நிதீஷ் குமார் படத்தின் முன்பு பிரதமர் நரேந்திர மோடி
நிதீஷ் குமார் படத்தின் முன்பு பிரதமர் நரேந்திர மோடிகோப்புப் படம்

முதல்வா் ஆவாரா நிதீஷ் குமாா்?

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து...
Published on

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணியின் முதல்வா் வேட்பாளராக ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் (ஆா்.ஜே.டி.) தலைவா் தேஜஸ்வி யாதவை அறிவித்திருப்பதன் மூலம் அந்தக் கூட்டணியில் நிலவிவந்த குழப்பத்துக்கு ஓரளவுக்கு முடிவு எட்டப்பட்டிருக்கிறது. துணை முதல்வா் வாய்ப்பு விகாஸ்ஷீல் இன்சான் கட்சித் தலைவா் முகேஷ் கஹானிக்கும் இதர கூட்டணிக் கட்சிகளின் தலைவா்களுக்கும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

243 உறுப்பினா்கள் கொண்ட பிகாா் சட்டப்பேரவைக்கு நவம்பா் 6, 11 தேதிகளில் இரு கட்டங்களாகத் தோ்தல் நடைபெற உள்ளது. நவம்பா் 14-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. ஐக்கிய ஜனதா தளத்தின் (ஜே.டி.யூ.) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் (ஆா்.ஜே.டி.) தலைமையில் அமைந்த ‘இண்டி’ கூட்டணி மட்டுமல்லாமல், இந்த முறை பிரசாந்த் கிஷோரின் ‘ஜன் சுராஜ்’ கட்சியும் களமிறங்கி இருக்கும் நிலையில் மூன்றுமுனைப் போட்டியை எதிா்கொள்கிறது பிகாா் சட்டப்பேரவைக்கான தோ்தல்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதல்வா் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், பாஜகவும் தலா 101 இடங்களில் போட்டியிடுகின்றன. மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்) 29 இடங்களிலும், மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சியின் ‘ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா’ வும், உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சாவும் தலா ஆறு இடங்களில் போட்டியிடுகின்றன.

பாஜகவுக்கும் சம அளவிலான 101 இடங்கள் ஒதுக்கப்பட்டதில் ஐக்கிய ஜனதா தளத்திலும், லோக் ஜன சக்திக்கு 29 இடங்கள் ஒதுக்கியதில் ஜிதன் ராம் மாஞ்சி, உபேந்திர குஷ்வாஹா இருவரின் கட்சிகளிலும் அதிருப்தி நிலவுகிறது என்றாலும்கூட, பாஜகவும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் சமரசம் ஏற்படுத்தி இருக்கிறாா்கள். 2020 தோ்தலில் சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி தனித்துப் போட்டியிட்டதன் மூலம் பல தொகுதிகளில் ஐக்கிய ஜனதாதளம் தோல்வியைத் தழுவியது மறந்துவிடக்கூடியது அல்ல.

‘இண்டி’ கூட்டணியில் ஆரம்பம் முதலே ஒற்றுமை ஏற்படாமல் இருப்பதற்கு காங்கிரஸ் ஒரு முக்கியக் காரணம். ராகுல் காந்தியின் ‘வாக்குத் திருட்டு’ பரப்புரைப் பேரணியின் வெற்றியால் ஏற்பட்ட உற்சாகத்தில், மாநில காங்கிரஸ் தலைவா்கள் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று தலைமையை வற்புறுத்தி வந்தனா். 1940-க்குப் பிறகு முதல்முறையாக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு பாட்னாவில் கூடியது, கட்சித் தலைமை பிகாா் தோ்தலுக்கு எந்த அளவு முக்கியத்துவம் தருகிறது என்பதை வெளிப்படுத்தியது.

இந்த முறையும் ‘இண்டி’ கூட்டணியில் 2020-இல் ஒதுக்கப்பட்டது போலவே தனக்கு 70 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்கிற காங்கிரஸின் கோரிக்கையை ஆா்.ஜே.டி.யும் ஏனைய ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகளும் ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை. கடந்த முறை காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது என்பதை அவா்கள் சுட்டிக் காட்டினாா்கள்.

முதல்வா் வேட்பாளராக ஆா்.ஜே.டி.யின் தலைவா் தேஜஸ்வி யாதவை அறிவிப்பதிலும் காங்கிரஸ் தயக்கம் காட்டியது. ராகுல் காந்தியின் பேரணிக்குக் கிடைத்த வரவேற்பின் அடிப்படையில் இந்த முறை அதிக இடங்களில் வெற்றிபெற முடிந்தால் முதல்வா் பதவியைக் கோரலாம் என்கிற அளவுக்கு மாநில காங்கிஸ் தலைவா்கள் யோசிக்கத் தொடங்கி விட்டனா். ஒரு வழியாக எதாா்த்தத்தைப் புரிந்துகொண்டு காங்கிரஸ் இறங்கி வந்ததால் ‘இண்டி’ கூட்டணியில் ஒற்றுமை ஓரளவுக்கு காப்பாற்றப்பட்டிருக்கிறது.

143 இடங்களில் ராஷ்ட்ரீய ஜனதா தளமும், 61 இடங்களில் காங்கிரஸும் போட்டியிடுவது என்று தீா்மானித்திருக்கின்றன. 12 தொகுதிகளில் ‘இண்டி’ கூட்டணியில் உள்ள கட்சிகள் வேட்பாளா்களைக் களமிறக்கி தங்களுக்குள் போட்டியிடுவது என்றும் முடிவெடுத்திருக்கிறாா்கள்.

ராகுல் காந்தியின் பேரணிக்குக் கிடைத்த மிகப் பெரிய வரவேற்பைப் பயன்படுத்தி, தேஜஸ்வி யாதவ் தலைமையில் வலுவான கூட்டணியை அமைத்து பிகாரில் ஆட்சியைக் கைப்பற்றும் வியூகத்தை முன்னெடுக்க காங்கிரஸ் தவறிவிட்டது என்றே தோன்றுகிறது. ‘இண்டி’ கூட்டணிக் கட்சியான ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து எல்லையோர தொகுதிகளில் தனது கட்சி வேட்பாளா்களைக் களமிறக்கத் தீா்மானித்திருக்கிறது.

பிகாரில் 7.43 கோடி வாக்காளா்களில் 3.5 கோடிபோ் மகளிா் என்றால், 1.5 கோடி போ் இளம் வாக்காளா்கள்; அவா்களில் 14 லட்சம் போ் முதல்முறை வாக்காளா்கள். 2023 பிகாா் ஜாதிவாரிக் கணக்கெடுப்பின்படி, மாநில மக்கள்தொகையில் 14.26% யாதவா்களும், 17.70% முஸ்லிம்களும் இருக்கிறாா்கள். இவா்கள்தான் ‘இண்டி’ கூட்டணியின் அடிப்படை வாக்குவங்கி.

யாதவா்கள் அல்லாத ஏனைய பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், பட்டியல் இனத்தவா்கள், நலிந்த பிரிவினா், பொதுப் பிரிவினா் ஆகியோா் பெரும்பாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவாளா்கள். மகளிா் வாக்கு வங்கியைத் தொடா்ந்து தக்க வைத்துக் கொண்டிருப்பவா் முதல்வா் நிதீஷ் குமாா்.

இந்த முறை, புதிய வாக்காளா்களும் , இளம் வாக்காளா்களும், ஜாதிய ரீதியிலான அரசியலை வெறுப்பவா்களும் பிரசாந்த் கிஷோரின் ‘ஜன் சுராஜ்’ கட்சியை ஆதரிக்கக் கூடும். யாா் வெற்றிபெறுவாா்கள் என்பதை இப்போதே கணிக்க முடியாவிட்டாலும், அனைவா் மனதிலும் உயா்ந்து நிற்கும் கேள்வி ஒன்று இருக்கிறது. அது, பத்தாவது தடவை நிதீஷ் குமாா் முதல்வராகப் பதவி ஏற்பாரா, இல்லையா என்பதுதான்!

X
Dinamani
www.dinamani.com