விடை புரியா விபத்து!

ஒட்டுமொத்த இந்தியாவையும் கண்ணீரில் மூழ்க வைத்துவிட்டது அகமதாபாத் வானூர்தி விபத்து.
plane crash ani image
விமான விபத்துani
Published on
Updated on
2 min read

ஒட்டுமொத்த இந்தியாவையும் கண்ணீரில் மூழ்க வைத்துவிட்டது அகமதாபாத் வானூர்தி விபத்து. கண்ணிமைக்கும் நேரத்தில் 265 உயிர்களைக் காவு கொண்டிருக்கிறது ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் வானூர்தி. 229 பயணிகள், 12 வானூர்தி ஊழியர்கள் மட்டுமல்லாமல், வானூர்தி நொறுங்கி விழுந்த பி.ஜெ. மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த சிலரும் உயிரிழந்திருக்கிறார்கள்.

அகமதாபாத் வானூர்தி நிலையத்தில் இருந்து கிளம்பிய 32 விநாடியில், சுமார் 825 அடி உயரம் மட்டுமே பறந்த நிலையில், மேலே எழ முடியாமல் விழுந்ததும், நெருப்புக் கோளம் எழுந்ததும், அந்தப் பகுதியே புகையால் மூடப்பட்டதும், தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தன. லண்டன் வரை செல்லும் வானூர்தி என்பதால், எரிபொருள் முழுமையாக நிரப்பப்பட்டிருந்ததால் வானூர்தி விழுந்து நொறுங்கியதும் தீப்பிடித்ததில் வியப்பில்லை.

உயிரிழப்பு அடிப்படையில் பார்த்தால், இந்தியாவில் நிகழ்ந்திருக்கும் இரண்டாவது பெரிய வானூர்தி விபத்து தற்போது நடந்திருக்கிறது. 1996-இல் ஹரியாணா சர்கி தாத்ரியில் சவூதி அரேபியா வானூர்தியும், கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் வானூர்தியும் வானத்தில் மோதிக்கொண்டதில் 349 பேர் உயிரிழந்தனர்; ஒருவர்கூட உயிர் பிழைக்கவில்லை.

அந்த விபத்துக்குப் பிறகுதான், வானூர்திகள் வானில் ஒன்றோடு ஒன்று மோதாமல் இருப்பதைத் தடுப்பதற்கான 'டிராஃபிக் கொலிஷன் அவாய்டன்ஸ் சிஸ்டம்' (டிசிஏஎஸ்) எல்லா வானூர்திகளிலும் பொருத்தப்பட்டது. ஹரியாணா விபத்துக்குப் பிறகு நான்காவது வானூர்தி விபத்து இப்போது நடந்திருக்கிறது.

வானூர்தி விபத்துகள் என்பது அடிக்கடி நிகழ்வன அல்ல. எப்போதாவதுதான் நடக்கின்றன. 2020 ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு குறிப்பிடும்படியான கோர விபத்து இப்போதுதான் நிகழ்ந்திருக்கிறது. அவ்வப்போது என்ஜின் கோளாறுகள், குளிர் சாதனம் செயல்படாமல் இருத்தல், மின்கலப் பிரச்னை போன்றவை ஏற்படுவதும், வானூர்தி கிளம்புவதற்கு முன்பே சரிசெய்யப்படுவதும் வழக்கம்.

போயிங் நிறுவனத்தின் 787 ட்ரீம்லைனர் வானூர்தி விபத்துக்குள்ளானது உலகிலேயே இதுதான் முதல்முறை. 2011-இல் அறிமுகப்படுத்தப்பட்ட ட்ரீம்லைனர்தான் உலகிலேயே மிகவும் பாதுகாப்பான வானூர்தி என்று கருதப்படுகிறது. ஜனவரி 2013-இல் அமெரிக்க வானூர்தி கட்டுப்பாட்டு அமைப்பு அதன் மின்கலம் குறித்த புகாரை விசாரிக்க முற்பட்டது. உடனே அது சரிசெய்யப்பட்டது. போயிங் நிறுவனத்தின் 1,175 '787' ரக வானூர்திகள் இயங்குகின்றன.

அறிமுகப்படுத்தப்பட்ட கடந்த 14 ஆண்டுகளில், இப்போதைய விபத்துவரை ட்ரீம்லைனரின் பாதுகாப்பு, அச்சம் ஏற்படுத்துவதாக இல்லை. அது மட்டுமல்ல, விபத்துக்குள்ளான வானூர்தி தயாரிக்கப்பட்டு 11 ஆண்டுகள்தான் ஆகின்றன. தினந்தோறும் 2,100 தடங்களில் பறக்கும் 1,175 போயிங் ட்ரீம்லைனர் வானூர்திகள் இதுவரை சுமார் 100 கோடிப் பயணிகளை எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஏற்றிச் சென்றிருக்கின்றன.

ஒருபுறம் வானூர்திகளின் எண்ணிக்கையும், பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவரும் நிலையில், வானூர்தி விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆண்டொன்றுக்கு 1,148 விபத்துகள் இருந்ததுபோய், கடந்த 2024-இல் 244 விபத்துகள்தான் உலகளாவிய அளவில் நிகழ்ந்திருக்கின்றன; 2023-இல் வெறும் 72 மட்டுமே. பெரும்பாலானவை தரையிறங்கும்போது பாதையில் இருந்து விலகுதல், புறப்படுவதற்கு முன்னால் இயந்திரக் கோளாறு, சக்கரங்களின் சுழற்சியின்மை போன்றவைதான்.

4,56,000 பயணங்களில் ஒரு விபத்து என்பதாக இருந்தது, இப்போது 8,10,000 பயணங்களில் ஒன்று என்கிற நிலைக்குக் குறைந்திருக்கிறது. பெரியதும், சிறியதுமான ஒவ்வொரு விபத்துக்குப் பிறகும் விசாரணைகள் நடத்தப்பட்டு, தவறுகளில் இருந்து பாடம் படிக்காமல் இல்லை; தவறுகள் திருத்தப்படுகின்றன. தொழில்நுட்ப மேம்பாடு பாதுகாப்பை அதிகரித்திருக்கிறது. ஆனால் விபத்து இல்லாத பாதுகாப்பான பயணம் உறுதிப்பட வேண்டும் என்கிற இலக்கு இன்னும்கூட எட்டப்படாமல் இருக்கிறது என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.

ஏர் இந்தியாவும், இண்டிகோவும் ஏனைய வானூர்தி சேவை நிறுவனங்களும் சுமார் 1,200 வானூர்திகளை வாங்க ஒப்பந்தம் செய்திருக்கின்றன. உலகின் மூன்றாவது பெரிய பயணிகள் வானூர்தி சேவை வழங்கும் நாடாக இந்தியா வளர்ந்திருக்கிறது. சரக்கு சேவை என்று எடுத்துக்கொண்டால் ஆறாவது இடம்.

நரேந்திர மோடி அரசு 'உடான்' திட்டத்தில் காட்டும் முனைப்பு காரணமாக சிறிய நகரங்களில்கூட வானூர்தி நிலையங்கள் தொடங்கப்பட்டு, சேவை வழங்கப்படுகிறது. 'சாமானியர்களுக்கும் வானூர்தி சேவை' என்ற கனவு நனவாகி வரும் நேரமிது. அப்படி இருக்கும்போது விபத்துகள் சிறியதோ, பெரியதோ ஏற்புடையதல்ல.

8,000 மணி நேரத்துக்கும் அதிகமாகப் பறந்திருக்கும் திறமையான ஓட்டுநர் இருந்தும் வானூர்தி விபத்துக்குக்குள்ளானது ஏன்? பறவை மோதியதா?, இல்லை இயந்திரக் கோளாறா?, மனிதத் தவறா அல்லது தொழில்நுட்பக் கோளாறா?, அகமதாபாத் வானூர்தி விபத்துக்கான காரணம் என்ன என்று நிபுணர்கள் குழம்பிப்போய் இருக்கிறார்கள்.

தினந்தோறும் சாலை விபத்துகளில் 474 பேர் உயிரிழக்கிறார்கள் என்பது வானூர்தி விபத்துகளை நியாயப்படுத்தாது. பாதுகாப்பான வானூர்தி பயணம் உறுதிப்பட வேண்டும்.

அகமதாபாத் வானூர்தி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை. அவர்களது துக்கத்தில் 'தினமணி' பங்கு கொள்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com