
சட்டமும் நீதிமன்றங்களும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வாகிவிடாது. சட்ட விரோதமான வரதட்சிணைக் கொடுமைகள் அதற்கு சாட்சி. சட்டம் இயற்றப்பட்டு அறுபது ஆண்டுகளைக் கடந்துவிட்ட பிறகும்கூட, குடும்பங்களின் வேதனைகளுக்கு வரதட்சிணை முறை ஒரு காரணமாக இருக்கிறது என்றால், மக்கள்தொகையில் சரிபாதியாக உள்ள மகளிரை நமது சமுதாயம் எப்படி நடத்துகிறது என்பது வெளிப்படுகிறது.
இங்கொன்றும் , அங்கொன்றுமாக நடைபெறும் நிகழ்வல்ல வரதட்சிணை பிரச்னை. கிரேட்டர் நொய்டாவில், தனது 6 வயதுக் குழந்தையின் கண்முன்னே வரதட்சிணைக்காக எரித்துக் கொல்லப்பட்ட 26 வயதுப் பெண்ணும், தனது கணவர் குடும்பத்தினரின் கொடுமைகள் தாங்காமல் தனது உயிரை மாய்த்துக் கொண்ட தமிழகத்தின் ரிதன்யாவும் சமீபத்திய வரதட்சிணை பலிகள்.
வரதட்சிணைத் தடைச் சட்டமும் சரி, குழந்தைகள் திருமணத் தடைச் சட்டமும் சரி பெரிய அளவில் பலனளிக்கவில்லை என்பதைத்தான் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2022-ஆம் ஆண்டின் புள்ளிவிவரம்தான் இப்போதைக்கு கிடைத்திருக்கிறது. இந்தியாவில் 6,516 வரதட்சிணை மரணங்களை 2022-ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டத்தின் 304-பி பிரிவின் கீழ், பதிவு செய்யப்பட்டதாக தேசிய குற்றவியல் ஆவணப் பதிவுகள் தெரிவிக்கின்றன. அதே ஆண்டில் பாலியல் வன்கொடுமைகளால் உயிரிழந்த பெண்களின் எண்ணிக்கையைவிட இது 25 மடங்கு அதிகம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெரும்பாலான பெண்கள் வழக்குப் பதிவு செய்ய முன்வருவதில்லை. வரதட்சிணை பிரச்னைகளில், பெண்களின் உயிருக்கு ஆபத்தில்லாமல் காப்பாற்றினால் போதும் என்று பிறந்த வீட்டுக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள்தான் பெரும்பாலானோர். குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதன் மூலமாகவோ, வழக்குத் தொடுப்பதனாலோ, நீதி கிடைத்துவிடாது என்ற அவநம்பிக்கை காரணமாக படித்தவர்களேகூட சட்ட உதவியை நாடுவதில்லை.
2022-ஆம் ஆண்டு இறுதியில் 60,577 வரதட்சிணை மரண வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்தன; அவற்றில் 54,416 முந்தைய ஆண்டுகளிலிருந்து தொடர்ந்தவை; விசாரணை முடிவடைந்த 3,689 வழக்குகளில் வெறும் 39%வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது.
2022 புள்ளிவிவரப்படி, வரதட்சிணை மரணங்களில் (கொலைகளில்?) உத்தர பிரதேசம் (2,142) முதலிடம் வகிக்கிறது. அதைத் தொடர்ந்து பிகார் (1,057), மத்திய பிரதேசம் (520), ராஜஸ்தான் (451), மேற்கு வங்கம் (427), ஹரியாணா (234), ஒடிஸா (263) என்று பட்டியல் நீள்கிறது. தமிழகம், கேரளம் உள்ளிட்ட தென்மாநிலங்களிலும் வரதட்சிணைக் கொடுமை நிலவுகிறது என்றாலும், வரதட்சிணை மரணங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.
இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு 498-ஏ-வின்கீழ் 2022-இல் பதிவு செய்யப்பட்ட கணவர் அல்லது அவரது உறவினர்களின் வற்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வரதட்சிணைக் கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை 1,44,593. ஆனால், வரதட்சிணை மரணங்களின் எண்ணிக்கை 6,516 தான். இந்தப் புள்ளிவிவரம் பல உண்மைகளை எடுத்துரைக்கிறது.
வரதட்சிணை மரணங்கள் தொடர்பான வழக்குகளில் 94% நீதிமன்றங்களில் தொடர்ந்து பல ஆண்டுகள் விசாரணையில் தேங்கிக் கிடக்கின்றன. கைரேகை சாட்சியங்கள் முறையாகப் பதிவு செய்யப்படாதது, பிரேத பரிசோதனையை மேற்கொள்ள மருத்துவர்கள் மறுப்பது, தூய்மைப் பணியாளர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்படுவது என்று வழக்கை நீர்த்துப்போகச் செய்ய அத்தனை வழிமுறைகளும் கணவரின் குடும்பத்தாரால் செய்யப்படுவது நடைமுறையாக மாறிவிட்டது.
காவல் துறையினர் துணைபோவதுதான் பெரும்பாலான வரதட்சிணை மரண வழக்குகளில் "அநீதி' வழங்கப்படுவதற்கான காரணம். ஜூன் மாதம் நடந்த நிக்கிபட்டி மரணத்தின் முதல் குற்றப் பத்திரிகையில் வரதட்சிணை தடுப்புப் பிரிவான பிரிவு 80 சேர்க்கப்பட்டிருக்கவில்லை என்பதில் இருந்து நமது காவல் துறை எப்படிச் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
வழக்குகளுக்கு அடிப்படைக் காரணம் சமுதாயத்தின் பார்வையில் உள்ள குறைபாடு. வரதட்சிணை என்று அழைக்கப்படும் சீதனம் பெண்களுக்கான பாதுகாப்பு என்று பெற்றோர் கருதுகிறார்கள். தொழிலதிபர்களும் அரசியல் தலைவர்களும் தங்களது செல்வாக்கையும் செல்வத்தையும் வெளிப்படுத்த படாடோபமாக தங்கள் மகளின் திருமணத்தை நடத்தும்போது, மற்றவர்களும் அவரவர் தகுதிக்கேற்ப திருமணங்களை விமரிசையாக கொண்டாடும் எண்ணம் மேலோங்குகிறது.
இந்தியாவில் திருமணத் துறையின் வருடாந்திர மதிப்பு 13,000 கோடி டாலர் என்றால் நம்புவீர்களா? ஏறத்தாழ ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இந்தத் துறைதான் இந்தியாவின் இரண்டாவது பெரிய துறை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இருவர் இணைவதற்காக ஏனைய துறைகள் அனைத்தும் திருமணச் சந்தைக்குப் பங்களிக்கின்றன, தெரியுமா? படாடோபமும், பகட்டும்தான் வரதட்சிணைக்கு அஸ்திவாரமாக இருக்கின்றன. பெரியார் ஈ.வெ.ரா.வின் சிந்தனையில் எளிமையாக்க வேண்டும் என்பதற்காக உதித்த சீர்திருத்தத் திருமணங்கள், பிராமண வைதீகர்களுக்குப் பதிலாக "தட்சணை' பெற்றுக் கொண்டு வாழ்த்தும் சொற்பொழிவாளர்களை வளர்த்தெடுத்ததே தவிர, வரதட்சிணையையோ படாடோப திருமணத்தையோ ஒழிக்க வழிகோலவே இல்லை என்பது மிகப் பெரிய சோகம்.
வரதட்சிணையில் விலை பேசப்படுவது பெண் அல்ல- பெண்மை, தாய்மை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.