
விளையாட்டுப் போட்டிகளில் சூதாட்டம் அதிகரித்துவரும் நிலையில், மாநில, தேசிய, சர்வதேச அளவில் இளையோருக்கான போட்டிகளில் வயதைக் குறைத்து போலி ஆவணங்களைக் கொடுத்து பங்கேற்கும் போக்கு பல இளம் வீரர்களின் வாய்ப்பை தட்டிப் பறிக்கும் வகையில் உள்ளது.
2015-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட், வயது மோசடி குறித்த கருத்தை வெளியிட்டார். 'பெற்றோரும், பயிற்சியாளரும் இணைந்து இளம் விளையாட்டு வீரரின் வயது தொடர்பான ஆவணத்தை போலியாகப் பெற்று சமர்ப்பிப்பது, பிற்காலத்தில் அந்த வீரரை சூதாட்டம் போன்ற மோசடிக்கு துணைநிற்க வழிவகுக்காதா?' என்று கேள்வியெழுப்பினார்.
2018-இல் 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற மன்ஜோத் கர்லா வயது தொடர்பாக மோசடி ஆவணங்களைச் சமர்ப்பித்து அணியில் இடம்பிடித்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஓராண்டு விளையாடவும் தடை விதிக்கப்பட்டது.
2020 கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் போலியான வயதுச் சான்றிதழை அளித்ததாக 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இந்தப் பட்டியலில் ஹரியாணா, பஞ்சாப் வீரர்கள் அதிக அளவில் இடம்பெற்றிருந்தனர்.
இதுபோன்ற மோசடியில் ஈடுபடுவதை பயிற்சியாளர்கள் பலரும் பொருட்படுத்துவதில்லை என்பதுடன் ஊக்குவிக்கவும் செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டுமன்றி, சர்வதேச அளவிலும் இதுபோன்ற மோசடிகள் நடைபெறுகின்றன.
மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெறும் 18 வயதுக்குள்பட்ட வீரர்களுக்கு கல்வி, அரசு, பொதுத் துறை நிறுவன வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 'கேலோ இந்தியா' போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு எட்டு ஆண்டுகளுக்கு ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படுகிறது. இதற்காகவும்கூட, இதுபோன்ற வயது மோசடிகள் நடைபெறுகின்றன.
இளையோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் நிர்ணயிக்கப்பட்ட வயதைக் கடந்த வீரர்கள் போலிச் சான்றிதழ்களை அளித்து பங்கேற்கும் மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, தவறான வயதைப் பதிவு செய்து மோசடியில் ஈடுபடுவோருக்கு எதிரான வரைவு தேசிய சட்டம்-2025 மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தால் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகள், பரிந்துரைகள் வரவேற்கப்பட்டிருக்கின்றன.
வயது சரிபார்ப்பின்போது, மூன்று கட்டாய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அவை சரிபார்க்கப்பட்ட பிறகு, அந்த விளையாட்டு வீரரின் வயது விவரம், எண்ம தரவுத்தளத்தில் பாதுகாப்பாக பதிவு செய்யப்படும். வயது முரண்பாடுகள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு இடது கை மணிக்கட்டில் டி.டபிள்யூ3 முறையில் எலும்பு சோதனை, எம்ஆர்ஐ ஸ்கேன், பொது உடல், பல் பரிசோதனைகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் செய்யப்படும்.
வயது விதிமீறலில் முதல்முறையாக ஈடுபட்டு குற்றம் நிரூபணமான விளையாட்டு வீரர் அனைத்துப் போட்டிகளில் பங்கேற்கவும் 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படும். அவர்கள் பெற்ற பட்டங்கள், பதக்கங்கள் பறிமுதல் செய்யப்படும். இரண்டாவது முறையும் இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும். இதற்கு துணைபோகும் பயிற்சியாளர்கள், அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் பொறுப்புகளில் இருந்தும் தடை செய்யப்படுவார்கள்.
குற்றம் நிரூபணமான வீரர்கள் சரியான வயதைத் தானே முன்வந்து அளித்தால், ஒருமுறை பொது மன்னிப்பு அளிக்கப்படும்; பரிசோதனை முடிவுகளில் அதிருப்தியடையும் வீரர்கள் பிராந்திய, மத்திய மேல்முறையீட்டுக் குழுவை அணுகலாம்.
வெற்றிகரமான சரிபார்ப்புகளைத் தொடர்ந்து, விளையாட்டு வீரர்களுக்கு கியூ.ஆர். குறியீடுகளுடன் கூடிய அடையாள அட்டை டிஜி-லாக்கர் தளத்தின் எண்ம முறையில் வழங்கப்படும்; அனைத்து விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும்போதும், கட்டாயம் இதை பரிசோதனைக்குக் காட்ட வேண்டும் உள்ளிட்ட 10 வரைவு விதிகள் இடம்பெற்றுள்ளன.
வயது சரிபார்ப்புக்காக பள்ளி மதிப்பெண் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், ஆதரவற்றோர் இல்ல பிரமாண பத்திரங்கள் போன்ற முன்னர் பயன்படுத்திய ஆவணங்களை மீண்டும் பயன்படுத்தாமல், இந்தியாவின் எண்ம தரவுதளத்துக்கு உள்பட்ட ஆதார், டிஜி லாக்கர், கியூ குறியீட்டுடன் கூடிய பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை வயது சரிபார்ப்புக்குப் பயன்படுத்த வேண்டும். எண்ம அடிப்படையில் சரிபார்க்கப்பட்ட ஆவணங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
போட்டிகளில் விளையாட்டு வீரர்கள் தங்களைப் பதிவு செய்துகொள்ளும்போது, வங்கியில் வாடிக்கையாளர் விவரங்களைச் சரிபார்ப்பது போல அவர்களின் விரல்ரேகையைக் கொண்டு எண்ம முறையில் சரிபார்க்க வேண்டும். வயது மோசடியில் ஈடுபட்டது பின்னாளில் தெரிய வந்தால், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிவாய்ப்பு பெற்று பணியாற்றிக் கொண்டிருந்தாலும் அவர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டும். மேலும், வேலையில் சேர்வதற்கு முன்னதாக, எண்ம முறையில் அவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட வேண்டும்.
இவையும்கூட வரைவு தேசிய சட்டத்தின் அம்சங்களில் சேர்க்கப்பட வேண்டும். விளையாட்டு அமைச்சகத்தின் இந்த வரைவு தேசிய சட்டம் பாராட்டுக்குரிய நல்ல தொடக்கம். சர்வதேச அளவிலான போட்டிகளில் தவறான தகவல்களை வழங்கி பங்குபெறும் விளையாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறார்கள். பல இளைஞர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. அதற்கு முற்றுப்புள்ளி விழும் என்று எதிர்பார்ப்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.