இந்தியா சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகளாகி விட்டன. நாம் 80}ஆவது சுதந்திர தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாடி இருக்கிறோம். சுதந்திர இந்தியா எத்தனை, எத்தனையோ சோதனைகளைக் கடந்து மிகப் பெரிய சாதனைகளை ஈட்ட முடிந்திருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. அதே நேரத்தில், சுதந்திர இந்தியாவில் ஜனநாயகப் பண்புகள் வேரூன்றி இருக்கின்றனவா, நாம் ஜனநாயகத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டிருக்கிறோமா என்கிற ஐயப்பாடும் எழாமல் இல்லை.
சுதந்திர இந்தியா தனக்கென்று ஓர் அரசமைப்புச் சட்டத்தை இயற்றித் தன்னை ஒரு குடியரசாக அறிவித்துக் கொண்டபோது, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிநிகள் நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் கண்ணியமான முறையில் விவாதத்தில் ஈடுபட்டு, தேசம் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பார்கள் என்றுதான் எதிர்பார்த்திருந்தோம். அந்த எதிர்பார்ப்பு பொய்த்திருக்கிறது.
19 நாள்கள் நடந்த மழைக்காலக் கூட்டத் தொடரில், மக்களவை வெறும் 15% , மாநிலங்களவை வெறும் 33% நேரம் மட்டுமே செயல்பட்டன. இரண்டு நாள்கள் தவிர ஏனைய நாள்களில் மக்களவை அதிகபட்சம் ஒரு மணிநேரம்தான் செயல்பட்டது. மாநிலங்களவையின் செயல்பாடும் மெச்சும்படியாக இல்லை.
மக்களவையில் 11 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன என்பது இருக்கட்டும்; அவற்றில் 9 மசோதாக்கள், ஒரு எம்.பி.கூட இல்லாத நிலையில் அமைச்சர் மசோதாவைத் தாக்கல் செய்து நிறைவேற்றிக் கொண்டார் என்பதை என்னவென்று சொல்வது? அதிக நேரம் விவாதிக்கப்பட்ட ஒரே மசோதா பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026. 11 மணி நேரம் விரிவான விவாதம் நடந்தது உண்மை. ஆனால், அதில் கலந்து கொண்ட எம்.பி.க்கள் வெறும் 48 பேர் மட்டுமே எனும்போது, எந்த அளவுக்கு நமது மக்கள் பிரதிநிதிகள், இளைஞர்களின் வருங்காலத்தைப் பாதிக்கும் முக்கியமான பிரச்னை குறித்த விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்பதை நாம் உணர முடிகிறது.
நாடாளுமன்ற, சட்டப்பேரவைக் கூட்டங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென கூட்டப்படுவதில்லை. ஜூலை 20-ஆம் தேதி முதல் 19 நாள்கள் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நடைபெறும் என்கிற முன்னறிவிப்புடன், மழைக்காலக் கூட்டத் தொடருக்கான அறிவிப்பைக் குடியரசுத் தலைவர் ஜூலை 4}ஆம் தேதி வெளியிட்டு விட்டார். நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசும் கூட்டத் தொடரை முழுமையாக பயன்படுத்தித் தேசம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை விவாதிக்க வேண்டும் என்பதுதான் அதன் எதிர்பார்ப்பு.
அரசின் திட்டங்கள், பல்வேறு அரசுத் துறைகளின் அறிவிப்புகள், செயல்பாடுகள், ஒதுக்கப்பட்ட நிதிப் பயன்பாடு, அரசு எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்னைகள்}இவையெல்லாம் குறித்து ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்க எதிர்க்கட்சிகளுக்கும், எதிர்க்கட்சிகள் எழுப்ப இருக்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க அரசுக்கும் போதிய அவகாசம் தரப்படுகிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல், ஆளும் கட்சியை எந்த மசோதாவையும் நிறைவேற்ற விடாமல் தடுப்பதுதான் தங்களது வெற்றி என்று எதிர்க்கட்சிகள் நினைத்தால் என்ன செய்வது?
ஆளும் கட்சியும் சரி, அவை முடக்கம், கூச்சல், வெளிநடப்பு என்று எதிர்க்கட்சிகள் செயல்படுவதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு விவாதம் இல்லாமல் எல்லா மசோதாக்களையும் நிறைவேற்றிக் கொள்கிறது. தாக்கல் செய்யும் மசோதாக்களின் குறைகள் குறித்த கருத்துக் கேட்பு, அந்த மசோதாவை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு உதவும் என்பதை ஆளும்கட்சி மறந்து விடுகிறது; நாடாளுமன்ற ஜனநாயகம் வழங்கும் மிகப் பெரிய வாய்ப்பை நழுவ விடுகிறது.
நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறையில் கேள்வி நேரம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. உறுப்பினர்கள், அன்றாடப் பிரச்னைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்கான அருமையான வாய்ப்பு கேள்வி நேரம். ஏனைய விவாதங்களைத் தள்ளிப்போட முடியும். கேள்வி நேரம் தடைபட்டால் அந்த நேரத்தை மீட்டெடுக்க முடியாது.
நடந்து முடிந்த மழைக்காலக் கூட்டத் தொடரில் மக்களவையில் 9 நிமிஷங்களும், மாநிலங்களவையில் சுமார் 2 மணிநேரமும் கேள்வி நேரம் நடைபெற்றது. மக்களவையில் 3 கேள்விகளுக்கும் மாநிலங்களவையில் 16 கேள்விகளுக்கும் அமைச்சர்கள் பதிலளித்தனர். கேள்வி நேரம் முறையாக நடந்தால்தானே, நாடு தழுவிய அளவில் உள்ள பிரச்னைகள் அரசின் கவனத்துக்கு வரும்.
தனது எண்ணிக்கை பலத்தால் ஆளும்கட்சி தாக்கல் செய்யும் மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும். எதிர்க்கட்சிகளுக்குத் தங்களது கருத்துகளையும் விமர்சனங்களையும் நேரடியாக வெளிப்படுத்த கிடைக்கும் வாய்ப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர்கள். அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் அவையை முடக்குவதால் என்ன லாபம் கிடைத்துவிடும்? என்பதை ஏன் எதிர்க்கட்சிகள், குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி யோசிப்பதில்லை.
பிரதமரும், உள்துறை அமைச்சரும் ஆரம்பத்தில் அவைக்கு வரவில்லை சரி. அவர்கள் வந்தபோது அதைப் பயன்படுத்திக் கொண்டு விவாதத்தை எதிர்க்கட்சித் தலைவர் முன்னெடுக்காதது ஏன்? நாடாளுமன்ற ஜனநாயகம் கூச்சல் - குழப்பத்தின் அடிப்படையில் செயல்படுவதல்ல - விவாதத்தின் அடிப்படையில் நடப்பது. இதை யார் புரிய வைப்பது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







