ஜனநாயகத்தின் பெயரால்...

மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு கோரிக்கை போராட்டம் குறித்து...
மனோஜ் ஜராங்கே
மனோஜ் ஜராங்கே PTI
Published on
Updated on
2 min read

மகாராஷ்டிர மாநிலத்தின் மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து ஐந்து நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த மனோஜ் ஜராங்கே தனது போராட்டத்தை கடந்த செவ்வாய்க்கிழமை (செப். 2) முடித்துக்கொண்டார். ஒட்டுமொத்த மும்பையும் இப்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது. மும்பை உயர்நீதிமன்றம் தலையிட்டதைத் தொடர்ந்துதான் ஜராங்கேயின் ஐந்து நாள் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது என்பது எந்த அளவுக்கு இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறியாகி இருக்கிறது என்பதன் வெளிப்பாடு.

5,000 பேர் மட்டுமே ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்துக்காக மும்பையின் மையப் பகுதியில் இருக்கும் ஆசாத் மைதானத்தில் கூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், 30,000-க்கும் அதிகமானோர் மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மும்பை மாநகரத்துக்குள் நுழைந்து, ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து ஒட்டுமொத்த மும்பையையும் ஸ்தம்பிக்க வைத்தனர். போக்குவரத்து முடக்கப்பட்டது. அலுவலகங்களுக்குச் செல்ல முடியவில்லை. விநாயகர் சதுர்த்தியையொட்டிய விழாக்களுக்குச் செல்ல முடியாமல் மும்பைவாசிகள் தவித்தனர்.

மராத்தாக்களுக்கான இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் அறிவித்த ஜராங்கே தானும், தனது ஆதரவாளர்களும் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் நகரப்போவதில்லை என்று அறிவித்தார். இதுபோல சட்டத்தை மீறி கும்பல் அரசியல் முன்னெடுக்கப்பட்டால் அரசும், நிர்வாகமும் வேடிக்கை பார்க்கத்தான் வேண்டுமா என்கிற கேள்வி எழுகிறது.

இதுபோன்ற செயல்பாடுகள் புதிதொன்றும் அல்ல. எல்லா மாநிலங்களிலும் அமைதியாகப் போராடுகிறோம், அகிம்சை வழியில் போராடுகிறோம் என்கிற முகமூடியை அணிந்துகொண்டு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைக்கும் போக்கு சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து நடந்து வருகிறது.

நியாயமான கோரிக்கைகளாகவே இருந்தாலும்கூட, போராடுவதற்கான உரிமை அரசியல் சாசனத்தால் தரப்பட்டிருக்கிறது

என்றாலும்கூட சட்ட விதிமுறைகளை மீறுவது, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிப்பது உள்ளிட்டவை ஜனநாயக வழிமுறை என்று கருதினால் அதைக் கேலிக்கூத்து என்பதல்லாமல், வேறு என்ன சொல்ல?

தமிழகத்தில் 1987-இல் 20% இடஒதுக்கீடு கோரி டாக்டர் ராமதாஸ் தலைமையிலான வன்னியர் சங்கம் நடத்திய போராட்டத்தை இன்றைய தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பில்லை. தலைநகர் சென்னையை நோக்கி வரும் அத்தனை நெடுஞ்சாலைகளும் சாலையோர மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு முடக்கப்பட்டன. ஒட்டுமொத்த தமிழக அரசையும் பிணைக் கைதியாக்க முற்பட்டது அந்தப் போராட்டம். வேறு வழியில்லாமல் காவல் துறையின் துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் பலியானதைத் தொடர்ந்துதான் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஒருவார காலம் தலைநகர் சென்னை முற்றுகையிடப்பட்ட நிலையில் இருந்ததை எப்படி மறந்துவிட முடியும்?

2019 டிசம்பர் மாதம் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு தில்லியில், போக்குவரத்தை முற்றாக முடக்கி ஷகீன் பாத் பகுதியில் நடத்திய போராட்டம் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து முடிவுக்கு வந்ததை மறந்துவிட முடியாது.

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக 2020 செப்டம்பர் 24-இல் தொடங்கிய பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் போராட்டத்தின்போது, தில்லிக்கு வெளியே புராரி எல்லையில் கூடாரங்கள் அமைத்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2021, ஜனவரி 26 குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியாக அவர்கள் தலைநகரில் நுழைந்ததும், செங்கோட்டையை நோக்கி நகர்ந்ததும், வன்முறையில் ஈடுபட்டதும் மிகப்பெரிய சோகம்.

அண்ணல் மகாத்மா காந்தியால் மதிக்கப்பட்டவரும், நேசிக்கப்பட்டவரும் ரைட் ஹானரபிள் வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி. காந்திக்கு மிகமிக நெருக்கமானவர் என்பது மட்டுமல்லாமல், எந்தவொரு முக்கியமான பிரச்னையிலும் அவரைக் கலந்தாலோசிக்காமல் காந்தியடிகள் எதுவும் செய்ய மாட்டார் என்று சொல்லும் அளவுக்கு நெருக்கம். காந்தியடிகளிடம் துணிந்து கருத்து வேறுபாடுகளைத் தெரிவிக்கவும், அவரது கருத்துக்கு எதிராக வாதிடவும் சீனிவாச சாஸ்திரி தயங்கியதில்லை.

1920-இல் காந்தியடிகள் தனது ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தபோது அதிர்ந்தார் சீனிவாச சாஸ்திரி. அவர் மட்டுமல்ல, அன்றைய மூத்த காங்கிரஸ் தலைவர்களான தேஜ்பகதூர் சப்ரு, மோதிலால் நேரு உள்ளிட்டவர்களும் ஒத்துழையாமை இயக்கம் என்கிற பெயரில் அரசின் நிர்வாக அதிகாரத்துக்கு எதிரான ஒத்துழையாமை இயக்க அறைகூவலை ஏற்றுக்கொள்ளவில்லை. சென்னையிலிருந்து காந்தியடிகளின் முடிவை விமர்சித்து வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி எழுதிய கடிதம் இன்று பொதுவெளியில் பிரசுரிக்கப்பட வேண்டும்.

சட்டத்தின் ஆட்சிக்கு எதிரான காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம், உருவாகும் சுதந்திர இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியையும், அரசமைப்புச் சட்டத்தின் அதிகாரத்தையும் குலைக்கும் விதத்திலான வழிமுறைகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்பது சாஸ்திரியின் கருத்தாக இருந்தது. சத்தியம், அகிம்சை ஆகியவற்றின் அடிப்படையிலான காந்திஜியின் சுதந்திர இந்தியக் கனவுக்கு எதிரானது ஒத்துழையாமை இயக்கம் என்று எச்சரித்தார் அவர்.

தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய சீனிவாச சாஸ்திரியின் எச்சரிக்கையை நினைவுகூரத் தோன்றுகிறது, அவ்வப்போது இந்தியாவில் நடைபெறும் போராட்டங்கள். ஜனநாயகம் உரிமைக்கானது மட்டுமல்ல, சில கடமைகளுக்காகவும்கூட.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com