

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்டில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் பங்கேற்ற ஓர் ஆட்டத்தில்கூட தென்னாப்பிரிக்கா வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2012-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்ற 18 டெஸ்ட் தொடர்களில் தோல்வியே காணாமல் வெற்றி மீது வெற்றி பெற்று வந்த இந்திய அணி, கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபர் - நவம்பரில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூஸிலாந்து அணியிடம் 3-0 என தொடரை முழுமையாக இழந்தது. இந்திய அணி கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய பின்னர், 91 ஆண்டுகளில் உள்நாட்டில் தொடரை 3-0 என முழுமையாக இழந்தது அதுவே முதல்முறை.
20 ஓவர் போட்டிகள் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய பின்னர், டெஸ்ட் ஆட்டங்களில் நிலைத்து நின்று ஆடும் போக்கு படிப்படியாக குறைந்து வருகிறது. ஆட்டத்தின் முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாடும் போக்கு, ஆடுகளங்களின் நிலையற்ற தன்மை ஆகியவை காரணமாக டெஸ்ட் ஆட்டங்கள் மூன்று நாள்களுக்கு மேல் நீடிப்பதில்லை.
ஒரு டெஸ்ட் ஆட்டத்தில் ஐந்து நாள்களில் குறைந்தது 450 ஓவர்கள் வீசப்பட வேண்டிய நிலையில் தென்னாப்பிரிக்காவுடனான இந்த டெஸ்ட் இரண்டே முக்கால் நாள்களில் 206.2 ஓவர்களிலேயே நிறைவு பெற்றுள்ளது. நியூஸிலாந்துக்கு எதிரான தொடரிலும் பெங்களூரில் 250 ஓவர்கள், புணேயில் 255 ஓவர்கள், மும்பையில் 201 ஓவர்களிலேயே ஆட்டங்கள் முடிவுக்கு வந்தன.
கொல்கத்தாவில் நடைபெற்ற இப்போதைய தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் முதல் இரண்டு நாள்களில் 26 விக்கெட்டுகள் சரிந்துவிட்டன. ஈடன் கார்டன் மைதானத்தில் சில பந்துகள் கால் முட்டிக்கு கீழும் சில பந்துகள் தலைக்கு மேலும் சென்றதால் பேட்டர்கள் திக்குத்தெரியாமல் திணறினர்.
கடந்த சுமார் 30 ஆண்டுகளில் களம் கண்ட இந்தியாவின் சுநீல் காவஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, சேதேஷ்வர் புஜாரா, ராகுல் திராவிட், விவிஎஸ்.லட்சுமண், இங்கிலாந்தின் ஜோ ரூட், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் போன்று பொறுமையும், ‘டெக்னிக்'கும் உள்ள ஆட்டக்காரர்கள் மட்டுமே இதுபோன்ற மைதானங்களில் ரன்கள் எடுக்க முடியும். அதுபோன்ற பொறுமையை தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா கடைப்பிடித்தார் எனலாம்.
இரண்டாவது நாள் ஆட்ட நேர இறுதியில் தென்னாப்பிரிக்கா 7 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்திருந்தபோது, வெற்றியின் விளிம்பில் இந்திய அணி என எல்லோருமே கருதினர். ஆனால், பவுமா கடைசி வரிசை ஆட்டக்காரர்களுடன் சேர்ந்து 62 ரன்கள் சேர்த்தது தென்னாப்பிரிக்க அணியின் வெற்றியில் பெரும் பங்காற்றியது. இன்னொருபுறம், இந்திய அணியின் தேர்வும் விவாதத்துக்கு உரியதாக உள்ளது. கோலி, ரோஹித் சர்மாவின் ஓய்வுக்குப் பிறகு பெரிய வெற்றிடம் உருவாகி உள்ளது.
முதல் இன்னிங்ஸில் 100 பந்துகளுக்கு மேல் எதிர்கொண்ட ஒரே இந்திய பேட்டர் கே.எல்.ராகுல் மட்டுமே. கேப்டன் ஷுப்மன் கில் காயமடைந்து வெளியேறிய நிலையில், ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பந்த், ஜடேஜா, துருவ் ஜுரேல், அக்ஸர் படேல் என யாருமே டெஸ்ட் ஆட்டங்களில் நீண்ட நேரம் நிலைத்து நின்று உறுதியாக விளையாடக் கூடியவர்கள் என்று சொல்ல முடியாத நிலையிலேயே இந்திய அணி உள்ளது.
இந்திய அணியில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக குல்தீப், ஜடேஜா, அக்ஸர், வாஷிங்டன் என 4 சுழற்பந்துவீச்சாளர்கள் களம் கண்டனர். ஆனால், தென்னாப்பிரிக்காவின் சைமன் ஹார்மர் சிறப்பாகப் பந்துவீசி இரண்டு இன்னிங்ஸ்களிலும் தலா 4 விக்கெட்டுகள் சாய்த்து ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றுவிட்டார். சுழற்பந்துவீச்சுக்கு பெயர் பெற்ற இந்திய அணியை அந்த சுழற்பந்துவீச்சைக் கொண்டே தென்னாப்பிரிக்க அணி சாய்த்துவிட்டது.
முன்புபோல கோட்டைவிடும் அணியாக இல்லாமல், கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே தென்னாப்பிரிக்க அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பவுமா கேப்டனான பிறகு, 11 டெஸ்டுகளில் 10-இல் அந்த அணி வென்றுள்ளது.
கடந்த ஜூனில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 138 ரன்களுக்கு சுருண்டபோதும், நம்பிக்கை இழக்காமல் போராடி நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 282 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டி (சேஸ் செய்து) வென்றது.
அதேபோன்று, கடந்த அக்டோபரில் பாகிஸ்தானுக்கு சென்றபோது, முதல் டெஸ்டை இழந்தாலும் போராடி இரண்டாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா வென்றது.
வெற்றி வலம் வந்துகொண்டிருந்த இந்தியா பின்னடைவையும், தொடர்ந்து தோல்வியைத் தழுவிவந்த தென்னாப்பிரிக்கா வெற்றிமுகமும் காண்பதுதான் கிரிக்கெட் விளையாட்டில் சுவாரஸ்யம். ஒருபுறம் ஆட்டக்காரர்களின் உத்தியில் மாற்றம் தேவை என்றால், ஆடுகளத் தயாரிப்பும் சர்ச்சைக்குரியதாகி இருக்கிறது.
இந்தப் பின்னணியில், அணித் தேர்வில் மாற்றம், ஆடுகளத்தில் மாற்றம், ஆட்டக்காரர்களின் உத்தியில் மாற்றம் மேற்கொண்டு, குவாஹாட்டியில் நவம்பர் 22-இல் தொடங்கும் இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைச் சமன் செய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.