
கோடை வெயில் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இரவு நேரங்களில் வெப்பம் 17 டிகிரி செல்சியஸில் இருந்து 25 முதல் 27 டிகிரி செல்சியஸாகவும், பகலில் 30-32 டிகிரி செல்சியஸில் இருந்து 35-37 டிகிரி செல்சியஸாகவும் உயர்ந்துள்ளது. முதியோர், குழந்தைகள், உடல்நலம் பாதிக்கப்பட்டோர் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
நீர்ச்சத்து இழப்பைத் தவிர்க்க தேவையான தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். வெப்ப அலை பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது. இன்னும் இரண்டு மாதங்கள் கோடைக்காலம்தான் என்ற நிலையில், வனம், மலைப் பகுதிகளில் வசிக்கும் விலங்குகளும் வறட்சியைச் சமாளிக்க முடியாமல் தவிக்கின்றன.
மலைகளில் குட்டைகள் வறண்டு, மான் உள்ளிட்ட உயிரினங்கள் தண்ணீர் தேடி மலையடிவார கிராமங்களை நோக்கி வரத் தொடங்கி விட்டன. இதில் மான்கள் நாய்களிடம் சிக்கியும், சாலையைக் கடக்கும்போது வாகனங்களில் சிக்கியும் உயிரிழப்பது தொடர்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,501 சதுர கி.மீ. பரப்பு கொண்ட ஒசூர் வனக் கோட்டத்துக்கு கோடைக்காலத்தில் கர்நாடகத்தின் பன்னர்கட்டாவிலிருந்து 200-க்கும் மேற்பட்ட யானைகள் இடம்பெயர்ந்து வரும். அந்த யானைகள் மீண்டும் கர்நாடக வனப் பகுதிக்குச் செல்லாமல் தளி, தேன்கனிக்கோட்டை, சானமாவு வனப் பகுதிகளில் தங்கி அருகே உள்ள விளைநிலங்களை சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது.
கொடைக்கானல், உதகை உள்ளிட்ட மலைப்பகுதி சுற்றுலாத் தலங்களில் தண்ணீர்தேடி காட்டெருமைகள் குடியிருப்புப் பகுதிகள், சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களுக்கு வருகின்றன. அவற்றை விரட்டும்போது, மனித-விலங்கு மோதல்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.
திருவண்ணாமலை மலையில் இருந்து கோடையில் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் மான்கள், குரங்குகள் கிரிவலப் பாதைக்கு வருகின்றன. அவற்றுக்கு அந்த வழியாக செல்லும் பக்தர்கள் காய்கறிகள், தின்பண்டங்களைக் கொடுக்கின்றனர். விவசாய நிலங்களில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரைப் பருகி வன விலங்குகள் தாகம் தணிக்கின்றன. இதில் கிணற்றுக்குள் விழுந்து மான்கள் உயிரிழப்பு தொடர்கிறது.
குரங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. சிலர் குரங்குகளைத் தாக்குவதால் அவை ஊனமடைகின்றன. மலைப் பகுதிகளில் இருந்து சமதளப் பகுதிக்கு இறங்கி வரும் விலங்குகளுக்கு சுற்றுலாப் பயணிகள் உணவு அளிக்கின்றனர். இதனால், அவற்றின் இரை தேடும் குணம் மறைந்து வருவதாகவும் விலங்கு ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
வன விலங்குகள் இரை, தண்ணீர் தேடிவனப் பகுதிகளைவிட்டு வெளியே வருகின்றன. குறிப்பாக, பலாப்பழம் போன்ற பழ வகைகளைச் சாப்பிட விளைநிலங்களுக்கு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதைத் தடுக்க, பலா மரங்களையும், கிழங்கு வகைகளையும் வனப் பகுதிகளிலேயே வளர்த்தால், அவற்றை வன விலங்குகள் சாப்பிடும். இதற்காக விளைநிலப் பகுதிகளுக்கு வராது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி கேள்வி நேரத்தின்போது, பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி கேட்டுக் கொண்டார்.
இதற்குப் பதிலளித்த மாநில வனத் துறை அமைச்சர் க.பொன்முடி, வன விலங்குகள் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வராமல் இருக்க பல்வேறு இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
வனப் பகுதியில் ஓடைகள், ஆறுகளில் தண்ணீர் குறையத் தொடங்கியதும் அங்கு தண்ணீர் தொட்டி அமைத்தல், ஆழ்துளைக் கிணறு அமைத்து அதன் மூலம் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புதல், கசிவு நீர் குட்டை கட்டுதல், தடுப்பணை கட்டுதல், பழுதடைந்த கசிவு நீர் குட்டையைப் புதுப்பித்தல் போன்ற பணிகள் வனத்துறை சார்பில் செய்யப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி காப்புக் காட்டுக்குள் தீவனத் தோட்டமும் அமைக்கப்படுகின்றன.
வனங்கள், அங்கு வாழும் உயிரினங்களின் இருப்பிடங்களை அழிப்பது வரைமுறையில்லாமல் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதையும் மறுக்க முடியாது. கனிம வளங்களுக்காகவும், சுரங்கங்கள் வெட்டும்போதும், பல்வேறு பணிகளுக்காக நிலங்களைக் கையகப்படுத்தும்போதும் அங்குள்ள வனப் பகுதிகள் அழிக்கப்படுகின்றன. வளர்ச்சி என்ற அடிப்படையில், வனங்கள் அழிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும்.
வன எல்லைகளில் முறையாக அகழி வெட்டப்பட்டால் விலங்குகளின் வருகை குறையும் வாய்ப்புள்ளது. விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை விரட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அறுவடைக் காலங்களில் வன எல்லையில் வனத் துறையினர் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
புல்வெளிகளும், புதர்களும் அழிக்கப்படும்போது, சிறு விலங்குகளும் அழிகின்றன. எனவே, அவற்றை வேட்டையாடி உண்ணும் சிறுத்தைகள் பசிக்காக இரை தேடி மலைக் கிராமங்களில் புகுந்து ஆடு, கோழிகளை வேட்டையாடிச் செல்கின்றன.
சமூகக் காடுகளை வளர்த்தும், காடுகளைப் பாதுகாத்து விரிவுபடுத்தியும், வனவிலங்குகளின் வாழ்விடங்கள், வழித்தடங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும், அவற்றின் தாகத்தைத் தணிக்கத் தண்ணீர் தொட்டிகள் அமைத்தும் அவை வனத்தை விட்டு வெளியே வருவது தடுக்கப்பட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.