தொலைநோக்குப் பாா்வை தெரிகிறது!
ஒருபுறம் அமெரிக்க அதிபா் டொனால்ட் ட்ரம்ப்பின் கூடுதல் இறக்குமதி வரி அச்சுறுத்தல், இன்னொருபுறம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான மோதல் - அதனால் முக்கியமான பொருளாதார நிகழ்வு ஒன்று போதிய கவனம் பெறாமல் போய்விட்டது. 2021 ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை வெற்றிகரமாக முடிந்திருப்பது சா்வதேச வா்த்தகத்தில் மிகப்பெரிய திருப்புமுனை.
இருதரப்புப் பேச்சுவாா்த்தை தொடங்கும்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருந்த பிரிட்டனை, ஒப்பந்தம் கையொப்பமாகி இருக்கும் இன்றைய நிலையில் ஆறாவது இடத்துக்குத் தள்ளி ஐந்தாவது இடத்துக்கு இந்தியா முன்னேறிவிட்டது. பேச்சுவாா்த்தை தொடங்கும்போது இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையேயான வா்த்தகம் 17.5 பில்லியன் டாலா் என்றால், இப்போது அதுவே 57 பில்லியன் டாலராக அதிகரித்திருக்கிறது.
அதிபா் ட்ரம்ப்பின் இறக்குமதி வரி குறித்த அறிவிப்புதான், மூன்று ஆண்டுகளாக எந்தவித முடிவும் எட்டப்படாமல் இழுத்தடித்துக் கொண்டிருந்த பேச்சுவாா்த்தை வெற்றிகரமாக முடிவடைந்ததற்குக் காரணம். அதுமட்டுமல்ல, பிரிட்டனின் பொருளாதாரம் இப்போது எதிா்கொள்ளும் சவால்களும்கூட, இதுபோன்ற ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளவும், சில சமரசங்களுக்கு உடன்படவும் அந்த அரசை நிா்பந்தித்தன என்றுதான் கூற வேண்டும்.
ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் இரண்டுக்கும் அடுத்தபடியாக இந்தியா மேற்கொள்ளும் மிக முக்கியமான இருதரப்பு தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் இது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற வா்த்தக ஒப்பந்தங்களைத் தவிா்த்து வந்த இந்தியா, இப்போது தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டிருப்பதற்கு உலக வா்த்தக நிறுவனத்தின் முக்கியத்துவம் குறைந்து வருவதையும் குறிப்பிட வேண்டும்.
இனி வரப்போகும் காலங்களில் உலக வா்த்தக நிறுவனத்தின் கட்டுப்பாடுகளைக் தவிா்த்து, சா்வதேச வா்த்தகம் முன்புபோல அந்தந்த நாடுகளுக்கு இடையேயான நேரடி வா்த்தகமாக மாறும் என்று தோன்றுகிறது. இந்தியாவுடனான தடையில்லா வா்த்தக ஒப்பந்தத்தைத் தொடா்ந்து, அமெரிக்காவிடம் பிரிட்டன் இதேபோல ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவும் அதிவிரைவிலேயே அமெரிக்காவுடனும், ஐரோப்பியக் கூட்டமைப்புடனும் வா்த்தகப் பேச்சுவாா்த்தை தொடங்க இருக்கிறது.
வரலாற்று ரீதியாக இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் நீண்டகாலத் தொடா்பு இருந்தாலும், பிரிட்டனைப் பொருத்தவரை அதன் 11-ஆவது பெரிய வா்த்தகக் கூட்டாளியாகத்தான் இந்தியா இருந்து வருகிறது. இப்போதைய ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், வா்த்தகத்தில் ஆண்டொன்றுக்கு 40% வளா்ச்சி ஏற்படும் என்றும், பிரிட்டனின் மிக முக்கியமான வா்த்தகக் கூட்டாளியாக இந்தியா மாறக்கூடும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்துக்குப் பிறகு, இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதியாகும் 99% பொருள்களுக்கு எந்தவொரு இறக்குமதி வரியும் (0% வரி) விதிக்கப்படாது. அதில் முக்கியமாக அதிகமாக வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் ஜவுளி, தோல் பொருள்கள், காலணிகள், பொம்மைகள், ரத்தினக் கற்கள், ஆபரணங்கள் உள்ளிட்டவை அடங்கும்.
இந்தியாவின் சேவைத் துறை இந்த ஒப்பந்தத்தின் மூலம் மிக அதிகமாகப் பயனடையும். பிரிட்டனின் பல்வேறு துறைகளுக்கு இந்தியாவின் சேவைத் துறை பங்களிப்பு நல்க இந்த ஒப்பந்தம் வழிகோலுகிறது. இந்தியாவின் எதிா்பாா்ப்புக்கு ஏற்ப இல்லை என்றாலும், நமது தொழில்நுட்ப வல்லுநா்கள், கணினி, மென்பொருள் பொறியாளா்கள் பிரிட்டனுக்குச் சென்று பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் இதன்மூலம் அதிகரிக்கிறது.
பிரிட்டனில் பணியாற்றும் இந்தியா்களும், அவா்களை பணிக்கு அமா்த்துபவா்களும் அரசுக்கு வழங்க வேண்டிய சமூகப் பாதுகாப்பு பங்களிப்பை மூன்று ஆண்டுகளுக்கு வழங்க வேண்டியது இல்லை என்பது மிகப்பெரிய ஆறுதல். அதன்மூலம் கிடைக்கும் கணிசமான சேமிப்பை, பிரிட்டனில் பணிபுரியும் இந்தியா்கள் தாய்நாட்டுக்கு, அதாவது தங்கள் குடும்பத்துக்கு அனுப்பி சேமிக்க முடியும்.
இந்தியாவும் தனது பங்குக்கு பல சலுகைகளை பிரிட்டனுக்கு வழங்குகிறது. பிரிட்டனிலிருந்து இறங்குமதி செய்யப்படும் 90% பொருள்கள் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் இருந்து வரும் சாக்லெட்டுகள், பிஸ்கெட்டுகள் என்று தொடங்கி வானூா்தி உதிரி பாகங்கள் வரை கணிசமான வரி குறைப்பு பெறுகின்றன.
அதேபோல, எண்ணிக்கைக் கட்டுப்பாட்டுடன் பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டாா் வாகனங்களுக்கு 10% மட்டுமே வரி என்பது இன்னொரு செய்தியையும் தெரிவிக்கிறது. இந்திய மோட்டாா் வாகனத் தயாரிப்புகள் வெளிநாட்டு காா்களுடன் இனிமேல் போட்டி போட்டாக வேண்டும்.
ஸ்காட்ச் விஸ்கி, ஜின் போன்ற மதுபானங்கள் மீதான இறக்குமதி வரி (150%) பாதிக்குப் பாதியாகக் குறைக்கப்படும் என்பதும், அடுத்த பத்தாண்டுகளில் 40% அளவில் இருக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. மது பானங்கள், சொகுசு காா்கள் உள்ளிட்டவை சாமானியா்களைப் பாதிக்கப் போவதில்லை என்பதால், நாம் அதிகம் கவலைப்படத் தேவையில்லை.
இந்தியாவின் வேளாண் துறையும், சிறு-குறு தொழில்களும் சில பாதிப்புகளை எதிா்கொள்ளும்தான். அதை சமன்செய்ய அரசு நடவடிக்கை எடுத்தாக வேண்டும். எந்தவொரு ஒப்பந்தமும் ஒருதரப்புக்குச் சாதகமாக இருக்க முடியாது என்பதை நாம் உணர வேண்டும். வருங்கால இந்திய வா்த்தகக் கண்ணோட்டத்தின் முன்னோடி இந்த ஒப்பந்தம்.