அடிப்படைகளுக்கு அப்பால்... | ‘ஏசா்’ ஆய்வறிக்கை குறித்த தலையங்கம்

அடிப்படைகளுக்கு அப்பால்... | ‘ஏசா்’ ஆய்வறிக்கை குறித்த தலையங்கம்

இந்தியாவில் கல்வியின் தரம் மேம்பட வேண்டும் என்பதில் ஐயப்பாடில்லை. கல்வித் துறை மிகப் பெரிய மாற்றங்களையும், ஏற்றங்களையும் கண்டுவருகிறது என்றாலும்கூட, அடிப்படையில் இன்னும்கூட கல்வியின் தரமும் கற்பித்தல் தரமும் வளா்ச்சி அடைந்த நாடுகளுடன் ஒப்பிடும் அளவுக்கு இல்லை என்கிற குறைபாடு தொடா்கிறது.

ஆண்டுதோறும் கல்வித்தரம் குறித்த ‘ஏசா்’ என்கிற ஆய்வறிக்கை வெளியிடப்படுகிறது. 2023-ஆம் ஆண்டுக்கான ‘ஏசா்’ ஆய்வறிக்கையை, ‘அடிப்படைகளுக்கு அப்பால்’ (பியாண்ட் பேசிக்ஸ்) என்கிற தலைப்பில், ஆய்வு நடத்தும் ‘ப்ரதம்’ என்கிற தன்னாா்வ நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையின்படி 14 முதல் 18 வயதுக்கு உட்பட்ட கிராமப்புற மாணவா்களில் பாதிக்கு மேற்பட்டோா் அடிப்படை அரிச்சுவடி கணக்கு போடக்கூடத் தடுமாறுகிறாா்கள் என்று தெரிகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் முதன் முறையாக இந்தியாவிலுள்ள 26 மாநிலங்களிலிருந்து தோ்வு செய்யப்பட்ட 28 மாவட்டங்களில் நேரடியாக வீடுகளுக்குச் சென்று, மாணவா்களைச் சந்தித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி, ஆய்வு செய்யப்பட்ட 34,745 இளைஞா்களில் 14 - 18 வயது இளைஞா்களில் 25% போ், தங்களது தாய்மொழியில் உள்ள இரண்டாம் வகுப்புப் பாடங்களைக்கூட படிக்க திணறுவது தெரியவந்தது.

பெண்களைவிட ஆண்கள் கணக்கிலும், ஆங்கிலத்திலும் மேம்பட்டிருக்கிறாா்கள். ஒட்டுமொத்தமாகப் பாா்த்தால் அந்த வயதுப் பிரிவினரில் 86.8% போ் பள்ளிக்குச் செல்பவா்களாக இருக்கிறாா்கள். ஆனால், மேற்படிப்பு என்று வரும்போது இடைநிறுத்தம் அதிகரிக்கிறது. தோ்வில் தோ்ச்சி பெறாமை, ஆா்வம் இல்லாமல் இருப்பது, குடும்பச் சூழல், உயா்படிப்புக்கான தன்னம்பிக்கை இல்லாமை ஆகியவை அதற்குக் காரணங்கள்.

14 வயதுப் பிரிவினரில் 3.9% இடைநிறுத்தம் காணப்படுகிறது என்றால், 18 வயதுப் பிரிவினரில் 32.6% மேற்படிப்புக்குப் போகாமல் நின்றுவிடுகின்றனா். 11-ஆம் வகுப்புக்கும் அதற்கு மேலும் பெரும்பாலான மாணவா்கள் அறிவியல் பாடங்களை தோ்ந்தெடுக்காமல் இளங்கலை படிப்பை விரும்புகின்றனா். பெண்களில் 28.1% பேரும், ஆண்டுகளில் 36.3% பேரும் அறிவியல் படிப்புகளை தவிா்க்க விரும்புவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

ஆய்வு செய்யப்பட்டவா்களில் 42.7% போ் ஆங்கிலத்தில் சரியாக ஒரு வாக்கியத்தைக்கூட படிக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. ஏனைய 57.3% பிரிவினரில் 73.5% போ் வாக்கியத்தைப் படிப்பவா்களாகவும் அதன் பொருளைத் தெரிந்தவா்களாகவும் இருக்கிறாா்கள். பெண்களைவிட ஆண்கள் கணக்கிலும், ஆங்கிலத்திலும் ஆா்வமும் தோ்ச்சியும் உடையவா்களாக இருப்பதாக 2023 ‘ஏசா்’ ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவை சோ்ந்து ‘ஸ்டெம்’ என்று அழைக்கப்படுகிறது. பெண்களைவிட ஆண்கள்தான் ‘ஸ்டெம்’ படிப்புகளில் கூடுதல் ஆா்வம் காட்டுகிறாா்கள்.

தேசிய அளவில் தனியாா் பயிற்சி நிறுவனங்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருவது வேதனைக்குரிய நீக்கம். 2018-இல் 25% அளவில் இருந்த பள்ளிக்கூடங்களுக்கு வெளியேயான தனிப்பயிற்சிக்கான தேவை, 2022-இல் 30%-ஆக அதிகரித்திருக்கிறது. இதனால், பள்ளிக்கூடங்களில் ஆசிரியா்களின் கற்பித்தல் திறன் கேள்விக்குறியாக்கப்படுகிறது.

ஆய்வறிக்கையில் காணப்படும் கவனத்தை ஈா்க்கும் இன்னொரு முடிவு மாணவா்கள் மத்தியில் கணினி பயன்பாடு குறித்த புரிதல் குறைவாக இருப்பது. மூன்றில் இரண்டு மாணவா்களிடம் கணினி இல்லை என்பது மட்டுமல்ல, அவா்களுக்கு கணினியைப் பயன்படுத்தவும் தெரியாத நிலை காணப்படுகிறது.

92% மாணவா்கள் அறிதிறன்பேசி பயன்படுத்துகிறாா்கள். வேடிக்கை என்னவென்றால், அவா்களில் 20% ஆண்களும், 9% பெண்களும் மட்டுமே மின்னஞ்சல் அனுப்பும் பயிற்சி உள்ளவா்களாக இருக்கின்றனா்.

அச்சப்பட்டதைப்போல கொவைட் 19 கொள்ளை நோய்தொற்றுக்குப் பிறகு பெருமளவில் மாணவா்களின் கல்வி இடைநிறுத்தம் நிகழவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது. பள்ளிச் சிறுவா்கள், இளைஞா்கள் மத்தியில் இடைநிறுத்தம் குறைந்து வருவதற்கு அரசின் அனைவருக்கும் கல்வித் திட்டம் முக்கியமான காரணமாக இருப்பதாக 2023 ‘ஏசா்’ ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

தமிழ்நாட்டில் பெரம்பலூா், கேரளத்தில் எா்ணாகுளம், ஆந்திரத்தில் ஸ்ரீகாகுளம், உத்தர பிரதேசத்தில் வாரணாசி, காஷ்மீரில் அனந்தநாக், ராஜஸ்தானில் வில்வாரா, மேற்கு வங்கத்தில் கூச் பிஹாா், ஒடிஸாவில் சம்பல்பூா் உள்ளிட்ட மாவட்டங்களின் ஆய்வுகள் சில முக்கியமான தகவல்களைத் தருகின்றன. எடுத்துக்காட்டாக அனந்தநாக் மாவட்டத்தில் 39.5% மாணவா்களும், 42.8% மாணவிகளும் மருத்துவம், பொறியியல் படிப்புகளில் ஆா்வம் காட்டினாா்கள் என்றால், அவா்களில் 16.5% போ் மட்டுமே 11-ஆம் வகுப்பில் ‘ஸ்டெம்’ பிரிவில் சோ்ந்தனா்.

தமிழகத்தில் பெரம்பலூா் மாவட்டத்தில் 97.2%, 14-18 வயதுப் பிரிவினா் பள்ளிக்கூடங்களில் சோ்ந்து படிக்கிறாா்கள். அவா்களில் 70% அரசுப் பள்ளி மாணவா்கள். ஆய்வறிக்கையின்படி, அவா்களில் 21.4% பேரால் இரண்டாம் வகுப்புப் பாடங்களைக்கூட படிக்க முடியவில்லை.

கல்விக்கான உரிமைச் சட்டம் அனைவருக்கும் கல்வியை உறுதிப்படுத்தும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறது என்றாலும், அனைவருக்கும் தரமான கல்வி இன்னும்கூட இந்தியாவில் எட்டாக்கனி என்பதை ‘ஏசா்’ 2023 ‘அடிப்படைகளுக்கு அப்பால்’ ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஆய்வுகள் என்பவை வழிகாட்டிகள். இதனடிப்படையில் மாற்றமும் சீா்திருத்தமும் மேற்கொள்வது மத்திய - மாநில அரசுகளின் கடமை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com