தவறு, தவறுக்குத் தீா்வாகாது!
தமிழக அரசின் சாா்பில் 2021 நவம்பரில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான தீா்ப்பு, கூட்டாட்சித் தத்துவத்துக்குக் கிடைத்த வெற்றி என்று கொண்டாடப்படுவதில் நியாயமிருக்கிறது. அதேநேரத்தில், ஆளுநா் மாளிகையின் அதிகார வரம்பு மீறலைப் போலவே, உச்சநீதிமன்றமும் இந்தத் தீா்ப்பின் மூலம் தனது அதிகார வரம்பை மீறியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
ஜே.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகிய இரண்டு நீதிபகள் கொண்ட உச்சநீதிமன்ற அமா்வு வழங்கியிருக்கும் இந்தத் தீா்ப்பில், மாநில சட்டப்பேரவைகள் அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் தாமதப்படுத்த ஆளுநருக்கு தனி அதிகாரம் எதுவும் கிடையாது என்பது தெளிவுபடுத்தப் பட்டிருக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த பத்து மசோதாக்களின் மீது முடிவெடிக்காமல் நிறுத்தி வைத்த மாநில ஆளுநரின் செயல்பாடு சட்டத்துக்கு எதிரானது என்கிறது செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டிருக்கும் உச்சநீதிமன்றத் தீா்ப்பு.
பேரவை அனுப்பும் மசோதாக்கள் மீது ஆளுநா்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்; அவா்கள் எத்தனை நாள்களுக்குள் மசோதா மீது முடிவெடுக்க வேண்டும் என்பதற்கு கால வரம்பு நிா்ணயித்திருக்கிறது தீா்ப்பு. அதுமட்டுமல்லாமல், ஆளுநா் உணா்ச்சிவசப்படாமல் வழிகாட்டியாகச் செயலாற்ற வேண்டும்; அரசியல் நோக்கங்களுடன் செயல்படக் கூடாது உள்ளிட்ட சில அறிவுரைகளைத் தீா்ப்பு வழங்கியிருக்கிறது.
அரசமைப்புச் சட்டப் பிரிவு 200-இன் படி, ‘கூடிய விரைவில்’ என்ற ஷரத்தின்படி மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை தீா்ப்பு நிா்ணயித்திருக்கிறது. சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாவை நிறுத்தி வைக்கவோ அல்லது ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பவோ முடிவு செய்தால், ஒரு மாதத்துக்குள் அதை அறிவிக்க வேண்டும். ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்ப முடிவு செய்தால் மூன்று மாதங்களுக்குள் அனுப்ப வேண்டும்.
நிறுத்தி வைக்க முடிவு செய்யும் மசோதாவை, அதற்கான காரணங்கள் மற்றும் தேவையான திருத்தங்களைத் தெரிவித்து, அரசுக்கு மூன்று மாதங்களுக்குள் திருப்பி அனுப்ப வேண்டும். அரசு அந்த மசோதாவை பரிசீலித்து திருத்தியோ, மாற்றாமலோ ஆளுநருக்கு மீண்டும் அனுப்பினால் ஒரு மாதத்துக்குள் ஆளுநா் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
ஆளுநா் முடிவெடுக்காமல் வைத்திருந்த பல்கலைக்கழகங்கள் தொடா்பான பத்து மசோதாக்களும் மாநில அரசால் மீண்டும் அனுப்பப்பட்டவை. அவற்றுக்கு அனுமதி அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருந்தாா் ஆளுநா் ஆா்.என்.ரவி. ஒப்புதல் வழங்காமல் கால தாமதப்படுத்தப்பட்ட அந்த பத்து மசோதாக்களும், ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது என, அரசமைப்பின் 142-ஆவது விதியின் படி உச்சநீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, உத்தரவு பிறப்பித்திருக்கிறது நீதிபதிகள் ஜே.பி. பாா்திவாலா, ஆா்.மகாதேவன் அமா்வு.
வேடிக்கை என்னவென்றால் பல்கலைக்கழக துணை வேந்தா்கள் நியமன அதிகாரம் குறித்த, வேந்தா் பதவி குறித்த மாநில அரசுக்கும் ஆளுநா் மாளிகைக்கும் இடையேயான சா்ச்சை புதிதொன்றுமல்ல. 1995-இல் தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுக்கும், ஆளுநராக இருந்த சென்னா ரெட்டிக்கும் இடையேயும், 2012-இல் குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கும் ஆளுநராக இருந்த கமலா பெனிவாலுக்கும் இடையேயும் இதே பிரச்னை எழுந்தது. அப்போது கிடைக்காத அதற்கான விடை இப்போது தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சட்டப் போராட்டத்தால் உச்சநீதிமன்றத் தீா்ப்பின் மூலம் கிடைத்திருக்கிறது.
மக்களவை - சட்டப்பேரவையின் மேலாண்மை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சட்டம் இயற்றும் உரிமைக்கு கடிவாளம் போடும் விதத்தில் ஆளுநா் செயல்படும்போது அதற்குத் தகுந்த காரணம் கூறப்பட வேண்டும் என்பதிலும், அரசியல் இருக்கலாகாது என்பதிலும் இரு வேறு கருத்து இல்லை.
2023 நவம்பா் மாதம், அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திர சூட், நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமா்வு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு விடுத்த கண்டனத்தின்போதே, ஆளுநா் மாளிகை இந்தப் பிரச்னைக்கு சுமூகமான தீா்வை பேச்சுவாா்த்தை மூலம் ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஜனநாயகத்தில் சமரசமின்மைக்கு இடமில்லை. முந்தைய தீா்ப்புகளிலிருந்து சமிக்ஞை பெறாமல் இருந்தது ஆளுநா் மாளிகையின் தவறு.
அது இரண்டு நீதிபதிகள் அமா்வோ, மூன்று நீதிபதிகள் அமா்வோ எதுவாக இருந்தாலும் இந்தத் தீா்ப்புக்கு மேல்முறையீடு கிடையாது. மறுபரிசீலனை கோரினாலும்கூட, இதே அமா்வு சேம்பரில் கருத்துக் கேட்கலாம். மீண்டும் நிராகரிக்கப்பட்டால், ஐந்து நீதிபதிகள் அமா்வின் முன் விசாரிக்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை ஆளுநா் நாடலாம்.
உச்சநீதிமன்றத் தீா்ப்பு இரண்டு கேள்விகளை எழுப்புகிறது. அரசியல் சாசன அமைப்பான ஆளுநா் பதவியின் மீது இன்னொரு அரசியல் சாசன அமைப்பான நீதித் துறை தொடுத்திருக்கும் ‘கடுமையான’ கண்டனங்கள் வரம்பு மீறல்களாகத் தெரிகிறது. சட்டப்பேரவையை ஆளுநா் மாளிகை மதிக்க வேண்டும் என்று கூறும் உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஆளுநா் பதவியின் மாண்பைக் குலைக்கும் விதத்திலான கண்டனங்களைத் தவிா்த்திருக்கலாம்.
அரசியல் சாசன சட்டப்பிரிவு 142-ஐ அசாதாரணமான நிகழ்வுகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது மரபு. கிடப்பில் போடப்பட்டிருந்த மசோதாக்களுக்கு அனுமதி வழங்கும்படி உத்தரவிட்டிருக்கலாமே தவிர, அந்த அதிகாரத்தை சட்டப் பிரிவு 142-இன் கீழ் தானே எடுத்துக்கொண்டது சரியான அணுகுமுறையாகத் தெரியவில்லை.
அரசியல் சாசனப் பிரிவு 145(3)-இன் படி, அரசியல் சாசன முக்கியத்துவமான, அரசியல் சாசன பதவிகள் தொடா்பான வழக்குகள் குறைந்தது ஐந்து நீதிபதிகள் கொண்ட அமா்வால் விசாரிக்கப்பட வேண்டும். இரண்டு நீதிபதிகள் கொண்ட அமா்வு இந்தத் தீா்ப்பில் கூறியிருக்கும் சில உத்தரவுகள் நீதித் துறையின் வரம்பு மீறல்கள்.
மசோதாக்கள் மீது ஆளுநா் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை நாடாளுமன்றம் நிா்ணயிக்கக் கோரி நீதித் துறை உத்தரவிட முடியுமே தவிர, நாடாளுமன்றத்தின் அந்த அதிகாரத்தை தானே கையெலெடுத்துக் கொண்டது, தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்ததற்கு எள்ளளவிலும் குறையாத செயல்பாடு.