அதிபர் டிரம்ப்பின் அடுத்த இலக்கு!

ஜின்பிங், புதின் போன்று ஆயுள்கால அதிபராக டிரம்ப் இருக்க முடியாது என்பது ஒருவகையில் ஆறுதல்.
டொனால்ட் டிரம்ப்
டொனால்ட் டிரம்ப்படம் - ஏபி
Updated on
2 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றதற்குப் பின்னர், கடந்த ஏழு மாதங்களில் மட்டும் சட்டவிரோதமாகத் தங்கி இருந்ததாகக் கூறி இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான ஹெச்1பி விசா கட்டணம் ரூ.1.32 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டது.

அமெரிக்காவின் விருப்பத்துக்கேற்ப வழிக்குக் கொண்டுவருவதற்காக இந்தியா உள்பட பல நாடுகள் மீது எந்தவித வரைமுறையும் இல்லாமல் வரி விதித்தார் அவர்.

இவற்றை எல்லாம் விஞ்சும் வகையில், இதய நோய், சுவாசக் கோளாறு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், நரம்பியல் பாதிப்பு உள்ள வெளிநாட்டவருக்கு நுழைவு இசைவு (விசா) கிடையாது என்றும் அந்த நாட்டு அரசு அண்மையில் உத்தரவிட்டது. அமெரிக்க அரசின் சுகாதாரத் திட்ட பலன்களை வெளிநாட்டினரும் பெறுவதால், அமெரிக்க மக்களின் வரிப் பணம் வீணாகிறது என்று இதற்கு காரணம் கூறப்பட்டது.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் தேசிய காவல் படையைச் சேர்ந்த சாரா ரோம் (20) என்ற வீராங்கனை உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த அதிபர் டிரம்ப், மூன்றாம் உலக நாடுகளாகக் கருதப்படும் ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்க நாட்டினர் அமெரிக்காவில் குடியேற நிரந்தரத் தடை விதிக்க உள்ளதாக தடாலடியாக அறிவித்தார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது; பாகிஸ்தானின் வேண்டுகோளையடுத்து, ஓரிரு நாள்களில் தாக்குதலை இந்தியா நிறுத்தியது. இந்தியா } பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் பல முறை கூறிவிட்டார்.

கடந்த ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது, "என் பெயர் ஒபாமா என்று இருந்திருந்தால் 10 விநாடிகளில் நோபல் பரிசு அளிக்கப்பட்டிருக்கும். நல்லது ஒன்றுமே செய்யாமல் நமது நாட்டைச் சீரழித்ததற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது' என்று பேசினார்.

அண்மையில் நடைபெற்ற நியூயார்க் நகர மேயர் தேர்தலில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியரான மம்தானியை "கம்யூனிஸ்ட் பைத்தியம்' என்று விமர்சனம் செய்தார். அவர் வென்றால் அந்த நகரத்துக்கான நிதி அளிக்கப்படாது என்றும் அவரது குடியுரிமை பறிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் பகிரங்கமாகவே எச்சரித்தார்.

இப்போது இந்த அதிரடி அறிவிப்பில் இணைந்திருப்பது வெனிசுலா பிரச்னை. சோஷலிஸ்ட் நாடாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டதால் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகவே அந்த நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ளது.

கடந்த காலங்களில் அதிபர் நிக்கோலஸ் மடூரோ அரசை மட்டம் தட்டுவதற்காக எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஜுவான் கய்டோ என்பவரை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகள் பலவும்

அதிபராக அங்கீகரித்தன. கடந்த 2024}ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட்டே மடூரோ வெற்றி பெற்றார் என்று மேற்கத்திய நாடுகள் ஏற்கெனவே குற்றஞ்சாட்டின.

உலகின் போதைப் பொருள் மையமாகக் கருதப்படும் கொலம்பியாவில் இருந்து பல ஆண்டுகளாக மற்ற நாடுகளுக்கு வெனிசுலா வழியாகவே போதைப் பொருள்கள் அனுப்பப்படுகின்றன என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூறிவருகின்றன.

இந்தப் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தப் போவதாகக் கூறி, சர்வதேச சட்டங்களைத் துளியும் மதிக்காமல்,

வெனிசுலா அருகே கரீபியன் கடல், கிழக்கு பசிபிக் கடல் பகுதிகளில் படகுகளைக் குறிவைத்து கடந்த செப்டம்பர் மாதம் முதலே அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களில் இதுவரை 83 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கார்டெல் டி லாஸ் சோல்ஸ் என்ற போதைப் பொருள் கடத்தல் அமைப்புக்கு மடூரோ தலைமை வகிப்பதாகக் கூறி அந்த அமைப்பை தீவிரவாத இயக்கம் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. மடூரோவை பிடிக்க உதவுபவர்களுக்கு 5 கோடி டாலர் (சுமார் ரூ.420 கோடி) சன்மானம் அளிக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார். ஆனால், அதுபோன்ற அமைப்பே தங்கள் நாட்டில் இல்லை என்றும் தங்கள் மீது ஆக்கிரமிப்பு செய்யவே இதுபோன்ற குற்றச்சாட்டை டிரம்ப் அரசு சுமத்துவதாகவும் வெனிசுலா அரசு கூறுகிறது.

வெனிசுலாவை சுற்றி வான்வழி மூடப்படுவதாக டிரம்ப் சில நாள்களுக்கு முன் அறிவித்துள்ளார். இந்தச் சூழலில் வெனிசுலா அதிபருடன் தொலைபேசியில் டிரம்ப் பேசியுள்ளார். அவர் பதவி விலகினால் பொது மன்னிப்பு அளிக்கப்படும் என்று டிரம்ப் கூறியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுவரை 7 போரை நிறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களை தான் காப்பாற்றி உள்ளதாகக் கூறிக் கொள்ளும் டிரம்ப்பின் இந்த அறிவிப்பு, வெனிசுலாவின் இறையாண்மையை மதிக்காமல் அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதற்கான முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்த விவகாரத்தில், கடந்த காலங்களில் வியத்நாம், கியூபா, ஆப்கானிஸ்தான், இராக் உள்ளிட்ட நாடுகளிடம் அமெரிக்கா கற்ற பாடத்தை டிரம்ப் நினைத்துப் பார்த்து சற்று நிதானத்துடன் நடந்து கொள்வது நல்லது.

சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் போன்று ஆயுள்கால அதிபராக டிரம்ப் இருக்க முடியாது என்பது ஒருவகையில் ஆறுதல். ஆனால், பதவியில் இருக்கும் இன்னும் மூன்று ஆண்டுகளில் அமெரிக்காவும், உலக நாடுகளும் எந்த வகையான பாதிப்புகளை எதிர்கொள்ளும் என்பதை நினைத்தால் அச்சம் மேலிடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com