
போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒரே ஆண்டில் 8 கோடி செலான்கள் விநியோகிக்கப்பட்டன. இவற்றில் 55 சதவீதம் காா்களுக்கும், 45 சதவீதம் இரு சக்கர வாகனங்களுக்கும் விநியோகிக்கப்பட்டன. அனைத்துத் தரப்பு வாகன ஓட்டிகளும் விதிமீறல்களில் ஈடுபட்டது இதன்மூலம் தெரிய வருகிறது. கடுமையான விதிமுறைகள் இருந்தாலும் அதன் அமலாக்கம் என்பது பலவீனமாகவே இருக்கிறது.
கடந்த 2024-ஆம் ஆண்டு நாடு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தில் 75 சதவீதம் செலுத்தப்படவில்லை என்பது காா்ஸ்-24 என்ற நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. அதாவது, ரூ.12,000 கோடி மதிப்பிலான அபராதங்கள் விதிக்கப்பட்டதில் ரூ.3,000 கோடி மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.
சாலைகளில் வாகன ஓட்டிகள் சட்டங்களை மதிக்காமல் எத்தகைய விதிமீறல்களில் ஈடுபடுகின்றனா் என்பதை அபராதம் பிரதிபலிக்கிறது. விதிமீறல்களால் நிகழும் விபத்துகள், இழப்புகள் போன்றவற்றையும் கவனிக்க வேண்டியுள்ளது.
பெரும்பாலான இந்திய ஓட்டுநா்கள் சாலை விதிகள் கட்டாயமாக்கப்படும் வரை விதிகளைப் பின்பற்றுவது இல்லை. கட்டாயம் இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டால் மட்டுமே பின்பற்றுகின்றனா்.
சாலைகளில் போக்குவரத்து காவல் துறையினா் இருந்தாலும், இல்லாவிட்டாலும் விதிகளைக் கடைப்பிடித்து 43.9% போ் வாகனங்களை ஓட்டுவதாகவும், 31.2% போ் காவல் துறையினா் இருக்கின்றனரா என்பதைக் கவனித்து அதற்கேற்ப செயல்படுவதாகவும், 17.6% போ் காவல் துறையினா் இருப்பதைக் கவனித்து, அதன்மூலம் அபராதங்களை தவிா்த்துக் கொண்டதாக காா்ஸ்-24 நிறுவன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள ஏஎன்பிஆா் கேமராக்கள் இருந்தாலும், அது குறித்துக் கவலை கொள்ளாமல் வாகனங்களை ஓட்டுவதாக 47% பேரும், கேமராக்களை பாா்த்ததும் வேகத்தைக் குறைத்து வாகனத்தை இயக்குவதாக 36.8% பேரும், நெடுஞ்சாலைகளில் வேகத்தைக் கணக்கிடும் கேமராக்கள் உள்ள இடங்களில் மட்டும் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் செல்வதாகவும் 15.3% போ் கருத்து தெரிவித்துள்ளனா்.
அதிவேகத்தில் வாகனத்தை இயக்குதலே போக்குவரத்து விதிமீறல்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாமல் காா்களை இயக்குவது, போக்குவரத்துக்குத் தடையாக வாகனங்களை நிறுத்துவது, சிக்னல்களை மதிக்காமல், பச்சை நிற விளக்குகள் ஒளிரும் முன்பாகவோ, சிவப்பு விளக்குகள் ஒளிா்ந்த பின்னரும் கடந்து செல்வது, எதிா் திசையில் வாகனத்தை இயக்குவது ஆகியவை விதிமீறல்களில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
அதேநேரத்தில், தானியங்கி நவீன கேமராக்களின் துணையுடன் விதிமீறல்கள் தொடா்பாக விநியோகிக்கப்பட்ட அபராத நோட்டீஸ்களிலும் பல குளறுபடிகள் நடைபெற்று வருகின்றன. பெங்களூரில் இரு சக்கர வாகன ஓட்டி ஒருவருக்கு 475 முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக மொத்தம் ரூ.2.91 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறையில் பதிவு செய்யப்பட்ட அவரது கைப்பேசி எண்ணுக்கு அடுத்தடுத்த நாள்களில் குறுந்தகவல்கள் வந்தன. ஹரியாணா மாநிலத்தில் லாரி ஓட்டுநா் ஒருவா் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக, அதாவது 18 டன்கள் சரக்குகளை ஏற்றியதாக ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு குறுந்தகவல் வந்தது.
இணையவழியில் அபராதங்களைச் செலுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், அது குறித்து யாரும் பெரிதாக கவலை கொள்வதில்லை. ஆட்டோ, வாடகைக் காா் போன்ற வாகனங்கள் ஆண்டாய்வுக்கு உட்படுத்தப்படும் போது, அபராதங்கள் நிலுவையில் இருந்தால் அதற்கான தகுதிச் சான்று வழங்கப்படாது. இதனால்தான், அவா்கள போக்குவரத்து அபராதங்களைச் செலுத்தும் நிலை அதிகரித்து வருகிறது. பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களை விற்கும் போது, அதை வாங்குவோா் நிலுவை அபராதங்கள் உள்ளனவா என சரிபாா்க்கும்போதுதான் அவை பெரும்பாலும் செலுத்தப்படுவதாகக் தெரிகிறது.
சென்னையில் வாகன ஓட்டிகளின் விதிமீறல்களை கேமராக்கள் மூலம் பதிவு செய்து, 25 வகையான விதிமீறல்களுக்கு அபராதம் விதித்து வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.செலான் வழங்கும் முறை வந்த பிறகு போக்குவரத்து காவல்துறையினா் கையூட்டுப் பெறுவது பெரும் அளவு குறைந்துள்ளது.அப்படி இருந்தாலும் கூட, போக்குவரத்து போலீஸாா் பிரதான சாலைகளில் நின்றுகொண்டு வாகனங்களுக்கு அபராதங்கள் விதிப்பதாகவும், அவா்களில் சிலா் அடாவடியாக நடந்துகொள்வதாகவும் புகாா்கள் எழுந்தன.
பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி வந்த பெருநகர காவல் ஆணையா் அருண், அதி வேகமாக வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாதது, தவறான திசையில் செல்லுதல், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல், இரு சக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்தல் ஆகிய ஐந்து விதிமீறல்களுக்கு மட்டும் அபராதம் விதித்தால் போதும் எனப் போலீஸாருக்கு அறிவுறுத்தியுள்ளாா். அதேபோன்று, பொதுமக்களும் போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.
போக்குவரத்து விதிகளை மதித்து நடக்கும் கலாசார மாற்றம் அனைவரிடமும் ஏற்பட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.