மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அருணாசல பிரதேசத்தின் சில இடங்களுக்கு சீனா புதிய பெயர்கள் சூட்டி இந்தியாவை மீண்டும் வம்புக்கு இழுத்துள்ளது. இதுபோன்று, அருணாசல பிரதேச பகுதிகளுக்கு சீனா பெயர் சூட்டுவது புதிதல்ல.
1962 போருக்குப் பின்னர் பெரிய அளவில் மோதல் இல்லாது இருந்த நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டில் சீன எல்லைப் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் நமது எல்லைக்குள் புக முயன்றதால் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் இன்னுயிர் ஈந்தனர். தொடக்கத்தில் மெளனம் காத்த சீனா, தங்கள் தரப்பில் நான்கு வீரர்கள் இறந்ததாக 2021 பிப்ரவரியில் ஒப்புக்கொண்டது.
அதற்கு முன்னர்தான், பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் 2019 அக்டோபரில்
சந்தித்துப் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது. 2020 மோதலுக்குப் பின்னர், இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கிறது. பேச்சுவார்த்தையில், எல்லையில் அமைதி காக்க உறுதி பூண்டாலும் இந்தியாவுக்கு எரிச்சலூட்டும் வகையில் சீனா அவ்வப்போது ஏதாவது செய்துகொண்டேதான் இருக்கிறது.
இந்தியாவின் அருணாசல பிரதேச மாநிலத்தை தங்களுக்குச் சொந்தமான தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா பல ஆண்டுகளாக உரிமை கோரி வருகிறது. அருணாசல பிரதேசத்துக்கு நமது நாட்டுத் தலைவர்கள் யாராவது சென்றால் அதற்கு சீனா கண்டனம் தெரிவிப்பதும் வாடிக்கையாகி உள்ளது.
இந்திய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தேர்தல் பிரசாரத்துக்காக அருணாசல பிரதேசத்துக்கு 2009-ஆம் ஆண்டில் சென்றபோது சீனா கண்டனம் தெரிவித்தது. இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள திபெத்திய புத்த மத தலைவர் தலாய் லாமா, அருணாசல பிரதேச மாநிலம் தவாங் பகுதியில் 2017-ஆம் ஆண்டில் சுற்றுப்பயணம் சென்றதால் ஆத்திரமடைந்த சீனா, அருணாசலில் 6 பகுதிகளுக்குப் புதிய பெயர் சூட்டியது.
அருணாசல பிரதேச மாநிலம் உருவான 37-ஆவது ஆண்டு தின கொண்டாட்டங்களில் குடியரசுத் தலைவர் திரெüபதி முர்மு கடந்த 2023 பிப்ரவரியில் கலந்து கொண்டார். நாட்டின் எல்லைப் பகுதி கிராமங்களை மேம்படுத்தும் "துடிப்பான கிராமங்கள்' என்ற திட்டத்தை அருணாசலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 2023 மார்ச்சில் தொடங்கிவைத்தார். நாட்டின் பல பகுதிகளிலும் நடந்த ஜி 20 மாநாட்டின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் அருணாசல் தலைநகரான இடாநகரிலும் 2023 மார்ச்சில் நடைபெற்றது. இந்த நிகழ்வுகளையடுத்து, அருணாசல பிரதேசத்தில் 11 இடங்களுக்கு சீனா புதிய பெயர் சூட்டியது என்றால், இப்போது 6 இடங்களுக்குப் புதிய பெயர் சூட்டியுள்ளது.
"அந்த இடங்கள் அனைத்தும் இந்தியாவுக்குச் சொந்தமானவை. அவை எப்போதும் இந்தியப் பகுதிகளாகவே இருக்கும். புதிய பெயர் சூட்டுவதாலோ, சொந்தம் கொண்டாடுவதாலோ உண்மை நிலையில் எந்த மாற்றமும் ஏற்படாது. இரு தரப்பு உறவுகளில் பின்னடைவை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதை சீனா தவிர்க்க வேண்டும்' என இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், மறுபுறம் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜியோ ஜியாகுன், "ஷாங்னன் (அருணாசலுக்கு சீனா சூட்டியுள்ள பெயர்) சீன பிராந்தியம். அருணாசல பிரதேசம் என்று அழைக்கப்படுவதை சீனா ஏற்கவில்லை. அது தெற்கு திபெத்தின் ஒரு பகுதி. சீனா புதிய பெயர்களைச் சூட்டியுள்ளது முறையான நடவடிக்கைதான்' என்று பழைய பல்லவியையே பாடியுள்ளார்.
நம்முடன் சீனா பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும் எல்லைப் பகுதியில் ராணுவம் எளிதில் சென்றுவரும் வகையில் உள்கட்டமைப்பை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. அதேபோன்று, நமக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நம்மைச் சுற்றியுள்ள நாடுகளுக்கும் உதவிக்கரம் நீட்டிவருகிறது.
நம்மைப் பகை நாடாகக் கருதும் பாகிஸ்தானில் காரகோரம் நெடுஞ்சாலை, பெஷாவர் - கராச்சி நெடுஞ்சாலை மேம்பாடு, குவாதர் துறைமுகம் நவீனமயம், எரிசக்தி திட்டங்கள், பொருளாதார வழித்தடம் போன்றவற்றில் கோடிக்கணக்கான ரூபாயை சீனா முதலீடு செய்துள்ளது.
அதேபோன்று, இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகர மேம்பாடு, எரிசக்தி திட்டங்களிலும் கோடிக்கணக்கான ரூபாயை சீனா முதலீடு செய்துள்ளது.
மத்திய அரசும் எல்லைப் பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை அதிவேகமாக மேம்படுத்தி வருகிறது. இந்தியாவின் எல்லைப்புற கிராமங்களுக்கு இப்போது சில மணி நேரங்களில் செல்லக்கூடிய அளவுக்கு சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே ராணுவம் செல்லும் வகையில் மேம்பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. சூழ்நிலைக்கேற்ப முடிவு எடுக்கக் கூடிய அதிகாரம் ராணுவத்துக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
எல்லைப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு, ராணுவ நவீன மயம், அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எல்லையில் அமைதி சூழ்நிலையைக் காக்கும் அதே நேரத்தில் நமது பகுதிகளை இந்தியா இழந்துவிடாமல் பாதுகாப்பது அவசியம். இரு நாட்டு உறவைப் பலவீனப்படுத்தும் சீனாவின் பெயர் மாற்ற அறிவிப்புகளை, மெüனமாகக் கடந்துபோக முடியாது. எல்லையோரக் கண்காணிப்பில் கவனக்குறைவாக இருந்துவிடலாகாது.
Summary
China's Malice...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவுடன் உறவை மேம்படுத்தும் கொள்கையில் மாற்றமில்லை - சீனா அறிவிப்பு

அருணாசலில் சில இடங்களுக்குப் புதிய பெயரிட்ட சீனா! இந்தியா நிராகரிப்பு!!

ஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கியது சீனா!
பெயர்களிலும் வளரட்டும் வரலாறு!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


