
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில், பிரதமர் நரேந்திர மோடி வியாழன் இரவு 7 மணி முதல் தியானத்தில் இருக்கிறார்.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, இந்தியா முழுவதும் சூறாவளி பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் கடைசி ஏழாவது கட்டத்தின் பிரசாரம் முடிந்ததைத் தொடர்ந்து, 45 மணி நேர தியானத்தை தொடங்கியுள்ளார்.
அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் நடந்த சர்வசமய மாநாட்டில் கலந்துகொள்ளச் செல்வதற்கு முன்னர், சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரி வந்தார். 1892-ஆம் ஆண்டு இதே பாறை மீது தொடர்ந்து மூன்று நாள்கள் தியானத்தில் ஆழ்ந்தபிறகு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
தனது பத்து ஆண்டு கால ஆட்சியை முடித்துக் கொண்டு மீண்டும் ஐந்தாண்டுக்கான ஆட்சிக்கு மக்களின் தீர்ப்பை எதிர்கொள்ள இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அதே இடத்தில் தியானத்தில் அமர்ந்துள்ளார்.
தியானம், யோகா உள்ளிட்டவற்றில் பிரதமர் ஈடுபடுபவர் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. சுவாமி விவேகானந்தரின் பூர்வாஸ்ர மப் பெயரான நரேந்திரனை தனது பெயராகக் கொண்டிருக்கும் பிரதம ருக்கு அவர் ஆன்மிக வழிகாட்டியாக இருப்பதில் வியப்பேதும் இல்லை.
206 பேரணிகள், பொதுக்கூட்டங்கள், சாலைவழிப் பிரசாரங்கள் என்று கடந்த ஒரு மாதத்தில் பிரதமர் இந்தியா முழுவதும் சுமார் 60 ஆயிரம் கி.மீ. சுற்றிச்சுழன்று பிரசாரத்தில் ஈடுபட்டதைப் பார்த்து உலகம் பிரமித்துப் போய் இருக்கிறது என்பதுதான் நிஜம். இந்த அசாத்திய ஆன்ம பலத்தை வேறு எந்த அரசியல் தலைவரிடமும் இதுநாள் வரை பார்த்ததில்லை என்பதும் மறுக்க இயலாத உண்மை.
பிரதமர் நரேந்திர மோடி தியானத்தில் அமர்வதும், விரதங்கள் மேற்கொள்வதும் புதிதொன்றும் அல்ல. அவற்றுக்குப் பின்னால் அரசியலும் கலந்திருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை. தன் மீது கவனக் குவிப்பை ஏற்படுத்தும் அவருடைய அரசியல் சாதுர்யத்தை வேறு எந்தவொரு அரசியல் தலைவரிடமும் பார்க்க இயலாது.
2014 ஏப். 24-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய ராசியான நாளல்ல என்று ஜோதிடர்கள் அன்றைய குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை எச்சரித்தார்கள். அதைப் புறந்தள்ளிவிட்டு போட்டியிடும் இரண்டாவது தொகுதியான வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்றார் நரேந்திர மோடி. மோடி.. மோடி.. மோடி..' என்கிற கோஷத்துக்கு நடுவில் பல்லாயிரக் கணக்கான தொண்டர்கள் புடைசூழ மூன்று கி.மீ. தொலைவு பேரணியாகச் சென்று வாரணாசி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் அவர். "வாரணாசிக்கு நானாகவோ, யாராவது சொல்லியோ வரவில்லை. என்னை தாய் கங்காதேவி அழைத்திருக்கிறார். அன்னையின் மடியில் இருக்கும் குழந்தைபோல, இப்போது நான் உணர்கிறேன்" என்று அவர் கூறியபோது, கூட்டம் ஆரவாரத்துடன் ஆர்ப்பரித்தது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்காக அவர் நடத்திய பேரணி, அனைத்துத் தொலைக்காட்சி சேனல்களிலும் நாள் முழுவதும் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டது. அன்று 11 மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலுமாக 117 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவு நடந்தது என்பதுதான் கவனிக்க வேண்டிய செய்தி.
2019 மே மாதம் 18-ஆம் தேதி நரேந்திர மோடி இமயமலையில் உள்ள கேதார்நாத் சென்றார். இப்போது போலவே ஏழு கட்டமாக நடந்த 17-ஆவது மக்களவைத் தேர்தலில் கடைசிக் கட்ட வாக்கெடுப்பு மே 19-ஆம் தேதி. மே 18-ஆம் தேதி முதல் கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் இமயமலையில் உள்ள கேதார்நாத் குகையில் தனது தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தியானத்தில் அமர்ந்தார். அனைத்துத் தொலைகாட்சி சேனல்களிலும் அது பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டது.
உலகளாவிய அளவில் யோகாவைக் கொண்டு சேர்த்தவர் என்று பாராட்டப்படும் நரேந்திர மோடி குறித்த இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட வேண்டும்.
2014 செப். 26-ஆம் தேதி அமெரிக்காவுக்கான தனது ஐந்து நாள் முதலாவது அரசுமுறை பயணத்தைத் தொடங்குகிறார் பிரதமர் மோடி. கடந்த 45 ஆண்டுகளாக நவராத்திரி பண்டிகையின்போது, விரதம் இருப்பவர் அவர். திரவ உணவு அல்லாமல் வேறு எதுவும் உட்கொள்வதில்லை. நவராத்திரி விரதத்துடன் கொஞ்சம் கூட தளர்வோ, சோர்வோ இல்லாமல் மேடிசன் ஸ்கொயர் மைதானத்தில் ஆயிரக்கணக்கான அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியில் அவர் உரையாற்றியதும், பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டதும், அதிபர் ஒபாமாவின் வெள்ளை மாளிகை விருந்தில் பழச்சாறு மட்டுமே அருந்தியதும் சர்வதேச ஊடகங்களில் வியந்து பேசப்பட்டன.
பிரதமர் நரேந்திர மோடியின் விவேகானந்தர் மண்டப தியானம் விமர்சிக்கப்படுவதில் அர்த்தமில்லை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-இல் பலகட்ட தேர்தல் நடைபெறும்போது, தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் மட்டுமே பிரசாரத்துக்குத் தடை இருக்கிறது. அது மட்டுமல்ல; தேர்தல் நடத்தை விதிகளுக்கு அரசியல் சாசன அங்கீகாரமோ, சட்ட அடிப்படையோ கிடையாது.
1960-களில் கேரள மாநிலத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் இணைந்து உருவாக்கிய நடத்தை விதிகள்தான் இவை. 1968 செப்டம்பர் 26-ஆம் தேதி கேரளத்தில் நடந்த இடைத் தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட அந்த விதிமுறைகள் 1979, 1982, 1991, 2013 என்று அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு, இப்போது பின்பற்றப்பட்டு வருகின்றன.
இதெல்லாம் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரியாதா என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.