

ஒவ்வொரு அரசமைப்புச் சட்ட தினம் (நவ.26) கடந்து போகும் போதும், "இந்தியர்களுக்குத் தங்களை தாங்களே ஆட்சி செய்து கொள்ளத் தெரியாது' என்று சொன்ன பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் கருத்தை நாம் புன்னகையுடன் கடந்து போகிறோம்.
"இந்திய மக்களாகிய நாம்' 76 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்துக்கொண்ட உறுதிமொழியின் பாதையில், ஒட்டுமொத்த உலகமும் வியந்து பார்க்கும் விதத்தில் பீடுநடை போடுகிறோம் என்றால், அதற்கு நாம் நமக்காக வகுத்துக்கொண்ட அந்த அரசியல் சாசனத்தின் நெகிழ்வும், அதன் உயிர்ப்பாக விளங்கும் அடிப்படைக் கூறுகளும்தான் காரணம்.
நமது அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்தபோது, இந்தியாவின் மக்கள்தொகை (35 கோடி). உலக மக்கள்தொகையில் (250 கோடி) வெறும் 14% மட்டுமே. அந்த மக்கள்தொகையில் ஏறத்தாழ 80% எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் அல்லது தொடக்கப் பள்ளியுடன் நிறுத்திக் கொண்டவர்கள். அந்த நிலையிலும், அனைவருக்கும் வாக்குரிமை மட்டுமல்ல, இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் கருத்துரிமையும், எந்தப் பகுதியிலும் வேலை பார்க்கும், வாழும் உரிமையும், கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு அனைத்திலும் ஜாதி, மத, இன, மொழி பேதமில்லாத சம உரிமையும் வழங்கும் அரசியல் சாசனம்தான், உலகில் விரல்விட்டு எண்ணக்கூடிய பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா வளர்ச்சியடைந்ததற்கு அடிப்படை.
இந்தியாவின் வளர்ச்சி அசாதாரணமானது. உலகில் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக, 140 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு அன்றாடம் உணவு வழங்க வேண்டிய கடமையுள்ள நாடாக நாம் இருக்கிறோம். அப்படி இருந்தும்கூட இந்தியப் பொருளாதாரம் தொடர் வளர்ச்சியைக் காண்கிறது.
அமெரிக்கா, ரஷியா என்கிற இரண்டு மிகப் பெரிய நாடுகளின் கூட்டு மக்கள்தொகை இந்தியாவின் மக்கள்தொகை. உலகில் மிக அதிக மக்கள்தொகையுள்ள 11 நாடுகளின் மொத்த மக்கள்தொகை, நமது மக்கள்தொகை. பாகிஸ்தானின் மக்கள்தொகையைவிட (23 கோடி) உத்தர பிரதேசத்தின் (24 கோடி) மக்கள்தொகை
அதிகம்; தாய்லாந்தைவிட (7.1 கோடி) தமிழ்நாட்டின் (7.7 கோடி) மக்கள்தொகை அதிகம்; ஜப்பானைவிட (12.3 கோடி) பிகாரின் (12.6 கோடி) மக்கள்தொகை அதிகம் என்றால், மேற்கு வங்கமும் எகிப்தும் (10.5 கோடி), மத்திய பிரதேசமும் துருக்கியும் (8.7 கோடி), ராஜஸ்தானும் ஜெர்மனியும் (8.4கோடி), கர்நாடகமும் பிரான்ஸýம் (6.7 கோடி), தெலங்கானாவும் தென் கொரியாவும் (5.3 கோடி) சம அளவு மக்கள்தொகை கொண்டவை.
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தனியாக இயங்கும் பல நாடுகளைப் போன்ற மக்கள்தொகையும், மனிதவளமும் கொண்டவை என்பது மட்டுமல்லாமல், அதற்கான மொழி, ஜாதியமைப்புகள், உணவுப் பழக்கங்கள், கலாசாரங்கள் கொண்டவை. அப்படி இருந்தும், வேற்றுமையிலும் ஒற்றுமை ஏற்படுத்திக்கொண்டு இணைந்து வெற்றி காண முடிந்ததற்கு நமது அரசியல் சாசனத்தின் தெளிவான வழிகாட்டுதல்களும், தேவைக்கேற்ற நெகிழ்வுத் தன்மையும்தான் காரணம்.
இந்தியாவைப் பொருத்தவரை, நமது எல்லா பிரச்னைகளும் பெரும்பாலும் மாநிலம் சார்ந்த பிரச்னைகள். ஆனால் பாருங்கள், இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் மாநில அளவிலான தீர்வு கிடையாது. அது காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னையானாலும், மகாராஷ்டிரம்-கர்நாடக எல்லைப் பிரச்னையானாலும், மணிப்பூரின் இனக் கலவரமானாலும் தேசியத் தீர்வுதான் விடையே தவிர, மாநிலத் தீர்வு இல்லை. அதை நமது அரசியல் சாசன சபையின் உறுப்பினர்கள் உணர்ந்திருந்ததால்தான், இந்திய ஜனநாயகம் இன்றுவரையில் ஒருங்கிணைந்து நிற்கிறது.
நமது அரசமைப்புச் சட்டம் 1949 நவம்பர் 26-ஆம் தேதி அரசியல் நிர்ணய சபையின் அங்கீகாரம் பெற்றது என்றும், 1950 ஜனவரி 26-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது என்பதும் தான் நமக்குத் தெரியும். ஆனால், அதற்கான அடித்தளம் 1773-இல் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியிலேயே போடப்பட்டது என்பதுதான் உண்மை.
பிளாசி யுத்தமும், பக்ஸர் யுத்தமும் தேடித்தந்த வெற்றிக்குப்பின்னால், வாரன் ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரல் ஆனபோது 1773-இல் கொண்டுவரப்பட்ட "ரெகுலேட்டிங் ஆக்ட்'தான் அரசியல் சாசனத்துக்கான முதல் முயற்சி. அதைத் தொடர்ந்து 1786, 1793, 1813, 1833, 1853, 1854 என்று பல திருத்தங்களும், மாற்றங்களும் சட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன. "மின்டோ-மோர்லி', "மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு' சீர்திருத்தங்களும், "1935 கவர்மென்ட் ஆஃப் இந்தியா' சட்டமும் போட்டிருந்த அடித்தளத்தில் எழுப்பப்பட்டதுதான் இப்போதைய அரசியல் சாசனம்.
1946 டிசம்பர் 9-ஆம் தேதி, முந்தைய நாடாளுமன்றக் கட்டடத்தின் மத்திய அரங்கில், விடுதலைபெற இருக்கும் இந்தியாவுக்கு அரசியல் சாசனத்தை உருவாக்க பிராந்திய சபைகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட 389 உறுப்பினர்கள் கூடினார்கள். ஆனால், பிரிவினையைத் தொடர்ந்து 289 உறுப்பினர்கள் கொண்ட அவையாக அது மாற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது, பாகிஸ்தானில் இணைந்த இந்தியர்களின் துர்பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும்.
11 தடவைகளாக 167 நாள்கள் அந்த அரசியல் நிர்ணய சபை கூடி, 1,45,000 வார்த்தைகள் கொண்ட, 395 பிரிவுகளும் எட்டு அட்டவணைகளும் கொண்ட உலகத்தின் மிக நீளமான அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்திருக்கிறது. அதற்கான மொத்தச் செலவு அப்போது ரூ.64 லட்சம்.
1950 ஜனவரி 26-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்து இன்றுவரை இந்திய குடிமக்களின் நம்பிக்கையாகவும், வழிகாட்டியாகவும் திகழ்கிறது நமது அரசமைப்புச் சட்டம். அது வெறும் சட்டங்களின் வழிமொழிதல் அல்ல; ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒருங்கிணைத்துக் கட்டிப் பிணைத்திருக்கும் உணர்வுச் சங்கிலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.