சோர்வடைதல் கூடாது...

பிரசவகால உயிரிழப்புகளும், சிசு மரணங்களும் எந்த அளவுக்குக் குறைவாக உள்ளதோ அந்த அளவுக்கு அந்த சமுதாயம் மேம்பட்டிருக்கிறது என்று பொருள்.
சோர்வடைதல் கூடாது...
Published on
Updated on
2 min read

தேசத்தின் வளர்ச்சிக்கான அடையாளங்களில் முக்கியமானது அடுத்த தலைமுறை குழந்தைகளின் ஆரோக்கியமும், நல்வாழ்வும். பிரசவகால உயிரிழப்புகளும், சிசு மரணங்களும் எந்த அளவுக்குக் குறைவாக உள்ளதோ அந்த அளவுக்கு அந்த சமுதாயம் மேம்பட்டிருக்கிறது என்று பொருள்.

அகில இந்திய அளவில் மாதிரி பதிவு முறை (சேம்பிள் ரிஜிஸ்டிரேஷன் சிஸ்டம்) அறிக்கை வெளியாகி இருக்கிறது. அதனடிப்படையில் பார்க்கும்போது, அதில் சில எச்சரிக்கைகள் காணப்பட்டாலும் நம்பிக்கை அளிப்பதாகவும் உள்ளன அது வெளிப்படுத்தும் தகவல்கள்.

இந்தியாவில் சிசு மரண விகிதம் 2023-இல் 1,000 பிரசவங்களுக்கு 25 என்கிற அளவில் குறைந்திருப்பது வரவேற்புக்குரிய ஒன்று. 2013-இல் 40-ஆக இருந்த எண்ணிக்கை, 2023-இல் 37.5%-ஆக குறைந்தது. 50 ஆண்டுகளில் பாதிக்குப் பாதியாக இந்தியாவின் ஜனன-மரண விகிதம் குறைந்திருப்பதையும் சேர்த்துப் பார்க்கும்போது, நமது சுகாதார, குடும்ப நல, சமூக நலக் கட்டமைப்புகள் வலுவாகவே இருப்பது தெரிகிறது.

சிசு மரண விகிதம் (இன்ஃபேண்ட் மார்ட்டாலிட்டி ரேட்) என்பது 1,000 குழந்தைகளில் முதல் ஓராண்டுக்குள் ஏற்படும் சிசு மரணங்களின் எண்ணிக்கை. 2013 -க்கும் 2023-க்கும் இடையேயான 10 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 44-இல் இருந்து 28-ஆகவும், நகர்ப்புறங்களில் 27-இல் இருந்து 18-ஆகவும் சிசு மரண விகிதம் குறைந்திருக்கிறது. முறையான மருத்துவக் கண்காணிப்பு, தவறாமல் போடப்படும் தடுப்பூசிகள், ஊட்டச்சத்துடன் கூடிய உணவு, பெற்றோர்களிடம் காணப்படும் விழிப்புணர்வு உள்ளிட்ட பல காரணிகள் சிசு மரண விகிதம் குறைவதற்கு இன்றியமையாததாகும்.

சிசு மரண விகிதம் குறித்து சர்வதேச அளவில் இந்தியா மட்டம் தட்டப்பட்டது. இந்தப் பிரச்னையில் அரசின் கொள்கை அளவிலான முனைப்புக்கும் எதார்த்தத்துக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி காணப்பட்டது. நமது சிறிய அண்டை நாடுகளுடன் இந்தியாவின் சிசு மரண விகிதத்தை ஒப்பிட்டு நாம் ஏளனப்படுத்தப்பட்டோம். இந்தியாவில் சிசு மரணங்களின் விகிதத்தின் நிலைமை முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பது ஆக்கபூர்வ அறிகுறி.

முறைப்படுத்தப்பட்ட, திட்டமிட்ட செயல்பாடுகளும் பிரசவத்துக்கு முன்பும், பிரசவத்துக்குப் பிறகும் வழங்கப்படும் கவனிப்பும் "ஜனனி சுரக்ஷா யோஜனா', "போஷண் அபியான்' உள்ளிட்ட சிசுக்கள் பாதுகாப்புக்கான திட்டங்களும் பயனளிக்கத் தொடங்கின. "இந்திர தனுஷ்' என்கிற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் குழந்தைகளின் எதிர்ப்புச் சக்தியை உறுதிப்படுத்தும் தடுப்பூசித் திட்டத்தின் வெற்றியால் மிகக் குறைந்த குழந்தைகள்தான் முதல் மூன்றாண்டுக்குள் நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள். சுத்தமான குடிநீர் வசதியும் "ஸ்வச் பாரத்' என்கிற தூய்மை இந்தியா திட்டமும்கூட குழந்தைகளைப் பாதிக்கும் தொற்றுகள் குறைந்து சிசுமரணம் குறைந்திருப்பதற்குக் காரணம்.

இந்திய மாநிலங்களுக்கிடையே சிசு மரணத்தில் மிகப் பெரிய இடைவெளி காணப்படுவது வேதனை அளிக்கிறது. சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், வடகிழக்கு மாநிலங்களில் சில ஆகியவற்றில் சிசு மரண விகிதம் 37 என்றால், பிரச்னையும் குழப்பமுமாகத் தொடரும் மணிப்பூரில் வெறும் மூன்று மட்டுமே. தேசிய சராசரி 25 என்றால் கேரளம், தமிழ்நாடு, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்கள் சர்வதேச விகிதத்தை எட்டியிருக்கின்றன. அதற்குக் காரணம் மேம்படுத்தப்பட்டிருக்கும் இந்தியாவின் அடிப்படை சுகாதாரக் கட்டமைப்பு என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஒருபுறம் சிசுமரண விகிதத்தில் அடைந்திருக்கும் வளர்ச்சியைக் குறிப்பிடும் அதே வேளையில், தெற்காசியாவில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது நாம் பயணிக்க வேண்டிய தொலைவு அதிகம் என்பது வெளிப்படுகிறது. உள்நாட்டுக் குழப்பத்துக்கு முன்பு வரை வங்கதேசம் பொது சுகாதாரம், பிரசவகால மரணம், சிசு மரணம் உள்ளிட்டவற்றில் ஏனைய தெற்காசிய நாடுகளைவிடச் சிறப்பாகச் செயல்பட்டது. பிரதமர் ஷேக் ஹசீனா அரசு சுகாதாரத்தின் தரத்தை உயர்த்தியதால் வங்கதேசம் சர்வதேச அளவில் வியந்து பார்க்கப்பட்டது.

உலக வங்கியின் புள்ளிவிவரங்களின்படி வங்கதேசத்தில் 2023-இல் சிசுமரண விகிதம் 1,000 பிரசவங்களுக்கு சுமார் 24 மட்டுமே. பெண் கல்வி, கிராமப்புற அளவிலான சுகாதாரம், அடிப்படை சுகாதார வசதிகள் ஆகியவை காரணமாக ஹசீனா அரசாங்கம் சிசு மரணத்தை குறைத்து சாதனை படைக்க முடிந்தது. இத்தனைக்கும் குறைந்த நிதிஒதுக்கீட்டில், இந்தியா போன்ற நாடுகளைவிட வங்கதேசத்தால் சிறப்பாகச் செயல்பட முடிந்தது என்பதிலிருந்து முனைப்பும், அரசியல் தலைமையின் அர்ப்பணிப்பும் நிர்வாகத்தின் செயல்பாடுகளும்தான் திட்டங்களின் வெற்றிக்குக் காரணம் என்பது தெரிகிறது.

தேசிய சுகாதார சட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் கர்ப்பிணிகளுக்கான ஜனனி சுரக்ஷா யோஜனா என்கிற நேரடி மானியத் திட்டமும், பிரசவம் முடிந்த தாய்மார்களுக்கான "ஜனனி சிசு சுரக்ஷா காரியக்ரம்' என்கிற திட்டம் மூலமாக இலவச தாய்மைத் தேவைகளும் சிசு மரண விகிதம் குறைவதற்கு மிக முக்கியமான காரணங்கள். அங்கன்வாடிகள், "ஆஷா' ஊழியர்களின் முனைப்புடன் கூடிய செயல்பாடுகள் போன்றவை சிசு மரணங்களைத் தவிர்ப்பதிலும், பிறந்த குழந்தைகள் முதல் ஓராண்டு ஆரோக்கியமாக வளர்வதிலும் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பதை மறந்துவிட முடியாது.

அண்டை நாடான சீனாவில் சிசு மரண விகிதம் 4.5 மட்டுமே. நாம் இப்போதுதான் 25-ஐ எட்டி இருக்கிறோம். இன்னும் முனைப்புடன் செயல்பட்டாக வேண்டும் என்பதை அறிக்கை தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com