வழி இருந்தும் மனமில்லை!

சட்டவிரோத செயல்பாடுகளுக்காக சிறைக்கு வந்தவர்கள் பிணைபெற்று வெளியே வந்துவிடுகிறார்கள். அப்பாவிகள் பிணை பெறமுடியாமல் சிறையில் வாடுகிறார்கள்
வழி இருந்தும் மனமில்லை!
ENS
Published on
Updated on
2 min read

மத்திய அரசு போதுமான நிதியை மாநிலங்களுக்கு ஒதுக்குவதில்லை எனப் புகார் கடிதங்கள் வாசிக்கப்படும் அதே வேளையில், ஒதுக்கப்பட்டுள்ள திட்ட நிதியை மாநிலங்கள் முழுமையாகப் பயன்படுத்தாமல் இருப்பதை என்னவென்று சொல்வது?

நாட்டில் உள்ள சிறைச் சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதிகளில் ஏராளமானவர்கள் பிணை பெற்றும் உத்தரவாத பத்திரம் அளிக்கவோ, தண்டனை பெற்ற கைதிகள் விடுதலையாகிச் செல்ல அபராதத் தொகை செலுத்தவோ இயலாத நிலையில் உள்ளனர். அவர்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் 'ஏழை சிறைக் கைதிகள் ஆதரவு' திட்ட நிதிதான் அவ்வாறு பயன்படுத்தப்படாமல் வீணாகிக் கொண்டிருக்கிறது.

கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்துக்கு கடந்த மூன்று நிதியாண்டுகளில் ஆண்டுக்கு ரூ. 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த மார்ச் மாதம் வரை 12 மாநிலங்கள் சுமார் ரூ. 22.84 லட்சத்தை மட்டுமே பெற்று பயன்படுத்தி உள்ளன. இதிலிருந்து அந்த திட்டத்தைச் செயல்படுத்துவதில் மாநிலங்களுக்கு உள்ள அக்கறையின்மை வெளிப்படுகிறது.

விசாரணைக் கைதியாக இருந்தால் பிணை பெற்று ஏழு நாள்களுக்குள் விடுதலையாகி வெளியே செல்லாவிட்டால் அது குறித்த விவரத்தை சிறை நிர்வாகம் மாவட்ட சட்ட உதவி மையச் செயலருக்கு தெரிவிக்க வேண்டும். அவரது தொடர் நடவடிக்கைக்குப் பிறகு மாவட்ட ஆட்சியரை உள்ளடக்கிய அதிகாரம் பெற்ற குழு, பிணைத் தொகை என்றால் ரூ.40,000 வரையிலும், தண்டனை பெற்ற கைதிக்கு அபராதத் தொகை என்றால் ரூ. 25,000 வரையிலும் 'ஏழை சிறைக் கைதிகள் ஆதரவு' திட்ட நிதியிலிருந்து பெற்று தொடர்புடைய கைதிகளுக்கு அளித்து அவர் கள் விடுதலை பெற உதவலாம்.

ஏழைகள், சமுதாயத்தில் பின்தங்கியவர்கள், குறைவான கல்வி அறிவு பெற்றவர்கள், குறைந்த வருவாய் பிரிவினர் ஆகி யோர் இந்த நிதியுதவியைப் பெற்றுக் கொள்ளலாம் என திட்ட செயலாக்க விதிமுறைகள் தெளிவாகக் கூறுகின்றன. சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 42 % கைதிகள் 10-ஆம் வகுப்புக்கும் குறைவாகவே படித்தவர்கள் என்றும், சுமார் 28 % பேர் கல்வி அறிவு இல்லாதவர்கள் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கைதிகளில் பெரும்பாலானவர்கள் ஏழைகளாகவும், சமூகத்தில் பின்தங்கியவர்களாகவும் இருக்கிறார்கள்.

ஏழை சிறைக்கைதிகள் ஆதரவு திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தினால் கைதிகள் பயன்பெறுவது மட்டுமின்றி, சிறைச் சாலைகளில் நெரிசல் குறையும். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் பலமுறை மாநில அரசுகளின் உள்துறை செயலர்கள் மற்றும் சிறைத் துறை தலைவர்களுக்கு காணொலிக் காட்சி வாயிலாகவும் கடிதங்கள் மூலமும் அறிவுறுத்தியும் பயன் இல்லை.

மத்திய சிறைகள் முதல் கிளைச் சிறைகள் வரை மொத்தம் உள்ள 1,370 சிறைச் சாலைகளின் கொள்ளளவு சுமார் 4.36 லட்சம் பேர் மட்டுமே. ஆனால் தற்போது அவற்றில் சுமார் 5,32 லட்சம் பேர் அடைக்கப்பட்டுள்ளனர். அதிலும் 176 சிறைக ளில் அவற்றின் கொள்ளளவைவிட இரண்டு மடங்கு அதிகமாகக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாக இந்த ஆண்டின் இந்திய நீதி அறிக்கை' தெரிவிக்கிறது. 12 சிறைச் சாலைகளில் நான்கு மடங்கு அதிகமாகக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் சிறைச் சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் 76 % பேர் விசாரணைக் கைதிகள் என்பதுதான் அதிர்ச்சி தரும் தகவல். இவர்களில் பெரும்பாலானவர்கள் 3 ஆண்டுகளுக்கு மேலாகவும், சிலர் 5 ஆண்டுகளுக்கு மேலாகவும் விசாரணைக் கைதிகளாகவே உள்ளனர் என்பது வேதனை.

தமிழ்நாட்டில் உள்ள சிறைச் சாலைகளின் நிலை ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இங்குள்ள 139 சிறைச் சாலைகளில் 15-இல் மட்டுமே முழு கொள்ளளவில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். மொத்த சிறைகளின் கொள்ளளவில் 76 % மட்டுமே கைதிகள் உள்ளனர்.

சிறைக் காவலர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. சிறைச் சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது கைதிகளுக்கிடையே அவ்வப்போது சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுகின்றன. சட்டவிரோத பொருள்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் கைதிகளுக்குள் மோதல் சம்பவங்கள் நிகழ்கின்றன.

சிறைச் சாலைகளில் கூட்டம் குறையும்போது, உணவு, தண் ணீர், மின்சாரம், காவலர்கள் தேவை போன்றவையும் குறையும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதுமட்டுமின்றி எஞ்சியிருக்கின்ற கைதிகளை நல்ல முறையில் பராமரிக்க முடியும் என்பதோடு நிர்வாகமும் செம்மைப்படும்.

ஏழை சிறைக் கைதிகள் ஆதரவு திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்தினால், பணம் இல்லாததால் சிறைகளில் ஆண்டுக்கணக்கில் வாடி வதங்கிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான கைதிகள் விடுதலை பெற முடியும்: நெரிசல் குறையும்.

பெரும்பாலான கைதிகள் இந்த திட்ட நிதியுதவியைப் பெறுவதற்கு வழிவகை இருந்தும் அது பயன்படுத்தப்படாமல் இருப்பது மாநில அரசுகளின் தவறு என்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. ஊழல் வழக்கு, பணச் சலவை வழக்கு மற்றும் சட்டவிரோத செயல்பாடுகளுக்காக சிறைக்கு வந்தவர்கள் பிணைபெற்று வெளியே வந்துவிடுகிறார்கள். அப்பாவிகள் பிணை பெறமுடியாமல் சிறையில் வாடுகிறார்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com