
ஒருபுறம் பூரண மதுவிலக்குத் தேவை என்று பரவலாக வலியுறுத்தப்படும்போது, இன்னொரு புறம் கள்ளச்சாராய உயிரிழப்புகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. மதுவிலக்கு கொண்டு வரப்பட்டால், கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடும் என்கிற வாதம் இதன்மூலம் பொய்யாக்கப்படுகிறது. கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதற்கு நிர்வாகத்தின் திறமையின்மையும் அக்கறையின்மையும்தான் காரணமே தவிர, மதுவிலக்கு அல்ல.
கள்ளக்குறிச்சியிலும், அருகே உள்ள மாதவச்சேரியிலும் கள்ளச்சாராயம் குடித்து 40 பேர் உயிரிழந்திருப்பது தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி மருத்துவமனைகளில் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக் கூடும்.
தமிழக அரசு உடனடியாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. கள்ளச்சாராய வியாபாரிகளான ஒரு பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழப்பு சம்பவத்துக்கு கள்ளச்சாராயம் காரணம் அல்ல என்று கூறிய மாவட்ட ஆட்சியர் ஷ்ரவண்குமார் ஜடாவத் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா, கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட காவல் துறையினர் 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 200 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு, தடய அறிவியல் ஆய்வுக் கூடத்தில் சோதனை செய்யப்பட்டதில் சாராயத்தில் மெத்தனால் கலந்துள்ளது தெரியவந்துள்ளது. தொழிற்சாலை பயன்பாட்டுக்கான மெத்தனால் மிக எளிதாக அனைவருக்கும் கிடைக்கிறது. மலிவு விலையில் கிடைப்பதால் அதில் தண்ணீரைக் கலந்து சட்டவிரோதமாக விற்பனை செய்கின்றனர்.
மெத்தனால் கலந்த சாராயம் என்பது கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றை உடனடியாகப் பாதிக்கிறது. ஒரு வேளை இதிலிருந்து மீண்டாலும் பலருக்குப் பார்வை பறிபோய்விடுகிறது. இதுபோன்று பாதிக்கப்படுபவர்கள் அனைவரும் ஏழைகள் என்பதால் அவர்களது குடும்பங்கள் நிர்க்கதியாகி விடுகின்றன.
இந்தியாவில் குஜராத், பிகார், ஒருசில வடகிழக்கு மாநிலங்களில் மட்டும்தான் பூரண மதுவிலக்கு அமலில் இருக்கிறது. மதுவிலக்கு அமலில் இருக்கும் அந்த மாநிலங்களில் கள்ளச்சாராயம் விற்பனையாகிறது என்பதும் அவ்வப்போது கள்ளச்சாராயம் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்பதும் உண்மை. மாநில அரசுகள் கள்ளச்சாராயத்துக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதாகக் கூறினாலும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
தமிழகத்திலும்கூட, விழுப்புரம் மாவட்டம், எக்கியார்குப்பத்தில் கடந்த 2023 மே 13-ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்ததில் ஒரு பெண் உள்பட 22 பேர் உயிரிழந்தனர்.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது தற்காலிகமாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்குப் பிறகு கால ஓட்டத்தில் மறக்கப்படுகிறது.
இந்தச் சூழலில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று சில அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுப்பது பொறுப்பின்மையின் உச்சம். உயிரிழந்தவர்கள் அனைவரும் ஏழைகள் என்பதும் மிகுந்த அனுதாபத்துக்கு உரியவர்கள் என்பதிலும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. ஆனால், உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கப்படுவது அனுதாபத்தின் அடிப்படையிலானதாக இருந்தாலும் தவறான முன்னுதாரணம்.
தமிழகத்தில் டாஸ்மாக் எனப்படும் 5,329 சில்லறை மது விற்பனைக் கடைகள் உள்ளன. அவை மட்டுமல்லாமல், அவற்றுடன் 3,240 மது அருந்தும் கூடங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. அப்படி இருந்தும் கள்ளச்சாராயம் விற்பனையாவதும் பலர் அதை வாங்கி அருந்துவதும் ஏன் என்கிற கேள்வி எழுகிறது.
இதற்கு இரண்டு காரணங்களைக் குறிப்பிடலாம். முதலாவது காரணம் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் விலை ஏழை, எளிய மக்களின் சக்திக்கு ஏற்றதாக இல்லை. போதைக்கு அடிமையாகிவிட்ட காரணத்தால், அவர்கள் மலிவான கள்ளச்சாராயத்தை நாடுகின்றனர்.
இரண்டாவதாக, தனியார் வசம் ஏலத்தின் மூலம் மதுபானக் கடைகள் இருந்தபோது, காவல் துறையினருக்கு கடை உரிமையாளர்கள் மாமூல் வழங்கி, அவர்களது பகுதியில் சாராயம் விற்காமல் பார்த்துக்கொண்டனர். அரசே மதுபான விற்பனையில் ஈடுபட்ட பிறகு, மாமூல் கிடைக்காத காவல் துறையினரின் ஒத்துழைப்புடன்தான் ஆங்காங்கே கள்ளச்சாராயம் தயாரிக்கப்படுவதும், விற்கப்படுவதும் நடந்திருக்கிறது என்பது ஊரறிந்த உண்மை. மாவட்ட காவல் துறை உயரதிகாரிகள் கண்டிப்பாக இருக்கும் இடங்களில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதில்லை என்பது விவரம் அறிந்தவர்களுக்குத் தெரியும்.
கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு, அரசு அதிகாரிகள், காவல் துறையினரில் யார் பொறுப்பாளிகள் என்பது கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியிருப்பதுபோல, கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் கள்ளச்சாராயத்தைத் தடுக்க வேண்டிய அதிகாரிகளே தவிர கள்ளச்சாராய விற்பனையாளர்கள் மட்டுமே அல்ல.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.