மாற்றம் காணும் மருத்துவம்!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தரவு அறிவியல், பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ் போன்றவை மருத்துவத் துறையை மேம்படுத்தி இருப்பதைப் பற்றி...
திருச்சியில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் ரோபோ பயன்பாடு.
திருச்சியில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் ரோபோ பயன்பாடு.(கோப்புப்படம்)
Published on
Updated on
2 min read

மருத்துவமும், மருத்துவம் சார்ந்த தொழில்நுட்பமும் 21-ஆம் நூற்றாண்டில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தரவு அறிவியல், பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ் போன்றவை மருத்துவத் துறையை மேம்படுத்தி இருக்கின்றன.

குறிப்பாக, எண்ம அடிப்படையிலான மருத்துவக் கருவிகள் பரிசோதனைகளை எளிதாக்குவதுடன், துல்லியமான தகவல்களை அளிக்கும் வரப்பிரசாதமாகத் திகழ்கின்றன. உலகின் பாரம்பரிய மாற்று மருத்துவ சிகிச்சை முறைகளில் ஒன்றான ஆயுர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் யுனானி போன்றவற்றை இந்தியா கொண்டுள்ளது.

அசுர வளர்ச்சி கண்டுவரும் அலோபதி மருத்துவத் துறைக்கு மத்தியில், பாரம்பரிய மருத்துவ சேவையும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது. "ஆயுஷ்' அமைப்பு உருவானதைத் தொடர்ந்து ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவ முறைகளில் புதிய பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உலகின் முன்னணி மருத்துவப் பல்கலைக்கழகங்கள் தங்கள் பாடத் திட்டங்களில் தரவு அறிவியலையும், இயந்திரவழிக் கற்றலையும் (மெஷின் லேர்னிங்) சேர்த்துப் பயிற்சியளிக்கின்றன.

அமெரிக்காவில் பட்டம் பெறும் மருத்துவர்கள் உடற்கூறு இயல், நோயியல் போன்றவற்றைக் கடந்து இயந்திரவழிக் கற்றல் திறன் கொண்டவர்களாகவும் உள்ளனர். சில சிக்கலான அறுவைச் சிகிச்சைகள், நோய் தொடர்பான முன்கணிப்புகளை நோயாளிகளின் தரவுகளைக் கொண்டு உருவாக்குகின்றனர். மருத்துவம் சார்ந்த அறிவு மட்டுமன்றி செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பத்தை சிறப்பாகப் பயன்படுத்தவும் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். குறைந்தபட்ச ஊடுருவல் அறுவைச் சிகிச்சையான ரோபோட்டிக் அறுவைச் சிகிச்சை என்பது பரவலான வரவேற்பைப் பெறுகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட கையடக்க மற்றும் எடுத்துச் செல்லக்கூடிய அளவிலான ஊடொளிக் கருவிகள் (அல்ட்ரா சவுண்ட்) அவசர சிகிச்சைப் பிரிவுகளிலும், ஊரகப் பகுதி மருத்துவ முகாம்களிலும் துல்லியமான மேம்படுத்தப்பட்ட பரிசோதனை முடிவுகளைத் தருகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கணக்கீட்டால் இந்தப் பரிசோதனை முடிவுகள் துல்லியமாகக் கிடைக்கின்றன. அதனால், இளம் மருத்துவர்கள்கூட நோயின் தன்மையைத் தெளிவாக அறிந்து, அதற்கேற்ப முறையான சிகிச்சையை மேற்கொள்ள முடிகிறது.

இன்னும் சில ஆண்டுகளில் ஊடொளிக் கருவிகளின் (அல்ட்ரா சவுண்ட்) பயன்பாடு பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊடொளிக் கருவி (அல்ட்ரா சவுண்ட்) ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்தாலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் எளிதாகக் கையாளவும், எடுத்துச் செல்லும் வகையிலும் இருப்பதுடன் பரிசோதனை முடிவுகளை துல்லியமாகத் தருவதால் வரவேற்புப் பெறுகிறது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய விழித்திரை பரிசோதனைகளை மேற்கொள்ள ஜப்பான் அனுமதித்துள்ளது. இதன்மூலம் நீரிழிவு நோயாளிகளுக்கு விழித்திரை குறைபாடு முன்னதாகவே கண்டறியப்பட்டு பார்வை இழப்பிலிருந்து காப்பாற்றப்படுகின்றனர். இந்தியாவிலும் இதுபோன்ற தொழில்நுட்பம் நடைமுறைக்கு வரும் நாள் வெகுதொலைவில் இல்லை.

இந்தியாவின் அடுத்த தலைமுறை மருத்துவர்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் சார்ந்த அறிவும், பயிற்சியும் மிக அவசியமானது. இது நவீன பொது மருத்துவத் துறை சார்ந்து மட்டுமல்லாமல் பல் மருத்துவம் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் புகுத்தப்பட வேண்டும்.

பல் மருத்துவத்தில் வாய்ப் புற்றுநோய் போன்றவற்றை எளிதாகக் கண்டறியும் செயற்கை நுண்ணறிவு பரிசோதனை முறைகள் நடைமுறைக்கு வரும்போது, அது நகர்ப்புறங்கள் மட்டுமன்றி கிராமப் பகுதிகளுக்கும் எளிதாகச் சென்றடையும். நவீன மருத்துவ வசதி அனைவருக்கும் கிடைக்க ஏதுவாகும்.

பல்வேறு மருத்துவக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. தடுப்பூசிகள், நோய்த் தடுப்புகளிலும் இது தொடர்பான ஆய்வுகள் தடையின்றி நடைபெற்று வருகின்றன.

ஆயுர்வேதம், சித்த மருத்துவப் பயிற்சி பெறும் மருத்துவர் பயோஇன்ஃபர்மேட்டிக்ஸ் உதவியுடன் மருந்து தயாரிப்புக்கான மூலிகைகளின் விவரங்கள், அதன் விகிதங்கள் போன்றவற்றைப் பெற்று அதன்படி மருந்துப் பொருள்களைத் தயாரித்து, சிகிச்சை முறைகளை மேம்படுத்துவது அடுத்தகட்ட வளர்ச்சியாக இருக்கும். இந்திய பாரம்பரிய மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பச் செயல்பாடுகளைப் புகுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

பாரம்பரிய மருத்துவத்தில் அதன் சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகள், தயாரிப்பு முறைகள் அனுபவ ரீதியாக நடைபெற்று வந்ததால், அவை ஆவணப்படுத்தப்படாமல் போய்விட்டன. ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம் போன்றவை தொடர்பான ஆராய்ச்சிகள் சற்று பின்தங்கி விட்டதாகவே கருத வேண்டும். அலோபதி மருத்துவத்துக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் பாரம்பரிய மருத்துவத்துக்கு தரப்படுவதில்லை.

மூலிகைகளில் அவற்றின் சேர்மங்கள் தொடர்பாக அறியவும், அதன்படி மருத்துவ முறைகளை மேம்படுத்தவும் தொழில்நுட்பங்கள் உதவும். இதைப் பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் பாடத் திட்டமாகவும் சேர்த்து, அது குறித்த ஆராய்ச்சிகளை மருத்துவ மாணவர்கள் மேற்கொள்ள ஊக்குவித்தால் ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி போன்ற மாற்று மருத்துவ முறைகள் பாதுகாக்கப்படுவதுடன், அதன் மூலம் புதிய நோய்த் தடுப்பு முறைகளும் உருவாகும் வாய்ப்பு ஏற்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com