

டிசம்பர்-ஜனவரி மாதங்கள் வந்துவிட்டாலே தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவன ஊழியர்களை ஒருவித பதற்றம் தொற்றிக் கொள்ளும். இந்த மாதங்களில்தான் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர். ஆனால், நிகழாண்டு அக்டோபர் மாதத்திலேயே சுமார் 1.50 லட்சம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில், இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் இதுவரையில் சுமார் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதேபோல், பிரபல "சிப்' தயாரிப்பு நிறுவனமான "இன்டெல்' 24,000 பேரையும், டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (டி.சி.எஸ்.) 6,000 பேரையும், அக்ஸெஞ்சர் 12,000 பேரையும், மைக்ரோசாப்ட் நிறுவனம் 9,000 பேரையும், ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 600 பேரையும் பணிநீக்கம் செய்துள்ளதாக வணிக இணைய தளமான லே-ஃஆப் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
இந்த எண்ணிக்கை வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என சந்தை கணிப்புகள் கூறுகின்றன. ஆண்டு இறுதிக்குள் சுமார் 11 லட்சம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டைவிட 65% அதிகம் என்றும் கூறுகிறது அமெரிக்காவின் பிரபல வேலைவாய்ப்பு நிறுவனமான சேலஞ்சர், கிரே அண்ட் கிறிஸ்துமஸ்.
ஊழியர்கள் பணிநீக்கத்துக்கு பொருளாதார மந்தநிலை, வாடிக்கையாளர்களின் செலவு குறைப்பு மற்றும் மாறி வரும் தேவைகள், நிறுவன விரிவாக்கம் எனப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.
எனினும், அதிகரித்துவரும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) பயன்பாடே பிரதான காரணமாக கூறப்படுகிறது. கடந்த 2022-இல் "சாட்-ஜிபிடி' தொழில்நுட்பம் பெருநிறுவனங்களில் அறிமுகம் செய்யப்பட்டபோது அமெரிக்காவில் பணியாளர்களிடையே சற்று பதற்றம் ஏற்பட்டது.
யேல் பல்கலைக்கழகத்தின் "பட்ஜெட் லேப்' மையம் கடந்த 2022 முதல் 2025 வரையிலான காலத்தில் கலப்பு தொழில்நுட்பப் பயன்பாடு குறித்து மேற்கொண்ட ஆய்வு முடிவை அண்மையில் வெளியிட்டுள்ளது. அதில், பரவலான பணியாளர்கள் நீக்கத்துக்கு செயற்கை நுண்ணறிவு அறிமுகம் ஒரு காரணம் அல்ல என தெரிய வந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டில் நிறுவனங்கள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதாகத் தெரியவில்லை. அது எந்தெந்தப் பிரிவுகளில் பயன்படுத்தப்படும் என்பது குறித்து ஊழியர்களுக்கு அறிவிப்பதும் இல்லை. செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால் உபரியாகும் பணியாளர்களை வேறு பிரிவுகளில் பணி அமர்த்துவது குறித்தும் நிறுவனங்கள் ஆலோசிப்பது இல்லை என்பது பணிநீக்கத்திலிருந்து தெரிகிறது. கூடுதல்
லாப ஆசை, விரிவாக்கம், புதிய தொழில்நுட்பத்தில் முதலீடு என தன்னலம் சார்ந்தே சிந்திக்கும் நிறுவனங்கள் ஊழியர்கள் நலன் குறித்து கவலை கொள்வதாகத் தெரியவில்லை.
அதுமட்டுமல்லாது, பணிநீக்கம் குறித்த தகவலைக்கூட முறையாக ஊழியர்களுக்கு நிறுவனங்கள் சொல்வதில்லை என்பது கூடுதல் வேதனை. வழக்கமாக பணிக்குச் சென்ற இடத்தில் அடையாள அட்டை, "லேப்-டாப்' போன்றவற்றை பறித்துக் கொண்டு வெளியே அனுப்புவதும் நடக்கிறது. முன்னறிவிப்பு எதுவுமின்றி திடீரென வேலையைவிட்டு நீக்குவது தனிமனிதனுக்கும், குடும்பத்துக்கும், குழந்தைகளுக்கும், சமுதாயத்துக்கும் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை நிறுவனங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
அந்நிய முதலீடு, புதிய வேலைவாய்ப்பு, வளர்ச்சி எனக் கூறி மத்திய, மாநில அரசுகள் பெரு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் பொருளாதாரம் சார்ந்த சலுகைகள் மட்டுமல்லாது தொழிலாளர் நலச் சட்ட அமலாக்கத்திலும் சமரசம் செய்து கொள்கின்றன.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் வேலைவாய்ப்பு பெருகியது என்பதை மறுப்பதிற்கில்லை. ஆனால், அது நீடித்த நிலைத்த ஒன்றாக இல்லாதபோது அதனால் சமுதாயத்துக்கு என்ன பயன் என்ற கேள்வி எழுகிறது.
பெரு நிறுவனங்களில் ஊழியர்கள் பணிநீக்கம் என்பது அவ்வப்போது மறைமுகமாக ஓசையின்றி நிகழக் கூடியதுதான். செயல்பாடுகளில் குறை காணுதல், ஊதியம் மற்றும் பதவி உயர்வுகளைத் தள்ளிப்போடுதல் உள்ளிட்ட நெருக்கடிகளைக் கொடுத்து தானாகவே பதவி விலக வைப்பது போன்ற ஆள்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது உண்டு.
எனினும், இப்போது ஐ.டி. ஊழியர்கள் கொத்து கொத்தாகப் பணிநீக்கம் செய்யப்படுவது தனிமனிதர்களை மட்டுமல்லாது குடும்பங்களையும், நாட்டின் சந்தைப் பொருளாதாரத்தையும் பாதிப்பதால் கவலை கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
உலக நாடுகளில் 2008, 2009- ஆம் ஆண்டுகளில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோதும் ஊழியர்கள் பெருமளவு பணிநீக்கம் செய்யப்பட்டனர். பின்னர், கரோனா பெருந்தொற்று காலமான 2020-இல் ஊழியர்கள் பணிநீக்கம் அதுவரையில் இல்லாத உச்சத்தை எட்டியது. பிறகு தொடர்ந்து 2 ஆண்டுகள் குறைந்திருந்த பணிநீக்கம், இப்போது மீண்டும் ஓர் உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பு குறித்து அரசுகள் இதுவரையில் கவலை கொள்ளாமல் இருந்திருக்கலாம். இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது. பணிநீக்கம் செய்யப்படுவோருக்கு திடீரென ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான
சலுகைகள், மாற்று வேலைக்கான திட்டங்கள், மனநலன் பாதிக்கப்படாமல் இருக்க ஆலோசனை போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டியது அவசியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.