கனவுகளைச் சுமக்கும் எல்விஎம்-3

அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை விண்வெளியில் செலுத்தி வெற்றிகரமாக நிலைநிறுத்தி சாதனையில் மேலும் ஒரு மணிமகுடம் சூட்டப்பட்டிருக்கும் இஸ்ரோவைப் பற்றி...
கனவுகளைச் சுமக்கும் எல்விஎம்-3
கனவுகளைச் சுமக்கும் எல்விஎம்-3
Updated on
2 min read

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு2025-ஆம் ஆண்டு ஒரு சாதனை ஆண்டு என்றே சொல்லலாம். கடைசியாக கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி எல்விஎம்-3 ராக்கெட் மூலம் அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை விண்வெளியில் செலுத்தி வெற்றிகரமாக நிலைநிறுத்தியதன் மூலம் அந்தச் சாதனையில் மேலும் ஒரு மணிமகுடம் சூட்டப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தின் ப்ளூபேர்ட்-6 எனப்படும் அந்தத் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் 6,100 கிலோ எடை கொண்டது. வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் இஸ்ரோவின் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம், ப்ளூபேர்ட் செயற்கைக்கோளை வெற்றிகரமாகச் செலுத்தியது.

ப்ளூபேர்ட் - 6 செயற்கைக்கோள் விண்வெளியில் இருந்து நேரடியாக கைப்பேசிகளுக்கு அதிவேக இணைய சேவையை வழங்கும். இதன்மூலம் சிக்னல் கோபுரங்கள் இல்லாத அடர்ந்த காடுகள், மலைப் பகுதிகளில், நீர்த்தடங்களில் 5ஜி வேகத்தில் இணையம், விடியோ அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி சேவைகளைப் பெற முடியும்.

ப்ளூபேர்ட் -6 செயற்கைக்கோள் வெற்றியின் மூலம் 1993-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 34 நாடுகளின் 434 செயற்கைக்கோள்களை செலுத்திய பெருமையை இஸ்ரோ பெற்றுள்ளது. அதிலும், அதிக எடையுள்ள செயற்கைக்கோளை செலுத்தியதன் வாயிலாக சர்வதேச அளவில் இஸ்ரோவின் வர்த்தக மதிப்பு உயர்ந்திருப்பது இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் பெருமை. அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களைச் செலுத்துவதற்காகவே ஜிஎஸ்எல்வி மார்க் 3 அல்லது எல்விஎம்-3 என அழைக்கப்படும் அதிநவீன ராக்கெட்டை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இதன் வாயிலாக புவி தாழ்வட்டப் பாதையில் 8,000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களையும், ஒத்திசைவுப் பாதையில் 4,000-க்கும் அதிகமான எடை கொண்ட செயற்கைக்கோள்களையும் நிலைநிறுத்த முடியும்.

எல்விஎம்-3 ராக்கெட் மூலம் 6,100 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டிருப்பது, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு உத்வேகமாக அமையும். எல்விஎம் 3 ராக்கெட்டின் 9-ஆவது வெற்றிகரமான இந்தப் பயணத்தின் மூலம் எல்விஎம் 3 ராக்கெட் 100 சதவீத நம்பகத்தன்மையைப் பெற்றுள்ளது.

ப்ளூபேர்ட் பிளாக்-2 மிஷன் எல்விஎம்-3 ராக்கெட்டின் 6-ஆவது வெற்றியாகும். ஜிசாட்-19 என்கிற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை 2017-ஆம் ஆண்டு விண்வெளியில் நிலைநிறுத்தியதன்மூலம் அதன் வெற்றிப் பயணம் தொடங்கியது.

அதே ராக்கெட் மூலம் 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலத்தை புவியின் வளிமண்டலத்துக்கு வெளியே 2019-ஆம் ஆண்டிலும், சந்திரயான்-3 விண்கலத்தை 2023-ஆம் ஆண்டிலும் செலுத்தி விஞ்ஞான உலகின் புருவத்தை உயர்த்த வைத்தது இஸ்ரோ.

பிரிட்டனைச் சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 72 செயற்கைக்கோள்களை எல்விஎம்-3 ராக்கெட் மூலம் இஸ்ரோ செலுத்தியுள்ளது. தலா 36 செயற்கைக்கோள்கள் என 2022 அக்டோபரிலும், 2023 மார்ச்சிலும் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. ப்ளூபேர்ட் செயற்கைக்கோளுக்கு முன்னதாக கடந்த நவம்பரில் சிஎம்எஸ்-3 என்கிற 4,400 கிலோ எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளை எல்விஎம்-3 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்வெளியில் நிலைநிறுத்தியது.

இஸ்ரோவின் அதிக சக்தி வாய்ந்த ராக்கெட் தயாரிப்புப் பயணம் 1980-இல் தொடங்கியது. 35 கிலோ எடை கொண்ட ரோகிணி (ஆர்எஸ்-1) என்ற சோதனை செயற்கைக்கோளை எஸ்எல்வி-3 ராக்கெட் மூலம் செலுத்தியது. அதன்பிறகு ஏஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி என இஸ்ரோவின் ராக்கெட் தயாரிப்பு பரிமாணம் வேகமெடுத்தது.

இஸ்ரோவின் கனவுத் திட்டமான ககன்யான் திட்டத்தையும் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ககன்யான் விண்கலம் மூலம் செலுத்தப்படும் விண்வெளி வீரர்கள் புவியிலிருந்து 400 கி.மீ. சுற்றுப்பாதையில் மூன்று நாள்கள் ஆய்வு செய்வார்கள். பின்னர், மீண்டும் அதே விண்கலம் மூலம் பாதுகாப்பாக தரையிறக்கப்படுவார்கள்.

இதுதான் ககன்யான் திட்டத்தின் இலக்கு. ககன்யான் திட்டத்தின் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முன்னர், "வியோமித்ரா' என்ற பெண் தோற்றம் கொண்ட ரோபோவை எல்விஎம்-3 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ தயாராகியுள்ளது. இதற்கான அனைத்துக் கட்ட சோதனைகளும் நிறைவடைந்து எப்போது வேண்டுமானாலும் வியோமித்ராவை விண்வெளிக்குச் செலுத்த தயார் நிலையில் உள்ளது இஸ்ரோ.

வியோமித்ரா சோதனை வெற்றியடைந்தால், அடுத்தகட்டமாக ககன்யான் திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள்.

அதன்மூலம் தங்கள் சொந்த நாட்டு விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பிய அமெரிக்கா, ரஷியா, சீனாவின் வரிசையில் இந்தியாவும் இடம்பெறும். எதிர்காலத்தில் சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்கவும் இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது. பாரதிய அந்தரீக்ஷ நிலையம் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தத் திட்டத்துக்கான கனவுகளைச் சுமக்கத் தயாராகி வருகிறது எல்விஎம்-3.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com