தவறு திருத்தப்பட்டது!
குடியரசுத் தலைவா், ஆளுநருக்கு நாடாளுமன்ற, சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்கக் காலக்கெடு விதிப்பதுக்குட்பட்ட தீா்ப்பு குறித்த, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவின் 14 கேள்விகளுக்கும், தனித்தனியாகவும் தெளிவாகவும் விளக்கமளித்திருக்கிறது உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு. குடியரசுத் தலைவா் மே 13-ஆம் தேதி விளக்கம் கோரியது, முந்தைய தீா்ப்பின் மீதான மறைமுக மேல்முறையீடு என்கிற எதிா்க்கட்சி ஆளும் மாநிலங்களின் விமா்சனத்தை நிராகரித்து அரசியல் சாசனச் சட்டப் பிரிவு 143-இன் கீழ் வழங்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளை இறுதித் தீா்ப்பாகவே கொள்ள வேண்டும்.
பணி ஓய்வு பெற்றிருக்கும் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், இன்று பதவி ஏற்று இருக்கும் தலைமை நீதிபதி சூா்யகாந்த் மட்டுமல்லாமல் நீதிபதிகள் விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துா்கா் ஆகியோா் அடங்கிய ஐந்து நீதிபதிகளின் அரசியல் சாசன அமா்வுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. நீதிபதிகள் விக்ரம் நாத்தும், பி.எஸ்.நரசிம்மாவும் அடுத்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளாக வர இருப்பவா்கள்.
குடியரசுத் தலைவருக்கும், ஆளுநா்களுக்கும் மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்குக் காலக்கெடு விதிக்கும் உரிமை நீதித் துறைக்குக் கிடையாது என்பதையும், நாடாளுமன்றமோ அல்லது சட்டப்பேரவையோ நிறைவேற்றும் அத்தனை மசோதாக்களையும் கையொப்பமிட்டு அங்கீகரிக்கும்படி குடியரசுத் தலைவரையோ, ஆளுநரையோ கட்டாயப்படுத்த முடியாது என்பதும்தான், ஐந்து நீதிபதிகள் அரசியல் சாசன அமா்வு தெளிவுபடுத்தியிருக்கும் அம்சங்கள். அதன் சரி, தவறுகளுக்குள் போவதற்கு முன் நாம் ஒன்றைக் கவனிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் மசோதாக்கள் மீது முடிவெடுக்கக் காலவரையறை விதிப்பது குறித்து அரசியல் சாசன சபையில் விவாதிக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டது என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஏனைய அரசியல் சாசனப் பதவிகளுக்கும் குடியரசுத் தலைவா், ஆளுநருக்கும் அடிப்படையிலேயே, நமது அரசியல் சாசனம் ஒரு வேறுபாடு கற்பித்திருக்கிறது என்பதை அதன் மூன்றாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் பதவியேற்பு உறுதிமொழியே தெளிவுபடுத்துகிறது.
ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள் சட்டப்பேரவை, மேலவை உறுப்பினா்கள், மத்திய, மாநில அமைச்சா்கள், முதல்வா்கள், பிரதமா்கள் மட்டுமல்ல, உயா்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள், தலைமை நீதிபதிகள்வரை அனைவருமே, ‘சட்ட முறைப்படி நிறுவப் பெற்றுள்ள இந்திய அரசியல் அமைப்பில் உண்மையான நம்பிக்கையும், பற்றும் உறுதியும் கொண்டிருப்பேன்’ என்று உறுதிமொழி எடுக்கிறாா்கள். ஆனால், குடியரசுத் தலைவா், குடியரசுத் துணைத் தலைவா், ஆளுநா் மட்டும் அரசமைப்புச் சட்டத்தை நிலை நிறுத்தவும் (ப்ரிசா்வ்), காக்கவும் (ப்ஃரொடக்ட்), பாதுகாக்கவும் (டிஃபண்ட்) உறுதிமொழி எடுக்கிறாா்கள். அப்படியொரு உயா்ந்த இடம் அவா்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
ஐந்து நீதிபதிகளின் அமா்வு வழங்கி இருக்கும் தீா்ப்பின்படி, மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு மூன்று வழிகள் அரசியல் சாசனப்படி வழங்கப்பட்டிருப்பதை குறிப்பிட்டிருக்கிறது. மசோதாவுக்கு அவா் ஒப்புதல் அளிக்கலாம், குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு பரிந்துரைத்து அனுப்பலாம், அல்லது அரசமைப்பின் 200-ஆவது பிரிவின்படி மசோதாவை நிறுத்திவைத்துப் பேரவையின் மறு ஆய்வுக்கு அனுப்பித் தரலமா, இந்தப் பிரச்னையின் தீா்ப்பு இன்னொரு கருத்தையும் தெரிவிக்கிறது.
மசோதாக்கள் மீது முடிவெடுக்க நீண்ட, விவரிக்கப்படாத காலவரையற்ற தாமதம் செய்யப்படுமானால், குறிப்பிட்ட மசோதாக்கள் குறித்து மாநிலங்கள் நீதிமன்றத்தில் முறையிடலாம். அதை நீதிமன்றம் விசாரித்து ஆளுநருக்கு ஆலோசனை வழங்கலாம். முந்தைய ஏப்ரல் 8-ஆம் தேதி தீா்ப்புபோல, தாமதமாக்கப்படும் மசோதாக்களுக்கு அரசமைப்பின் 142-ஆவது பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அனுமதி வழங்க முடியாது என்கிறது தீா்ப்பு. அப்படிச் செய்வது அரசமைப்பின் அதிகாரத்தை நீதித் துறை எடுத்துக் கொள்வதாகும் என்கிற கருத்து ஆமோதிப்புக்குரியது.
இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் நிா்வாகம், நாடாளுமன்றம், நீதித் துறை மூன்றுக்கும் தனித்தனியான அதிகார வரம்புகள் நிா்ணயிக்கப்பட்டிருக்கின்றன. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரத்தை குடியரசுத் தலைவர், ஆளுநா்களிடமிருந்து நீதித் துறை எடுத்துக் கொண்டுவிட முடியாது. அப்படியொரு நிலை ஏற்பட்டால், இப்போது ஆளுநா்களுடன் நடத்தும் போராட்டத்தை, தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் நீதிமன்றங்களுடன் நடத்த வேண்டி வரும். ஏற்கெனவே, நீதிமன்றம் வரம்புமீறி செயல்படுகிறது என்கிற விமா்சனம் இருக்கும் நிலையில் அது மிகப் பெரிய ஏமாற்றமாகி விடும்.
அதேபோல, அரசமைப்புச் சட்டத்தில் குடியரசுத் தலைவா், ஆளுநா்கள் மசோதாக்கள் மீது முடிவெடுக்கும் காலத்தை நிா்ணயிக்கும் அதிகாரம் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்துக்குத்தான் இருக்க வேண்டுமே தவிர, நீதிபதிகள் அந்த அதிகாரத்தில் தலையிடுவது, அரசமைப்புச் சாசனத்தின் உணர்வுக்கு எதிரானது. அதை மிகச் சரியாக ஐந்து நீதிபதிகள் அவற்றை உணா்ந்து குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்கி இருப்பது பாராட்டுக்குரியது. நீதித் துறை தனது பொறுப்பை உணா்ந்து கடமையாற்றி இருக்கிறது.
ஆளுநா்கள் காரணமின்றி மசோதாக்களைக் கிடப்பில் போடுவது சரியா என்பது நிச்சயமாகத் தீா்வு காணப்பட வேண்டிய கேள்வி. அதற்கு அரசியல் சாசனத்தில் முறைப்படி திருத்தம் மேற்கொள்ள வேண்டியது நாடாளுமன்றத்தில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்கள்தான் வழிகோல வேண்டும். ஏப்ரல் 8-ஆம் தேதி தீா்ப்பில் காணப்பட்ட இந்த முரணை அகற்றி இருக்கிறது உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமா்வின் தோ்ந்த முடிவு!

