பேருயிரைக் காப்பது கடமை

நிலப்பரப்பில் வாழும் பேரதிசயமான யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதைப் பற்றி...
ரயில்வே தண்டவாளத்தைக் கடக்கும் யானை!
ரயில்வே தண்டவாளத்தைக் கடக்கும் யானை!
Updated on
2 min read

அஸ்ஸாம் மாநிலம், ஹோஜாய் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை (டிச.20) அதிகாலை ரயில் தண்டவாளத்தில் நின்றிருந்த யானைக் கூட்டம் மீது ராஜ்தானி விரைவு ரயில் மோதியதில் 8 யானைகள் உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

மிஸோரம் மாநிலம் சைரங்கிலிருந்து தில்லி நோக்கிச் சென்று கொண்டிருந்தது இந்த ரயில். கடும் பனிமூட்டம் காரணமாக யானைகள் நின்றிருப்பது தெரியாததால் யானைகள் மீது ரயில் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டது.

காடுகளின் அமைப்பு மற்றும் அடர்த்தியில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் யானைகள், வனப் பகுதியில் மரங்களின் மீளுருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்து, பிற மேய்ச்சல் விலங்குகளின் வாழ்க்கைச் சூழலை எளிதாக்குகின்றன. நிலப்பரப்பில் வாழும் பேரதிசயமான யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மனிதர்களுடனான மோதலும், வனப் பகுதியைக் கடந்து செல்லும் தண்டவாளங்களில் ரயில்களில் அடிபடுவதும் யானைகளின் உயிரிழப்புக்கு பிரதான காரணங்கள். அஸ்ஸாம் சம்பவம் மூலம் இதுபோன்ற ரயில் விபத்துகளில் 2019-20 லிருந்து இப்போது வரை உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 94ஆக உயர்ந்துள்ளது. நிகழாண்டு மட்டும் இது 4ஆவது விபத்தாகும்.

முந்தைய இரண்டு விபத்துகள் மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரியில் நிகழ்ந்தன. பெரும்பாலான விபத்துகள் நிகழ்ந்த பகுதிகள் யானைகள் வழக்கமாக கடந்து செல்லும் பகுதி அல்ல என்று வனத் துறை தெரிவிக்கிறது. உலகின் காட்டு யானைகளில் 60 சதவீத யானைகள் இந்தியாவில் உள்ளன. 33 யானைகள் காப்பகங்கள், அறிவியல்பூர்வமாக அடையாளம் காணப்பட்ட 150 வழித்தடங்கள் என யானைகளின் பாதுகாப்பில் இந்தியா சிறந்த பங்களிப்பை அளிக்கிறது.

வனவிலங்குகள் நடமாட்டத்தின் தீவிரத்தின் அடிப்படையில், 14 மாநிலங்களில் 1,965 கி.மீ. தொலைவு கொண்ட 77 ரயில் பாதைகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய நடவடிக்கைகளுக்குப் பிறகும் யானைகள் உயிரிழப்பு தொடர்வதுதான் சோகம்.

தேசிய பாரம்பரிய விலங்கான யானைகள் பாதுகாப்பு விஷயத்தில் தமிழ்நாடு வனத் துறை இந்தியாவுக்கே முன்மாதிரியாகத் திகழ்வது பாராட்டுக்குரியதாகும். கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாடு வனத் துறை வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழ்நாட்டில்

கணக்கிடப்பட்ட 3,170 காட்டு யானைகள் உள்ளன. முந்தைய கணக்கெடுப்பில் இருந்த 3,063 என்ற எண்ணிக்கையைவிட 107 யானைகள் அதிகம். வளம் குன்றிய காடுகளை மீட்டெடுப்பது, யானைகள் வழித்தடங்களை வலுப்படுத்துவது, மனிதர்கள்-யானை மோதலைத் தடுக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது என மக்களை மையமாகக் கொண்ட முழுமையான அணுகுமுறையைக் கையாண்டதால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் யானைகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள இந்த நிலையான வளர்ச்சி, அறிவியலை அடிப்படையாகக் கொண்ட வனவிலங்கு மேலாண்மை மற்றும் சமூகப் பங்களிப்பின் காரணமாக விளங்குகிறது என்றும் வனத் துறை தெரிவிக்கிறது. யானைகளின் வாழ்விடங்களைப் பாதுகாக்க செயற்கை நுண்ணறிவு, தொலை உணர்வு மற்றும் புவிசார் வரைபடம் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன.

தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் யானை கடந்து செல்லும் 6,000 இடங்கள் கண்காணிக்கப்படுகின்றன. கோவை மதுக்கரை ரயில் வழித்தடத்தில் முன்னர் அடிக்கடி ரயில்களில் சிக்கி யானைகள் உயிரிழந்த சம்பவங்கள் நிகழ்ந்தன.

இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு யானைகூட உயிரிழக்கவில்லை எனத் தெரிவிக்கிறார் தமிழக வனத் துறை கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹு. சோளக்கரை வனப் பகுதியில் 360 டிகிரி வரையும் சுழலும் தெர்மல் கேமராக்கள் உயரமான கோபுரங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த கேமராக்கள் ரயில் தண்டவாள பகுதியிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவு வரை நிறுவப்பட்டுள்ளன. ரயில் வரும் நேரங்களில் யானைகள் தண்டவாளத்தை நெருங்குவது கட்டுப்பாட்டு அறை மூலம் தெரியவந்தால், அதற்கு முன்னரே அவை வனத் துறை பணியாளர்களால் திசைதிருப்பி விடப்படும்.

இந்த வகையில் கடந்த 2024 பிப்ரவரி முதல் 2025 மே மாதம் வரை மதுக்கரை ரயில் வழித்தடத்தை 5,260 யானைகள் பாதுகாப்பாக கடந்துள்ளன. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 750 யானைகள் கடந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான யானைகள் ரயில் வரும் நேரத்தில் அவை தண்டவாளத்தை நெருங்கும் முன்னரே வனத் துறை பணியாளர்களால் திசைதிருப்பிவிடப்பட்டன. யானைகள் மட்டுமன்றி, சிறுத்தைகள், புள்ளிமான்கள், காட்டெருமைகள் உள்ளிட்டவையும் ரயில் தண்டவாளத்தை பாதுகாப்பாக கடக்க இந்த செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் துணைபுரிந்துள்ளன.

"எந்த ஒரு நடவடிக்கையும் முழுமையானதல்ல. ஆனால், தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்போது என்ன சாத்தியமாகும் என்பதை இதுபோன்ற தீர்வுகள் காண்பிக்கின்றன- என்ற தமிழக வனத் துறை கூடுதல் தலைமைச் செயலரின் கருத்து முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது. வாழ்விடங்கள் குறைவது, ஆக்கிரமிக்கப்படுவது, தந்தங்களுக்காக வேட்டையாடப்படுவது, மனிதர்களுடனான மோதல், உணவுப் பற்றாக்குறை என ஒரு பேருயிர் இனம் தினந்தோறும் போராட்டத்தைச் சந்தித்து வருகிறது. அதைப் பாதுகாப்பதில் அரசு நிர்வாகம் மட்டுமன்றி, தனி மனிதர்களும் முனைப்புக் காட்டுவது அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com