முன்னேற்றத் தடைகள்!

நாட்டில் வேலைவாய்ப்புகளை வழங்குவதிலும், மண்டல அளவிலான வளர்ச்சியிலும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு முக்கியமானது.
மாதிரிப்படம்
மாதிரிப்படம்
Published on
Updated on
2 min read

நாட்டில் வேலைவாய்ப்புகளை வழங்குவதிலும், மண்டல அளவிலான வளர்ச்சியிலும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு முக்கியமானது. "நடுத்தர நிறுவனங்களுக்கான கொள்கை வடிவமைப்பு' என்ற தலைப்பில் நீதி ஆயோக் அண்மையில் வெளியிட்ட அறிக்கை, இந்தியாவில் செயல்படும் நடுத்தர நிறுவனங்களில் 82 சதவீத நிறுவனங்கள் நவீன தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு, தானியங்கி செயல்பாடுகள் போன்றவை இல்லாமல் செயல்படுவதால் அவற்றின் உற்பத்தித் திறன், உலகளாவிய போட்டிகளைச் சமாளிக்க முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சகம் வழங்கும் 18 திட்டங்களை10 சதவீத நடுத்தர தொழில் நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்தியுள்ளன. மீதமுள்ள 90 சதவீத நிறுவனங்கள் அதுதொடர்பாக விண்ணப்பிக்கும் இணையவழி தளங்கள் குறித்துகூட அறியாத நிலையில் செயல்பட்டு வருகின்றன. கடன் வசதிகள், தொழில்நுட்ப மேம்பாடு, திறன்சார் பயிற்சிகள் போன்ற அரசுசார் திட்டங்கள் குறித்து அறியாமல், அமைச்சகத்துடனான தொடர்பின்றி இயங்கி வருகின்றன.

அரசின் திட்டங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் (பிஎம்இஜிபி) மானியத்துடன் கடன் பெறும் வசதி, பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், பிணை இல்லாமல் கடன் வழங்கும் சிஜிடி}எம்எஸ்இ திட்டம், கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு முடங்கிய நிறுவனங்களுக்கு உலக வங்கியின் உதவியுடன் கடன் வழங்கும் ஆர்ஏஎம்பி திட்டம் போன்ற பல நல்ல திட்டங்களை

10 சதவீத நடுத்தர தொழில் நிறுவனங்களே பயன்படுத்தியுள்ளன. கடன் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை அவை பெற்றிருந்தாலும், அவற்றை திறம்பட நடத்திப் பயனடைவதற்கு தேவையான ஆற்றலைப் பெற்றிருக்கவில்லை என்றும் நீதி ஆயோக் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

88 சதவீத நடுத்தர தொழில் நிறுவனங்கள் அரசால் வழங்கப்படும் திறன் சார்ந்த பயிற்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களைப் பயன்படுத்துவதில்லை. வங்கிக் கடன் திட்டங்கள், சிறப்பு நிதித் திட்டங்கள் குறித்து பெரும்பாலான நிறுவனங்கள் அறியாமல் இருப்பது, அவற்றின் தொடர்பு இடைவெளியைக் காட்டுகிறது. மேலும், இந்தத் திட்டங்களை அறிந்த நடுத்தர நிறுவன தொழில்

முனைவோரில் 31 சதவீதத்தினர் இது தங்களின் வணிகத் தேவைகளுக்கு பொருத்தமற்றவை என்றும், சுமார் 59 சதவீதம் பேர் அவற்றால் தங்களின் முழுத் தேவையையும் நிறைவு செய்ய முடியாது என்றும் குறைத்து மதிப்பிடுகின்றனர்.

அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களின் பெயர் கூட சுமார் 40 சதவீத நடுத்தர தொழில்முனைவோருக்கு தெரிந்திருக்கவில்லை என்பது கவலைக்குரிய விஷயமாகும்.

தற்போதைய பணியாளர்களில் 55 சதவீதத்தினர் மட்டுமே போதிய திறன்களைக் கொண்டவர்களாகக் கருதப்படுகின்றனர். தானியங்கி செயல்பாடுகள், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங் போன்ற துறைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.

கடன் வழங்கும் விதிமுறைகளில் எளிமை, வேகமான செயலாக்கம், அரசுத் திட்டங்கள் மற்றும் ஆதரவு அமைப்புகளை எளிதில் அணுகும் வகையிலான நடைமுறைகளைக் கொண்டுவர வேண்டும் என்று நடுத்தர தொழில் நிறுவனங்கள் தரப்பில் கூறப்பட்டாலும், 60 சதவீதத்துக்கும் அதிகமான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் காலாவதியான தொழில்நுட்பங்களுடன் இயங்கி வருகின்றன. இதனாலும், உலகளாவிய போட்டியில் பின்னடைவைச் சந்திக்கும் நிலை தொடர்கிறது.

உற்பத்தித் துறையை பொருத்தமட்டில் பணியாளர்கள் நவீன தொழில்நுட்பம் சார்ந்த கல்வியறிவு கொண்டவர்களாக இருப்பதில்லை. அதன் உள்கட்டமைப்பு, எண்ம தொழில்நுட்பம் ஆகியவற்றிலும் முதலீடு செய்ய வேண்டியுள்ளது.

இந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறத்தாழ 29 சதவீத பங்களிப்பை அளிக்கின்றன. ஏற்றுமதியில் 40 சதவீதமும், தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதில் 60 சதவீத பங்களிப்பையும் அளித்து இந்தியப் பொருளாதாரத்தில் முக்கிய இடத்தை வகிக்கின்றன.

இதில் நடுத்தர தொழில் நிறுவனங்கள் 0.3 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளன. மொத்தம் 67,923 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டதில் 58 சதவீத நிறுவனங்கள் உற்பத்தித் துறையிலும், மீதி

42 சதவீத நிறுவனங்கள் சேவைத் துறையிலும் செயல்படுகின்றன.

நடுத்தர நிறுவனங்கள் எண்ணிக்கையில் சிறிய பங்கைக் கொண்டிருந்தாலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், வேலைவாய்ப்பு விகிதாசாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறு மற்றும் சிறு நிறுவனங்களைவிட அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி வழங்கி வருகின்றன. ஒவ்வொரு நடுத்தர நிறுவனமும் சராசரியாக 89.14 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது.

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வரும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். அறிவிப்புகளும் ஒதுக்கீடுகளும் ஏட்டளவில் இருந்தால் போதாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com