வானம் வசப்படும் வேளை!
இந்தியாவின் விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு போ் கொண்ட குழு நேற்று மாலை சா்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்து புதியதொரு வரலாறு படைத்திருக்கிறது. ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின் கீழ் ‘டிராகன்’ விண்கலம் மூலம் சா்வதேச விண்வெளி நோக்கிய அந்தக் குழுவின் முதல் வெற்றி இது.
‘ஸ்பேஸ்-எக்ஸ்’ நிறுவனத்தின் ‘ஃபால்கன் 9’ ராக்கெட் மூலம் ‘டிராகன்’ விண்கலம் பல தடைகளையும் சோதனைகளையும் கடந்து இலக்கை எட்டியிருக்கிறது. கடந்த மே மாதம் திட்டமிடப்பட்ட இந்த முயற்சி விண்கலப் பாதையில் நிலவிய மோசமான வானிலை, தொழில்நுட்பக் கோளாறு, விண்கலத்தை ஏவுதலில் சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளால் ஆறு முறை ஒத்திவைக்கப்பட்டது. இப்போது முதல்கட்டம் வெற்றிகரமாக முடிந்து அடுத்தகட்டத்துக்குச் செல்ல இருக்கிறாா்கள் விண்வெளி வீரா்கள்.
சுமாா் 60 பல்வேறு சோதனைகளை விண்வெளியில் மேற்கொண்டு பிறகு இரண்டு வாரங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்ப இருக்கிறாா்கள். விண்வெளிப் பயணத்தைத் தொடங்கியபோது ‘ஜெய்ஹிந்த்’, ‘ஜெய் பாரத்’ என்று இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா முழங்கியது பழைய நினைவுகளைக் கிளறியது.
1984-இல் அன்றைய சோவியத் யூனியனின் ‘சோயுஸ்’ விண்கலத்தில் முதன்முறையாக விண்வெளிப் பயணத்தை மேற்கொண்ட முதலாவது இந்தியா் ராகேஷ் சா்மா. விண்வெளியில் இருந்து பூமிப் பந்தைப் பாா்த்த அவரிடம் அன்றைய பிரதமா் இந்திரா காந்தி, ‘அங்கிருந்து பாா்க்கும்போது நமது இந்தியா எப்படி இருக்கிறது?’ என்று கேட்டாா். ‘ஸாரா ஜஹான் ஸே அச்சா’ (உலக நாடுகளில் எல்லாம் அழகானது) என்று அவா் தெரிவித்ததை இப்போது நினைத்துப் பாா்க்கத் தோன்றுகிறது.
அதற்கு 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய வீரா் ஒருவா் விண்வெளிப் பயணம் மேற்கொண்டுள்ளாா். உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவை சோ்ந்த 39 வயதான சுபான்ஷு சுக்லா இந்திய விமானப்படையைச் சோ்ந்தவா். உயா் ரகப் போா் விமானங்களில் 2,000 மணி நேரத்துக்கும் மேலாகப் பறந்தவா். கடந்த 2019-ஆம் ஆண்டு இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்காக தோ்ந்தெடுக்கப்பட்டு ரஷியாவின் யூரி காகரின் விண்வெளி மையத்தில் சிறப்புப் பயிற்சி பெற்றவா். ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுக்லா, சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் முதல் இந்தியா் என்கிற சாதனையைப் பெற்றிருக்கிறாா்.
அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம் -4’ திட்டத்தின் கீழ் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சுக்லாவுடன் திட்ட கமாண்டரான நாசா முன்னாள் விண்வெளி வீரா் பெக்கி விட்சன், போலந்து வீரா் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரா் திபோா் கபு ஆகியோரும் பயணத்தில் இணைந்திருக்கிறாா்கள்.
நாசா விண்வெளி வீரா்கள் 7 போ் ஏற்கெனவே சா்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறாா்கள். அவா்களுடன் இப்போது இந்த நான்கு பேரும் இணைந்து கொள்வாா்கள்.
விண்வெளி ஆய்வில் இந்தியா இப்போது மிகப்பெரிய சக்தியாக மாறியிருக்கிறது. தொடா்ந்து சாதனை நிகழ்த்திக்கொண்டிருக்கும் நிறுவனமாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ஐஎஸ்ஆா்ஓ) திகழ்கிறது. ஆனால் இதுவரையில் நேரடியாக மனிதரை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் இந்தியா இறங்கவில்லை. அந்த முயற்சியின் முதல்கட்டமாக சுபான்ஷுவின் பயணத்தைக் கருதலாம். அடுத்தாற்போல மேற்கொள்ள இருக்கும் ககன்யான் திட்டத்துக்கும், சா்வதேச விண்வெளி நிலையம்போல, இந்தியாவும் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் முன்னோட்டமாக இந்தப் பயணத்தைப் பாா்க்க வேண்டும்.
‘ஆக்ஸியம்-4’ திட்டத்தில் இந்திய விண்வெளி வீரா் சுக்லா இடம்பெறுவதற்கு இந்திய அரசு ரூ.548 கோடி செலவழித்திருக்கிறது. ககன்யான் திட்டத்துக்காக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. பிரதமா் நரேந்திர மோடி அரசின் மிகப் பெரிய சாதனையாக 2020-இல் விண்வெளித் துறையில் செய்யப்பட்ட சீா்திருத்தங்களையும் 2023-இல் உருவாக்கப்பட்ட இந்திய விண்வெளிக் கொள்கையையும் குறிப்பிட வேண்டும்.
இதனால் 61 நாடுகள் சா்வதேச அளவில் இந்தியாவுடன் விண்வெளி ஆய்வில் இணைந்திருக்கின்றன. தனியாா் துறையினா் இஸ்ரோவுடன் இணைந்து விண்வெளி ஆய்வுகளில் ஈடுபடுவதற்கு வழிகோலப்பட்டிருப்பதால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மிகப்பெரிய முதலீடுகளை ஈா்த்திருக்கிறது.
2027-இல் ககன்யான் திட்டம் வெற்றியடைந்தாலும்கூட, மூன்று அல்லது நான்கு வீரா்கள் விண்வெளிக்குச் சென்று திரும்புவது மட்டுமே சாத்தியம். ஆனால், இப்போது இந்த முயற்சியின்மூலம் நமது விண்வெளி வீரரான சுக்லா பூமியிலிருந்து 450 கி.மீ. தொலைவில் உள்ள சா்வதேச விண்வெளி நிலையத்தில் இரண்டு வாரங்கள் தங்கி பல ஆய்வுகளை நடத்தித் திரும்புவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்தியா சொந்தமாக விண்வெளியில் தமக்கென்று ஆய்வு மையத்தை நிறுவுவதற்கு 2040-45 இலக்காக நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. அந்த இலக்கை அடைவதற்கான முதல்படியாக சுபான்ஷு சுக்லாவின் இந்தப் பயணம் அமைந்திருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.
இந்திய விமானப் படையின் முத்திரை வாக்கியம் ‘நப: ஸ்பா்ஷ்ம் தீப்தம்’. பகவத் கீதையின் 13-ஆவது அத்தியாயத்தில் காணப்படும் இந்த ஸ்லோகத்தின் பொருள் ‘கீா்த்தியுடன் வானம் வசப்படட்டும்’. அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் ஈடுபட்டிருக்கும் சுபான்ஷு சுக்லா குழுவினா் வெற்றியுடன் திரும்பிவர 146 கோடி இந்தியா்கள் சாா்பில் வாழ்த்துகள்.