

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அடிப்படைக் கடமை பெருநிறுவனங்களுக்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாகக் கூறி உள்ளது. அரசமைப்புச் சட்டப் பிரிவு 51ஏ (ஜி)-இன்படி, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் காடுகள், ஏரிகள், ஆறுகள், வன விலங்குகளைப் பாதுகாப்பது மற்றும் இயற்கைச் சூழலை மேம்படுத்தும் அடிப்படைக் கடமை உண்டு. அதன்படி, பெருநிறுவனங்களும் அதில் அடங்கும் என்று நீதிமன்றம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
நாட்டில் அழிந்துவரும் பறவை இனங்களில் ஒன்றான கான மயில் (தி கிரேட் இண்டியன் பஸ்டர்ட்) இனத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்வலர் ஒருவர் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை (டிச. 19) தீர்ப்பளித்தது. தீர்ப்பில், பெருநிறுவனங்களின் சமுதாயப் பொறுப்புணர்வு (சிஎஸ்ஆர்) என்பதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் அடங்கும் என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.
பெருநிறுவனங்களின் கடமை என்பதில் பங்குதாரர்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாது நாம் அனைவரும் வாழும் சுற்றுப்புறத்தைப் பாதுகாப்பதும் அடங்கும். எனவே, நிறுவனங்களின் சமூகப்பொறுப்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயல்பாகவே உண்டு என்று நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, அதுல் எஸ். சந்தூர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது.
உலகிலேயே அதிக எடை கொண்ட பறக்கும் திறனுடைய பறவை கான மயில். 1930-களில் ஒகேனக்கல் காடு, கோவை சூலூர் விமானப் படைத் தளம் போன்ற இடங்களில் காணப்பட்டன. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு தேசியப் பறவையாக அறிவிக்க வேண்டிய பறவைகளின் பட்டியலில் இடம்பெற்றது கான மயில். அப்போது, ஆயிரக்கணக்கில் இருந்த கான மயில், இப்போது மிகவும் குறைந்து நாட்டில் 100 முதல் 150 வரை மட்டுமே இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில தார் பாலைவனத்திலும், குஜராத் மாநிலத்தின் சில பகுதிகளிலும் அதிகமாக காணப்படுகின்றன.
கான மயில் வாழும் பகுதிகளில் செயல்படும் மின் உற்பத்தி நிறுவனங்களால் அவற்றின் வாழ்விடம் பாதிக்கப்படுகிறது. எனவே, ராஜஸ்தான் மாநிலத்தில் 14,013 ச.கி.மீ., குஜராத்தில் 740 ச.கி.மீ. நிலங்களை கான மயிலின் வாழ்விட முன்னுரிமைப் பகுதிகளாக உறுதி செய்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அந்தப் பறவையினம் வாழ வழிவகுத்துள்ளது. அதோடு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் பெருநிறுவனங்களுக்கு உணர்த்தியுள்ளது.
நாட்டில் வளர்ச்சி என்கிற பெயரில் பெருகிவரும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் நீர், நிலம், காற்று என அனைத்தும் மாசுபட்டு வருகின்றன. கழிவுகள் முறையாகச் சுத்திகரிக்கப்படாமல் அப்படியே அருகில் உள்ள நிலத்திலோ அல்லது நீர்நிலைகளிலோ கலக்க விடப்படுவதால் நிலமும் நீரும் மாசுபடுகின்றன. ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் மிதமிஞ்சிய புகையைக் கட்டுப்படுத்த உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதில்லை. அதனால் காற்று மாசுபடுகிறது. தொழிற்சாலைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. அதனால், ஆலைகளில் நிகழும் விபத்து, ஆபத்தான வேதிப் பொருள்களின் கசிவு போன்றவற்றால் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. மனித உயிர்களும் பலியாகின்றன.
லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் நிறுவனங்கள், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது குறித்து கவலை கொள்வதில்லை. சூழல் கெடுவதால் அந்தப் பகுதியில் வாழும் மக்களின் பொதுசுகாதாரம் பாதிக்கப்படுகிறது. சுவாசக் கோளாறு, தோல் நோய்கள், கண் நோய்கள், புற்றுநோய்கள் எனப் பலவித நோய்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர். இதனால், தனிமனிதப் பொருளாதாரம் மட்டுமல்லாது நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது.சுற்றுச்சூழல் பாதிப்பை எதிர்த்து பொதுமக்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் அரசுகளும், அதிகாரிகளும் நிறுவனங்களுக்குத்தான் ஆதரவாக இருக்கிறார்களே தவிர, பாதிப்பு குறித்து எவரும் கவலைப்படாத போக்கு அதிகரித்து வருகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம்-1986, தண்ணீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம்-1974 ஆகிய சட்டங்கள் அமலில் இருந்தாலும் அதுகுறித்தெல்லாம் நிறுவனங்கள் கவலைப்படாமல் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வருவது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு கவனம் பெறுகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களை முறையாக, பாரபட்சமின்றி அமல்படுத்தினாலே பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், அரசுத் துறைகளில் நிலவும் ஆள்கள் பற்றாக்குறை, நிதிப் பிரச்னை, அரசியல் தலையீடு போன்றவற்றால் சட்ட அமலாக்கத்தில் ஏற்படும் தொய்வு ஆலைகளுக்குச் சாதகமாக அமைந்துவிடுகிறது.
பாதிப்புகள் அதிகமாகும்போது பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் மூலம் நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகுதான் தீர்வு பெற வேண்டிய நிலை உள்ளது. வேலூர் பகுதி தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் பிரச்னை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை உள்ளிட்டவையே அதற்குச் சான்று.
எனவே, உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கவனத்தில்கொண்டு சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சட்ட அமலாக்கத்தில் தீவிரம் காட்டி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சூழல் பாதிப்புக்கு பெருநிறுவனங்களைப் பொறுப்பாக்கி, அதைப் பாதுகாப்பது அவர்களது கடமை என்பதை உணர்த்த வேண்டும். அப்போதுதான் எதிர்கால சந்ததிக்கு நல்ல நீரும், நிலமும், காற்றும் கிடைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.