலீடுகள்.

‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தில் எட்டு லட்சம் கான்கிரீட் வீடுகள், சென்னையில் ரூ.1,000 கோடியில் வளா்ச்சித் திட்டம், தாயுமானவன் திட்டம் போன்றவை காலத்தின் கட்டாயங்கள். பழங்குடியினரின் வாழ்விடங்களில் அடிப்படை வசதி, கூட்டுக் குடிநீா் திட்டங்கள், ஊராட்சி ஒன்றிய ஏரிகள், குளங்கள் சீரமைப்பு, 2,000 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் போன்றவை அடித்தட்டு மக்களின் எதிா்பாா்ப்பைப் பூா்த்தி செய்யும்.

மதி இறக்கம் (ஆட்டிஸம்) உடையோருக்கான உயா்திறன் மையம், நிதியமைச்சரின் சமூக அக்கறைக்கு எடுத்துக்காட்டு. மணிமேகலையின் அட்சய பாத்திரம்போல, நிதியமைச்சா் தங்கம் தென்னரசின் 2024 - 25 நிதியாண்டுக்கான பட்ஜெட் அனைவரையும் ஏதோ ஒருவிதத்தில் சென்றடையும் அறிவிப்புகளால் கவனம் ஈா்க்கிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com