

இந்தியாவில் வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 5.1 சதவீதமாக இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய புள்ளியியல் அமைச்சக அலுவலகம் சார்பில் பீரியாடிக் லேபர் ஃபோர்ஸ் சர்வே அமைப்பு மூலம் முதல்முறையாக மாதாந்திர அடிப்படையில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2024 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான வேலையின்மை விகிதம் 4.9 சதவீதமாக இருந்த நிலையில், அது தற்போது அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
இதில் பெண்களை விட, ஆண்களின் விகிதாசாரம் சற்று அதிகமாக உள்ளது. தேசிய அளவில் வேலையில்லாமல் இருக்கும் பெண்களின் விகிதம் 5 சதவீதமாகவும், ஆண்களின் விகிதம் 5.1 சதவீதமாகவும் உள்ளது. ஒட்டுமொத்தமாக அனைத்து வயதுப் பிரிவிலும் இருபாலரையும் சேர்த்து கணக்கிடும்போது, வேலையின்மை விகிதம் 5 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதும் 80,000 குடும்பங்களைச் சேர்ந்த 3.8 லட்சம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வாரத்தில் ஏழு நாள்களில் கிடைத்த வேலைவாய்ப்பின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு முடிவுக்கு வரப்பட்டுள்ளது. அதன்படி, ஒருவருக்கு வாரத்தில் எந்த நாளிலும் ஒரு மணி நேரம் கூட வேலை கிடைக்காதது அல்லது வேலை தேடி வாரத்தில் ஒரு மணி நேரம் மட்டுமே வேலை கிடைத்திருந்தாலும் அவர் வேலையில்லாதவர் எனக் கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊரகப் பகுதிகளில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களின் வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 4.9 சதவீதமாக இருந்தது. இதுவே பெண்களின் வேலையின்மை விகிதம் 3.9 சதவீதமாகும். ஊரகப் பகுதிகளில் பெண்களுக்கான வேலையின்மை விகிதம் ஆண்களைவிட சற்றே குறைவாகக் காணப்பட்ட நிலையில், நகரப் பகுதியில் இதே வயதுடைய ஆண்களின் வேலையின்மை விகிதம் 5.8 சதவீதமாகவும், பெண்களின் விகிதம் 8.7 சதவீதமாகவும் உள்ளது. நகரப் பகுதிகளைப் பொருத்தவரை பெண்களின் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது.
ஊரகப் பகுதிகளில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 79 சதவீதம் பேர் பணியாற்றும் நிலையில், பெண்கள் 38.2 சதவீதத்தினரே வேலை செய்கின்றனர். இதுவே நகர்ப்புறங்களில் பெண்கள் 25.7 சதவீதமும், பணியாற்றும் ஆண்களின் விகிதம் 75.3 சதவீதமுமாக உள்ளது. பருவமழையின்போது விவசாயம் சார்ந்த தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்போது, ஜூலையில் வேலையின்மை விகிதம் குறைய வாய்ப்புள்ளது.
வேலைவாய்ப்பின்மைக்கான முக்கியக் காரணிகளில் மக்கள்தொகை பெருக்கம் முதன்மையானது. கல்வியின்மை, தொழிலாளர் சார்ந்த நிறுவனங்களில் முதலீடு குறைவது, வேளாண் தொழிலில் உற்பத்தி குறைவதால் அந்தத் தொழிலாளர்களுக்கு மாற்று வழி இல்லாதது, சிறிய நிறுவனங்களுக்கு அரசு ஆதரவு இல்லாமை போன்றவையும் வேலையின்மைக்கு பிற காரணங்களாக உள்ளன.
உயர் கல்வி பயின்றோர் அதிகமுள்ள கேரளம் போன்ற மாநிலங்களில் வேலையின்மை விகிதம் அதிகம் உள்ளது. அதுவே பட்டதாரிகள் எண்ணிக்கை குறைவாக உள்ள குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களில் வேலையின்மை விகிதம் குறைவாக உள்ளது. உயர் கல்வி பயின்றோர் தங்கள் படிப்புக்கேற்ற பணியை எதிர்நோக்கி காத்திருப்பது, அதிக ஊதியம் தரும் வேலைக்கு மட்டுமே செல்ல வேண்டும் என முடிவுடன் இருப்பது, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவரும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையிலான நவீன துறைகளின் வளர்ச்சியின்மை போன்றவையும் வேலையின்மைக்கு பிற காரணிகளாக அமைகின்றன.
மாநில அரசுகளின் கொள்கை முடிவுகளும் தொழில் வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் இருக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தில் நிரந்தர மற்றும் முழுநேர வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு முன்னெடுப்புகளைத் தொடங்க வேண்டும்.
பொறியியல் பட்டதாரி குறைந்த ஊதியத்தில் சேவைத் துறை தொடர்பான பணியைப் புறக்கணிப்பது, தொழில் துறையில் நவீன இயந்திரங்களின் பயன்பாடு அதிகரிப்பதால் தொழிலாளர்கள் வேலையிழப்பது, சுற்றுலா, உணவகம் மற்றும் விடுதி சார்ந்த தொழிலில் சீசன் இல்லாத நேரங்களில் அதில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் வேலையின்றி இருப்பது, அண்மைக்காலமாக வளர்ந்து வரும் உணவு விநியோகம், போக்குவரத்துத் தொழிலில் ஈடுபட்டுள்ள முறைசாரா தொழிலாளர்கள் (கிக் தொழிலாளர்கள்), குறைந்த ஊதியம் மற்றும் பணிப் பாதுகாப்பில்லாத நிலையில் பணியாற்றுவதும் அவர்களுக்கான முறையான வேலைவாய்ப்பு இல்லாததைக் காட்டுகிறது.
2024-ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையில், செயற்கை நுண்ணறிவு இந்தியாவில் வேலைவாய்ப்புகளைப் பாதிக்கும் வகையில் இருக்கக்கூடும். அந்தத் தொழில்நுட்பத்தில் உள்ள நல்ல விஷயங்களைப் பயன்படுத்திக் கொண்டு, அதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான அம்சங்களை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
நலத் திட்டங்களை செயல்படுத்த, வேலைவாய்ப்பை அதிகரிக்க கொள்கை உருவாக்கம் போன்ற விஷயங்களுக்கு ஆதாரமாக வேலையின்மை புள்ளிவிவரங்கள்தான் உள்ளன. அனைத்து நாடுகளும் குறிப்பிட்ட கால இடைவெளியில் வேலையின்மை புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன. அமெரிக்கா போன்ற பொருளாதார வல்லமை மிக்க நாடுகள் மாதந்தோறும் வேலையின்மை விவரத்தை வெளியிட்டு வருகின்றன.
அந்தவகையில், இந்திய அரசும் வேலையின்மை புள்ளிவிவரங்களை மாதந்தோறும் வெளியிடும் முயற்சியாக ஏப்ரல் மாத கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது ஆரோக்கியமான விஷயமாகும். அரசின் இந்த நிலைப்பாடு வேலையின்மை விகிதத்தைக் குறைப்பதற்கான முயற்சியின் ஒரு நடவடிக்கையே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.