
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோர் இடையேயான நேரடிச் சந்திப்பு ஆக.15-ஆம் தேதி அமெரிக்காவின் அலாஸ்காவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சந்திப்பு மூன்று ஆண்டுகளைக் கடந்து நீடித்துவரும் உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்குக் கொண்டுவரும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 10 ஆண்டுகளுக்குப் பின்னர் புதின் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதும் முக்கியத்துவம் பெறுகிறது.
அலாஸ்காவின் கிழக்கு எல்லை ரஷியாவின் மேற்கு எல்லையிலிருந்து இரண்டு மைல் தொலைவில்தான் இருக்கிறது.1867-இல் ரஷியாவுக்கு 7.2 மில்லியன் டாலர் கொடுத்து அலாஸ்காவை சொந்தமாக்கிக்கொண்டது அமெரிக்கா. சர்வதேச நீதிமன்றத்தால் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் அதிபர் புதின் வேறு எந்த நாட்டின் வழியாகவும் பயணிக்காமல் நேரடியாக வந்துவிட முடியும் என்பதால் பேச்சுவார்த்தைக்கு அலாஸ்கா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க அதிபராகப் பதவியேற்றால் ஒரே நாளில் உக்ரைன்-ரஷியா போரை நிறுத்திவிடுவேன் என தேர்தல் பிரசாரத்திலேயே கூறிவந்தார் டிரம்ப். ஆனால், அவர் அதிபராகி ஏழு மாதங்களுக்குப் பிறகுதான், உக்ரைன் போரைத் தொடங்கிய ரஷிய அதிபருடனான சந்திப்பையே ஏற்பாடு செய்ய முடிந்திருக்கிறது.
நேட்டோ கூட்டமைப்பில் உறுப்பினராகச் சேர உக்ரைன் முயற்சிப்பது தமது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என்கிற காரணத்தை முன்வைத்து உக்ரைன் மீது 2022, பிப்ரவரி 24-ஆம் தேதி முழு அளவிலான போரை ரஷியா தொடங்கியது. ரஷியாவின் ராணுவ வலிமைக்கு முன் உக்ரைனால் தாக்குப்பிடிக்க முடியாது; விரைவில் போர் முடிந்துவிடும் என்றுதான் முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமெரிக்காவின் தனிப்பட்ட உதவி, நேட்டோ நாடுகளின் ஆதரவுடன் ரஷியாவை எதிர்கொண்டது உக்ரைன்.
போரில் ரஷியா பேரிழப்பை சந்தித்திருக்கிறது என்பதில் ஐயப்பாடு இல்லை. ஆப்கானிஸ்தான் மீது சோவியத் ரஷியா நடத்திய 10 ஆண்டுகளைக் கடந்த போரைவிட உக்ரைன் போரில் ரஷியா சந்தித்திருக்கும் இழப்பு 15 மடங்கு அதிகம். செசன்யா போரில் ரஷியாவுக்கு ஏற்பட்ட இழப்பைவிட உக்ரைன் போரில் ஏற்பட்டுள்ள இழப்பு 10 மடங்கு அதிகம். உக்ரைன் தரப்பிலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.
"உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கிக்கு தேவையான தீர்வுகள் அனைத்தும் கிடைத்துவிட்டன. இனி, நாம் ஏதேனும் ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஓர் அமைதி ஒப்பந்தம் உருவானால், அது உக்ரைனும் ரஷியாவும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சில பிராந்தியங்களை பரஸ்பரம் மாற்றிக்கொள்ளும் வகையில் இருக்கும்.
இரு தரப்புக்கும் நன்மை பயக்கும் வகையில் அது நடைபெறும்' என புதினுடனான சந்திப்பு குறித்து டிரம்ப் தெரிவித்திருப்பதன் மூலம் இரு நாடுகளும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சில பிராந்தியங்களை விட்டுக்கொடுக்க வேண்டும் என்கிற திட்டத்தை டிரம்ப் முன்வைப்பதாகத் தெரிகிறது.
அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளை ஸெலென்ஸ்கி வரவேற்றுள்ள அதேவேளையில், போரை முடிவுக்குக் கொண்டுவர தங்கள் நாட்டு நிலப்பகுதிகளை விட்டுத்தர ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். "தங்களின் எல்லைகளையும், அரசியல் சாசனத்தையும் மதிக்கும், சர்வதேச சட்டங்களுக்கு ஏற்ற அமைதி ஒப்பந்தம்தான் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த இலக்கில் இருந்து எங்களை யாரும் திசைதிருப்ப முடியாது' என அவர் கூறியிருப்பது டிரம்ப்பின் எண்ணத்தை ஆரம்பத்திலேயே கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது.
ரஷியாவுடனான பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்படாதது டிரம்ப்பின் அமைதி முயற்சியில் உள்ள மற்றொரு முக்கியக் குறைபாடு. இந்தப் போரில் உக்ரைனுக்கான அனைத்துத் தீர்வுகளும் கிடைத்துவிட்டன என டிரம்ப் கூறுவதிலிருந்து பார்த்தால், புதினுடனான பேச்சுவார்த்தையில் உக்ரைன் தேவையில்லை என அவர் கருதுவதாகத் தெரிகிறது.
உக்ரைனின் பங்கேற்பு இல்லாமல் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்படும் எந்த முடிவும் தோல்வியில்தான் முடியும் என்கிற ஸெலென்ஸ்கியின் ஆதங்கத்தில் நியாயம் இருக்கிறது. பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, போலந்து, ஃபின்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும், ஐரோப்பிய ஆணையமும் ஸெலென்ஸ்கியின் கருத்தை வழிமொழிந்துள்ளன.
இந்த நாடுகளின் தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், அலாஸ்கா அமைதிப் பேச்சுவார்த்தையில் உக்ரைன் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றனர். டிரம்ப்-புதின் பேச்சுவார்த்தையில் கிடைக்கப்போகும் தீர்வு ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில்,
அமைதிப் பேச்சில் ஐரோப்பிய நாடுகளின் பங்கேற்பு இல்லை என்பதை பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் கவலையுடன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அண்மைக்காலமாக, இந்தியா-பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளின் சண்டையை நிறுத்தி அமைதியை ஏற்படுத்தியுள்ளதாக தொடர்ச்சியாகக் கூறிவரும் டிரம்ப், உக்ரைன்- ரஷியா போருக்கும் தீர்வு கண்டு அமெரிக்காவுக்கு மட்டுமே அந்தப் பெருமை என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கலாம்.
உக்ரைன்-ரஷியா போர் இரு நாடுகளின் தனிப்பட்ட போர் அல்ல. கிட்டத்தட்ட அது ஓர் உலகப் போர். அதற்கு அனைத்துத் தரப்பினரையும் இணைத்து தீர்வு காணாதவரையில் உக்ரைன் போர் முடிவுக்கு வராது.
அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நோபல் அமைதிப் பரிசுக்கான முயற்சியில் இதையும் சேர்த்துக்கொள்ளலாம். சமரச ஒப்பந்தங்கள் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். வலுக்கட்டாயமான திணிப்புகள் வெற்றி பெற்ற வரலாறு இதுவரையில் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.