

நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது வெற்றிகரமாகத் தேர்தல்களை நடத்துவதுடன் நின்று விடுவதில்லை. தேர்தலில் வெற்றி தோல்வியும், வாக்குகள் மூலம் மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைப்பதும் மட்டுமேகூட அல்ல. அவை எல்லாமே நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அம்சங்கள் அவ்வளவே.
இரண்டு தேர்தல்களுக்கு இடையே குறிப்பிட்ட இடைவெளிகளுடன் அவைகள் கூடுவதும், மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படுவதும், அதன்மீது விவாதங்கள் நடப்பதும், மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்படுவதும்தான் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகள். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பி, மசோதாக்கள் விவாதிக்கப்படுவதன் மூலம் அவற்றின் சாதக - பாதகங்கள் அலசப்படுகின்றன.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் (சர்சங்கசாலக்) மோகன் பாகவத் சில மாதங்களுக்கு முன்பு கூறியதுபோல, ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும், ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களே தவிர எதிரிகள் அல்ல. கொள்கை ரீதியாக மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தாலும் குறிக்கோள்கள் தேச நலன் கருதியதாக இருப்பதால், எதிரிகளாகக் கருத வேண்டிய அவசியம் இல்லை என்பது அனைத்து அரசியல் கட்சிகளும் தெரிந்து கொள்ள வேண்டிய அரிச்சுவடிப் பாடம்.
ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் நாடாளுமன்றத்தின் இரு கண்கள் எனும்போது அவை தேச நலன் என்கிற ஒரே நேர் பார்வையில் குவிய வேண்டுமே தவிர வெவ்வேறு பக்கம் திரும்பும் நிலை ஏற்பட்டால், நாடாளுமன்றம் செயலற்றதாகவும், பயனற்றதாகவும் மாறிவிடும். கடந்த ஆண்டு குளிர்காலத் தொடரில் நடந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கும்போது, நம்மால் நமது தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் செயல்பாடுகளை நினைத்துப் பெருமை கொள்ள இயலவில்லை.
'ஓ ஜனநாயகமே! உன் பெயரில் என்னவெல்லாம் தவறுகளும் குற்றங்களும் நடத்தப்படுகின்றன' என்கிற மேடம் ரோலண்டின் ஆதங்கத்தை இந்திய நாடாளுமன்றம் கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் நடந்துகொண்ட விதம் நம்மையும் வெளிப்படுத்தத் தூண்டுகிறது. ஜனநாயகத்தின் மிகச் சிறந்த அடிப்படைக்கூறு என்னவென்றால், தவறுகள் திருத்தப்படுவதற்கும் முறைகேடுகளை சரிசெய்வதற்கும் வாய்ப்பு வழங்குகிறது என்பதுதான்.
இந்தப் பின்னணியில்தான் டிசம்பர் 1 முதல் 19 -ஆம் தேதி வரை நாடாளுமன்றம் குளிர்காலக் கூட்டத் தொடருக்காகக் கூட இருக்கிறது. 15 அமர்வுகளில் 19 நாள்கள் நடக்க இருக்கும் குளிர்காலக் கூட்டத்தொடரில் சில முக்கியமான மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படவும் நிறைவேற்றப்படவும் காத்திருக்கின்றன.
குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணன் குளிர்காலத் தொடரில் மாநிலங்களவைத் தலைவராக செயல்பட இருக்கிறார். அவரது நீண்ட அரசியல் அனுபவமும், மக்களவை உறுப்பினராக இருந்த அனுபவமும், பல முக்கியமான மாநிலங்களில் ஆளுநராக இருந்த அனுபவமும் மாநிலங்களவையை அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடத்த அவருக்குக் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
தொடங்க இருக்கும் குளிர்காலத் தொடரில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த எதிர்க்கட்சிகளின் விவாதம் முன்னிலை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. அதுமட்டுமல்லாமல், இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடங்கி பல்வேறு மாநில, தேசிய, சர்வதேச பிரச்னைகளில் மத்திய அரசின் அணுகுமுறையை விமர்சிக்க எதிர்க்கட்சிகள் நிச்சயமாக முனைப்புக் காட்டும்.
விவாதத்தின் மூலம் விமர்சனங்களை முன்வைத்து ஆளும் கட்சியிடம் விளக்கம் கேட்பதைவிட்டு கூச்சல்- குழப்பத்தில் அவையை முடக்கும் செயல்பாடுகளில் எதிர்க்கட்சிகள் இறங்குவதை ஆளும் கட்சி எதிர்பார்க்கும். அதற்கு இடம்கொடுக்காமல் இருப்பதில்தான் எதிர்க்கட்சிகளின் வெற்றி அடங்கியிருக்கிறது.
ஆளும் கட்சியும் சரி, எதிர்க்கட்சிகளைப் பேசவிட்டு அவர்களது விமர்சனங்களைப் புன்சிரிப்புடன் பொறுமையாகக் காதில் வாங்கி, அரசுத் தரப்பின் விளக்கத்தை முன்வைக்கும் பாணியைக் கடைப்பிடிக்க வேண்டும். அதன்மூலம்தான் மக்கள் மனதில் அரசின் செயல்பாடுகள் குறித்த ஐயப்பாடுகள் அகன்று நல்லெண்ணம் ஏற்படும். இதைத் தவிர்த்து கூச்சல்-குழப்பத்துக்கு இடையில் எளிதாக மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்ளும்போது மக்கள் மனதில் எழும் கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் போகிறது. குளிர்காலக் கூட்டத்தொடரில் சுமார் 10 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.
அவற்றில் மூன்று மசோதாக்கள் முக்கியமானவை மட்டுமல்ல, விமர்சனத்துக்குரியவையும்கூட. அணுசக்தி மசோதா (தி அட்டாமிக் எனர்ஜி பில், 2025) முந்தைய சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு தனியார் துறையினர் அணுமின் நிலையம் அமைப்பதற்கு வழிகோலுகிறது. தனது பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்திருந்ததுபோல 2047-க்குள் இந்தியா 100 ஜிகா வாட் அணுமின் சக்தியை உற்பத்தி செய்வதற்கு இந்த மசோதா அவசியமாகிறது என்பது அரசின் வாதம்.
உயர் கல்வி ஆணைய மசோதா, தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட இரண்டு மசோதாக்களும் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்ளக்கூடும்.
தேசிய நெடுஞ்சாலைகளுக்காக விரைந்தும் வெளிப்படைத் தன்மையுடனும் நிலம் கையகப்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத் திருத்த மசோதா தேவைப்படுகிறது என்றால், உயர் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கும், தனித்து இயங்குவதற்கும், இந்திய உயர் கல்வி ஆணைய மசோதா வழிகோலும் என்பது அரசின் கருத்து.
கூச்சல் - குழப்பமில்லாமல் முறையான விவாதங்களுடன் நாடாளுமன்றம் செயல்பட்டு, மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த மக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.