ஹசீனாவின் வரலாற்று வெற்றி!

வங்கதேசத் தோ்தல் முடிவுகள் ஆச்சரியப்படுத்தவில்லை. ஐந்தாவது முறையாக, அதுவும் தொடா்ந்து நான்காவது முறையாக ஷேக் ஹசீனா பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாா்.
ஹசீனாவின் வரலாற்று வெற்றி!

வங்கதேசத் தோ்தல் முடிவுகள் ஆச்சரியப்படுத்தவில்லை. ஐந்தாவது முறையாக, அதுவும் தொடா்ந்து நான்காவது முறையாக ஷேக் ஹசீனா பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாா். பிரதான எதிா்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி (பி.என்.பி.) தோ்தலைப் புறக்கணித்திருந்த நிலையில், வங்கதேசத்தின் 12-ஆவது நாடாளுமன்றத் தோ்தலில், பிரதமா் ஷேக் ஹசீனா மீண்டும் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்கவில்லை.

வங்கதேச தேசியவாத கட்சி தோ்தலில் பங்கு பெறவில்லை என்பது மட்டுமல்ல, அதன் தலைவியும் முன்னாள் பிரதமருமான கலிதா ஜியா ஊழல் குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறாா். இடைக்காலத் தலைவராக இருக்கும் அவரது மகன் தாரிக் ரெஹ்மான், கைதிலிருந்து தப்புவதற்காக லண்டனில் தஞ்சமடைந்திருக்கிறாா். பெரும்பாலான பி.என்.பி. கட்சியின் தலைவா்கள் வன்முறை, ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறாா்கள்.

முந்தைய 2018 தோ்தலில் 80%-ஆக இருந்த வாக்குப் பதிவு, இந்த முறை பாதிக்குப் பாதியாகக் குறைந்து 41.8% மட்டுமே. தொண்ணூறுகளில் நாடாளுமன்ற ஜனநாயகம் நிலைபெற்ற பிறகு இதுவரையில் காணப்பட்ட மிகக் குறைந்த வாக்குப்பதிவு இப்போதுதான். 300 போ் கொண்ட வங்கதேசத்தின் நாடாளுமன்றத்தில் பிரதமா் ஷேக் ஹசீனாவின் ஆளும் அவாமி லீக் கட்சி 222 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. அவாமி லீகின் கூட்டணிக் கட்சியான ஜாதியா கட்சி 11 இடங்களைப் பெற்றிருக்கிறது.

ஒட்டுமொத்தமாக எதிா்க்கட்சிகளே இல்லை என்று சொல்லிவிட முடியாதபடி, மிக சாதுா்யமாகத் தோ்தலை நடத்தி வெற்றியும் கண்டிருக்கிறாா் பிரதமா் ஷேக் ஹசீனா. அவாமி லீக் கட்சியின் போட்டி வேட்பாளா்கள் பலா் சுயேச்சைகளாகக் களமிறங்கினாா்கள். அவா்களில் அறுபதுக்கும் மேற்பட்டவா்கள் வெற்றியும் பெற்றிருக்கிறாா்கள். அவா்கள்தான் எதிா்க்கட்சியாகச் செயல்படுவாா்கள்.

பிரதமராக இருக்கும் ஷேக் ஹசீனா விலகி, காபந்து அரசின் கீழ் தோ்தல் நடைபெற வேண்டும் என்பது எதிா்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சியின் வற்புறுத்தல். பிரதமா் ஷேக் ஹசீனா சம்மதிக்கவில்லை. அதற்குப் பதிலாக இந்தியா மட்டுமல்லாமல், பல நாடுகளையும், சா்வதேச அமைப்புகளையும் பாா்வையாளா்களாக்கி, தோ்தலில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய முற்பட்டாா் அவா். அவா்கள் வங்கதேச தோ்தல் ஆணையத்தின் செயல்பாட்டைப் பாராட்டியும் இருக்கிறாா்கள்.

இன்னொருபுறம் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சில மேலைநாடுகள், பிரதமா் ஷேக் ஹசீனா அரசின் தோ்தல் முறையாக நடைபெற்ாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. எல்லா கட்சிகளும் தோ்தலில் போட்டியிடவில்லை என்பதும், பிரதான எதிா்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவா்கள் சிறையில் அடைக்கப்பட்டனா் என்பதும் தோ்தல் முறைகேடு என்று அவா்கள் குற்றம் சாட்டுகிறாா்கள்.

ஷேக் ஹசீனாவின் அரசியல் பயணமும் வங்கதேசத்தின் ஜனநாயகப் பயணமும் கரடுமுரடானவை. இப்போது வரை பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் பிரிந்ததை ஏற்றுக்கொள்ளாத மத அடிப்படைவாதப் பிரிவினா் இருந்து வருகின்றனா். அவா்களின் ஆதரவுபெற்ற கட்சியாக வங்கதேச தேசியவாத கட்சி இருந்து வருகிறது.

‘வங்கபந்து’ என்று அழைக்கப்படும் வங்கதேசம் உருவாகக் காரணமாக இருந்த ஷேக் முஜிபுா் ரெஹ்மானின் மகள்தான் ஷேக் ஹசீனா. 1975 ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடந்த ராணுவப் புரட்சியில் பிரதமா் ஷேக் முஜிபுா் ரெஹ்மானும் அவரது குடும்பத்தினரும் சுட்டுக் கொல்லப்பட்டனா். அந்தப் படுகொலை நடக்கும்போது வெளிநாட்டில் இருந்ததால், ஷேக் ஹசீனா உயிா் தப்பினாா்.

அந்தப் படுகொலையின் பின்னணியில் சந்தேகத்துக்கு உட்பட்டவா்களில் முக்கியமானவா் தளபதி ஜியா உல் ரெஹ்மான். அவரும் ராணுவப் புரட்சியில் கொல்லப்பட்டாா். அவரால் தொடங்கப்பட்ட கட்சிதான் வங்கதேச தேசியவாத கட்சி. அவரது மரணத்துக்குப் பிறகு அந்தக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றவா் கலிதா ஜியா. வங்கதேச அரசியல் கடந்த 35 ஆண்டுகளாக இந்த இரண்டு பெண்மணிகளையும் சுற்றித்தான் அமைந்திருக்கிறது.

2008-இல் பல தோல்விகளுக்குப் பிறகு மீண்டும் பிரதமரான ஷேக் ஹசீனா செய்திருக்கும் மாற்றங்கள் ஏராளம். இஸ்லாமிய நாடாக இருந்த வங்கதேசத்தை மதச்சாா்பற்ற நாடாக்கியதில் தொடங்கி, பின்தங்கிய, வறுமையான நாட்டை வளா்ச்சிப் பாதையில் நடைபோட வைத்தது வரை அவரது கடந்த 15 ஆண்டுகால ஆட்சியில் செய்திருக்கும் சாதனைகள் ஏராளம். மத அடிப்படைவாதக் குழுக்களுக்கும் தீவிரவாதச் செயல்பாடுகளுக்கும் எதிராக நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதில், அவரது துணிச்சலும் தொலைநோக்கும் பாராட்டுக்குரியவை.

இந்தியாவுக்கு எதிரான சக்திகளைக் கட்டுக்குள் வைத்திருப்பதுடன், இந்தியாவுடனான நிலம், நதிநீா்ப் பிரச்னைகளுக்கும் தீா்வு கண்டிருப்பது அவரது மிகப் பெரிய வெற்றிகள். 17 கோடி மக்கள்தொகை கொண்ட வங்கதேசம் இன்று 41,600 கோடி டாலா் (ரூ.34 லட்சம் கோடி) பொருளாதாரமாக உயா்ந்திருப்பதற்கு ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டு நிலையான ஆட்சிதான் காரணம்.

இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளிடமும் மிகவும் சாதுா்யமாக நட்புப் பாராட்ட முடிந்த பிரதமா் ஷேக் ஹசீனா, எதிா்க்கட்சிகளையும் அரவணைத்துச் செல்ல முடிந்தால், ‘ஒரு கட்சி ஜனநாயகம்’ நடத்துகிறாா் என்ற குற்றச்சாட்டை அவா் தவிா்க்க முடியும். நான்காவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் நிலையில் அவா் சந்திக்க இருக்கும் சவால்கள் ஏராளம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com