

காவிரி வடிநிலப் (டெல்டா) பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் மையங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அரசுகள் அவசரகால நடவடிக்கைகளை எடுக்காமல் வழக்கமான "சிவப்பு நாடா' நடைமுறைகளை மேற்கொண்டு வருவது நிலைமையை மேலும் மோசமாக்கவே செய்யும்.
குறுவை சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. திறந்தவெளியில் வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்துள்ளன. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல லாரிகள் தட்டுப்பாடு. தொடரும் பருவ மழையோடு இப்போது புயல் எச்சரிக்கையும் சேர்ந்துள்ளது.
சாக்குப் பைகள் தட்டுப்பாடு, அதிக விளைச்சல் உள்ளிட்ட காரணங்களை அரசும், அதிகாரிகளும் கூறுவது ஏற்புடையதல்ல. அதிக விளைச்சல் மற்றும் பருவ மழையைக் கருத்தில் கொண்டு முன்னேற்பாடுகளை சரிவர செய்யாததே காரணம் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி பணிகள் கடந்த ஜூலை இறுதியில் முடிவடைந்து விட்டன. இந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து குறித்த காலமான ஜூன் 12-இல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், இயல்பான சாகுபடி பரப்பான சுமார் 3.25 லட்சம் ஏக்கர் என்பது இரண்டு மடங்கை நெருங்கி சுமார் 6.31 லட்சம் ஏக்கராகி விட்டது.
விவசாயிகள் நிகழாண்டு டி.பி.எஸ்.-5, ஏ.எஸ்.டி. 16 ஆகிய அதிக விளைச்சல் தரும் நெல் ரகங்களைப் பரவலாக பயன்படுத்தினர். எனவே, அறுவடை காலத்தில் கூடுதலான நெல் மூட்டைகள் வருகையை உத்தேசித்து அதற்கேற்ற வகையில் கொள்முதல் மையங்களில் வேளாண் துறையும், அதிகாரிகளும் முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிளைகளாக செயல்படும் நேரடி கொள்முதல் மையங்களில் தேவையான பணியாளர்கள், சாக்குப் பைகள் இருப்பு, விவசாயிகள் கொண்டு வரும் நெல் மற்றும் கொள்முதல் செய்த நெல்லை பாதுகாப்பாக வைப்பதற்கான இடம், சரக்குப் போக்குவரத்துக்கான லாரிகள், நெல் மூட்டைகளை ஏற்றி - இறக்க போதுமான எண்ணிக்கையில் தொழிலாளர்கள் போன்றவற்றை முன்கணிப்பு செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. லாரிகள் ஒப்பந்தத்தில் உள்ள அரசியல் தலையீட்டையும் சொல்லியாக வேண்டும்.
குறுவை அறுவடை வழக்கமாக செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கி அக்டோபர் மூன்றாவது வாரத்துக்குள் முடிவடையும்.
நிகழாண்டு வட கிழக்குப் பருவ மழையானது வழக்கமான காலமான அக்டோபர் மூன்றாவது வாரத்துக்கு முன்பாக 16-ஆம் தேதியே தொடங்கி விட்டது. அதற்கு முன்பும் மழை; இதனால் விளைந்த பயிர்களும், அறுவடையான நெல்லும் மழையில் சேதமடைந்து விட்டதாகக் கூறலாம். ஏற்கெனவே கொள்முதலில் தேக்கநிலை ஏற்பட்டு விட்டதால் மழை பெய்ததும் நிலைமை மேலும் மோசமாகிவிட்டது.
விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் அழுத்தத்துக்குப் பிறகு இப்போது கொள்முதல் வேகமெடுத்துள்ள போதிலும் விவசாயிகளுக்கு முழுமையான பலன் கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது. மழை நீரில் பயிர்கள் மூழ்கி கிடக்கின்றன; சில இடங்களில் முளைத்து விட்டன. மனதைக் கல்லாக்கி கொண்டு அவற்றை விவசாயிகள் உழுது அழித்து வருகின்றனர். அறுவடை செய்த நெல்லும் மழையில் நனைந்து முளைத்து விட்டது.
விவசாயிகள் கைவசம் உள்ள நெல்லின் ஈரப்பதமானது கொள்முதலுக்கு நிர்ணயிக்கப்பட்ட 17 சதவீதத்தைவிட அதிகமாக இருப்பதால் அதை 22 சதவீதமாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. அதனை ஏற்று மத்திய அரசின் 3 குழுக்கள் தமிழகம் வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.
மத்திய குழுவினர் காவிரி வடிநிலப் பகுதி மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தி முடித்துவிட்டு அரசுக்கு அறிக்கை அளித்த பிறகுதான் ஈரப்பதத்தை 22 சதவீதம் வரையில் ஏற்றுக் கொள்ள முறையான ஒப்புதல் வரும் என்றால் அதற்குள் நிலைமை மேலும் மோசமாகி விடும். வயல் நெல்லும், அறுவடை செய்த நெல்லும் முளைத்துவிடும். ஒன்றுக்கும் உதவாது. விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும்.
பாதகமான சூழ்நிலைகளிலும், மழைக் காலங்களிலும் நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தால் மத்திய அரசின் தற்காலிக ஒப்புதலைப் பெற்று மாநில அரசு நெல்லை கொள்முதல் செய்யும் நடைமுறை ஏற்கெனவே இருக்கிறது. ஈரப்பதத்தின் அளவுக்கேற்ப கொள்முதல் விலை குறையும். அதாவது, 17 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை ஈரப்பதம் இருந்தால் கொள்முதல் விலையில் ஒரு சதவீதம், 18 முதல் 19 சதவீதம் வரை இருந்தால் 2 சதவீதம் வரை விவசாயிகளுக்கு வழங்கும் பணத்தில் பிடித்தம் செய்து கொள்ளலாம்.
அரசுகள் மேற்கொள்ளும் கொள்கை முடிவுகள், சட்ட-திட்டங்கள் எல்லாமே பெரும்பான்மை மக்கள் நலனுக்கான ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். மோசமான சூழ்நிலைகளிலும் வழக்கமான நடைமுறைகளை பின்பற்றிக் கொண்டு காலதாமதத்தை கைக்கொண்டால் மக்களுக்கு பாதிப்பு மட்டுமல்லாது அரசுகளுக்கும் அவப்பெயர்தான் ஏற்படும்.
இப்போது டெல்டாவின் மோசமான சூழ்நிலை யாவரும் அறிந்த ஒன்றுதான். மத்திய அரசுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. எனவே, இந்த நெருக்கடியான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஈரப்பதத்தை ஆய்வு செய்ய வந்துள்ள குழுவின் அறிக்கை வரும்வரை காத்திருக்காமல் 22 சதவீதத்துக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் அளிப்பதே நல்லதொரு தீர்வாக இருக்கும். அதுவே விவசாயிகளுக்கு அரசு செய்யும் பேருதவி.
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது என்பது பழமொழி. இப்போது, முதலுக்கே மோசம் வந்திருக்கிறது. அரசு வேடிக்கை பார்த்தால் எப்படி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.