

அலுவலகங்களில் நிர்ணயிக்கப்பட்ட பணி நேரம் முடிந்து வெளியேறிய பிறகு அலுவல்பூர்வ கைப்பேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்களுக்குப் பதிலளிப்பதிலிருந்து ஊழியர்களைப் பாதுகாக்கும் வகையில் "துண்டிக்கும் உரிமை-2025' (ரைட் டு டிஸ்கனெக்ட்) என்ற தனிநபர் மசோதா மக்களவையில் அண்மையில் (டிச. 5) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத் பவார்) உறுப்பினர் சுப்ரியா சுலே, இரண்டாவது முறையாக இந்த மசோதாவை அறிமுகம் செய்துள்ளார். இன்றைய மாறுபட்ட பணிச்சூழலில் இத்தகைய மசோதா சட்டமாவது அவசியம் என்றுதான் தோன்றுகிறது.
கடந்த நவம்பர் கடைசி வாரத்தில் கேரள சட்டப்பேரவையிலும் இதே போன்ற மசோதா ஒன்று அந்த மாநில அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த மசோதாவை நிறைவேற்றுவதில் கேரளம் முன்னோடி மாநிலமாகத் திகழும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த மசோதா இதுவரையில் சட்டமாக்கப்படவில்லை.
நாட்டில் 8 மணி நேரம் வேலை என்ற வரையறை இருந்தாலும், பணி நேரத்துக்குப் பிறகும் ஊழியர்களைத் தொடர்ந்து தொடர்பில் வைத்திருப்பது தூக்கமின்மை, மன அழுத்தம், பதில் அளிக்க வேண்டிய கட்டாயம், பணிச்சுமை உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
"வேலை-குடும்பம்' ஆகிய இரண்டுக்கும் இடையிலான தொலைவைச் சமன்படுத்துவதுதான் தனது மசோதாவின் நோக்கம் என்கிறார் சுப்ரியா சுலே. "வீட்டிலிருந்து வேலை', வீடு-அலுவலகம் என மாறி மாறி பணியாற்றும் (ஹைபிரிட் மாடல்) முறை மற்றும் "வெளியிலிருந்து வேலை' போன்ற மாறுபட்ட பணிச்சூழலில் இந்த வரையறையை அவசியமான ஒன்றாகக் கருத வேண்டியிருக்கிறது.
"அலுவலகப் பணி நேரம் முடிவடைந்த பிறகு கைப்பேசி அழைப்புகளை ஏற்காமல் இருந்தாலோ அல்லது குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்காமல் இருந்தாலோ அதைக் குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்கக் கூடாது.
வேலை நேரம், அவசரத்துக்கு தொடர்பு கொள்வதற்கான விதிமுறைகள், எண்மத் தொடர்பு எதிர்பார்ப்புகள் போன்றவற்றுக்கு நிறுவனங்கள் தனியாகக் கொள்கைகளை வகுக்க வேண்டும்' என்கிறது சுப்ரியா சுலேவின் மசோதா. வேலை நேரத்துக்குப் பிறகும் பணி செய்ய வேண்டிய அவசர அவசியம் ஏற்பட்டால், அதற்கு ஊழியர்-நிறுவனமிடையே பரஸ்பர ஒப்புதல் அவசியம். கூடுதல் வேலை நேரத்துக்குரிய ஊதியம் தனியாக வழங்கப்பட வேண்டும். இவற்றை அமல்படுத்தவும், கண்காணிக்கவும் ஊழியர் நல ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும் என மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உலக நாடுகள் சிலவற்றில் இந்த "துண்டிக்கும் உரிமை'யை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றன. அதன் எதிரொலியாக முதன்முதலாக பிரான்ஸில் 2017-இல் அதற்கான சட்டம் இயற்றப்பட்டது. தொடர்ந்து இத்தாலி, அயர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் சட்டம் இயற்றப்பட்டது.
இந்தியாவில் தனிநபர் மசோதா ஒன்று சட்டமாவது அவ்வளவு எளிதானல்ல. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரையில் 14 தனிநபர் மசோதாக்கள் மட்டுமே சட்டமாகியுள்ளன. 1970-இல் சுயேச்சை எம்.பி.யான ஆனந்த் நரேன் முல்லா அறிமுகம் செய்த, "உச்சநீதிமன்ற மசோதா-1968' சட்டமானது. அந்தச் சட்டத்தின் மூலம் குற்ற வழக்குகளின் மேல்முறையீட்டு மனுக்களையும் உச்சநீதிமன்றம் விசாரிக்க வழி ஏற்பட்டது; அது அப்போது பெரும் சாதனையாகக் கருதப்பட்டது.
திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா எம்.பி., கடந்த 2015-இல் அறிமுகம் செய்த திருநங்கைகளுக்கான உரிமைகள் குறித்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவின் முக்கியத்துவத்தை உணர்ந்து மத்திய அரசு அதில் சில மாற்றங்களைச் செய்து அரசு மசோதாவாக தாக்கல் செய்து 2019-இல் சட்டமாக்கியது.
எப்போதும் தொடர்பு கொள்ள முடியும் என்பதால் ஊழியர்கள் பணி நேரத்துக்குப் பிறகும், விடுமுறை நாள்களிலும், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலைகளிலும்கூட தொடர்ந்து கைப்பேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், கட்செவி அஞ்சல்கள், மின்னஞ்சல்களுக்குப் பதிலளிக்க வேண்டியிருப்பதாக ஆய்வுகளும், அது தொடர்பான விவாதங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.
அழைப்புகளுக்கு உடனடியாக பதிலளிக்காவிட்டால் வேலைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தால் அவர்களுக்கு ஏற்படும் பதற்றம், மன அமைதி இழத்தல், குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாமை போன்றவை உருவாகின்றன.
அத்தியாவசியத் தேவை மற்றும் அவசர சேவைகளில் இருப்போரின் வேலை நேரத்தை வரையறுக்க முடியாது. அதற்கான பிரத்யேக விதிமுறைகளை உருவாக்கிக் கொள்ளலாம். சட்டத்தை எதிர்பார்க்காமல் நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து ஊழியர்களுக்கு "துண்டிப்பு உரிமை' எனும் புதிய மரபை ஏற்படுத்தினால், அது நாகரிகமான மேம்பட்ட அலுவலகப் பணிச்சூழலை உருவாக்கும்.
மருத்துவ சேவையில் ஈடுபடுபவர்கள், ஊடகவியலாளர்கள், அரசு உயரதிகாரிகள், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் காவல் துறையினர் உள்ளிட்டோர் இரவு-பகல் பாராமல் தொடர்பில் இருக்க வேண்டியது அவசியம். அதேநேரத்தில், ஏனைய பணிகளில் இருப்பவர்கள் அதுபோல இருக்க வேண்டிய அவசியமில்லை.
எண்மத் தொடர்பு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய சூழ்நிலையில் ஊழியர்களின் தனி மற்றும் குடும்ப நலனுக்காக நிறுவனங்கள் தாமே முன்வந்து அப்படியொரு நடைமுறையை செயல்படுத்தினால் வரவேற்பைப் பெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.