உறவுகள் தொடர்கதை!

மலேசியாவில் 30 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வாழ்கிறார்கள். இரண்டு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் 18 பில்லியன் டாலரைக் கடந்திருக்கிறது.
மலேசியாவில் பிரதமர் மோடி
மலேசியாவில் பிரதமர் மோடிஎக்ஸ் | பிரதமர் மோடி
Updated on
2 min read

சோவிவியத் யூனியனின் வீழ்ச்சியும், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் கம்யூனிஸத்தைக் கைவிட்டு ஜனநாயகத்துக்கு மாறியதும் சர்வதேச அரசியலில் மிகப்பெரிய மாற்றத்துக்கு வழிகோலின. அப்படிப்பட்ட சூழலில்தான் அன்றைய நரசிம்மராவ் தலைமையிலான அரசு, மேலைநாடுகளை மட்டுமே சார்ந்திராமல், கீழை நாடுகளுடனான நட்புறவை வலுப்படுத்தும், 'கிழக்கு நோக்கிய பார்வை' என்கிற வெளியுறவுக் கொள்கையை முன் மொழிந்தது.

நரசிம்மராவைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய், டாக்டர் மன்மோகன் சிங் இருவருமே 'கிழக்கு நோக்கிய பார்வை' கொள்கையை முன்னெடுத்துச் சென்றனர். 2014-இல் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் ஆட்சி அமைந்த போது, 'கிழக்கு நோக்கிய பார்வை' என்பது 'கிழக்கை முன்னிலைப்படுத்தும் செயல்பாடு' (ஆக்ட் ஈஸ்ட்) என்று மாற்றப்பட்டு, எல்லா கிழக்காசிய நாடுகளுடனும் மிக நெருக்கமாக நட்புறவுக்கு முன்னுரிமை அளிக்க முற்பட்டது.

கிழக்காசியாவைவிட, தென்கிழக்கு ஆசியாவுடனான இந்தியாவின் தொடர்பு என்பது கலாசார ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் பல நூற்றாண்டு நெருக்கத்தைக் கொண்டது.

புரூணே, மியான்மர் (பர்மா), கம்போடியா, ஈஸ்ட் தைமூர், இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, பிலிப்பின்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியத்நாம் நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஆயிரமாண்டுகளுக்கும் முன்பே, வர்த்தக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தொடர்பு நிலவுகிறது. இந்தப் பின்னணியில்தான் பிரதமர் நரேந்திர மோடியின் மலேசியாவுக்கான இரண்டு நாள் அரசு முறைப் பயணத்தை நாம் பார்க்க வேண்டும்.

மலேசியாவின் நிர்வாகத் தலைநகரான புத்ரா ஜெயாவில் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட பிரம்மாண்டமான அரசுமுறை வரவேற்பு எந்த அளவுக்கு மலேசியாவின் அன்வர் இப்ராஹிம் அரசு இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. மலேசியவாழ் இந்திய வம்சாவளியினருடனான பிரதமர் மோடியின் சந்திப்பும். இரு நாடுகளுக்கு இடையே நடந்த அதிகாரிகள் நிலையிலான பேச்சுவார்த்தைகளும் சம்பிரதாயச் சடங்குகளாக அல்லாமல், மலேசியாவை இந்தியா ஒரு முக்கியமான தோழமை நாடாகப் பார்ப்பதன் அடையாளமாகத்தான் கருத வேண்டும்.

இந்தியாவும் மலேசியாவும் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் இருந்த நாடுகள். அதற்கு முன்பாகவே வரலாற்று ரீதியிலான தொடர்புகள் இரு நாடுகளுக்கு இடையேயும் இருந்திருக்கின்றன. கடல் வணிகத் தொடர்பு பல நூற்றாண்டுகளாக இருந்திருப்பது மட்டுமல்லாமல், மலேசிய ரப்பர் தோட்டத்தில் வேலைபார்க்க ஆயிரக் கணக்கான இந்தியர்கள் பிரிட்டிஷாரால் இங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். அதனால், அங்கே இந்தியக் கலாசாரம், முக்கியமாக நமது தமிழ் கலாசாரம், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வேரூன்றி தழைத்து வந்திருக்கிறது.

30 லட்சத்துக்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் மலேசியாவில் வாழ்கிறார்கள். அங்கிருக்கும் பத்துமலை முருகன் கோயிலும் சரி, தேயிலைத் தோட்டங்களிலும், பல்வேறு மாநிலங்களிலும் உள்ள மாரியம்மன் கோயில்களும் சரி, தமிழகத்தில்கூட இல்லாத அளவுக்கு பக்தர்களை ஈர்க்கும் ஆன்மிக மையங்களாகத் திகழ்கின்றன.

வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் இரண்டு நாடுகளும் டாலர், யூரோ உள்ளிட்ட அந்நியச் செலாவணிகளை நாடாமல் ரூபாய், ரிங்கிட் என இரு நாட்டுச் செலாவணிகளைக் கையாள்வது என்று முடிவெடுத்திருப்பது மிக முக்கியமான நகர்வு. எல்லை தாண்டிய பணப் பரிமாற்றங்களுக்காக இந்திய தேசிய பணம் செலுத்துகை ஆணையம் (என்.ஐ.பி.எல்.) மலேசியாவில் 'பேநெட் தளம் இடையே மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தின் மூலம் மலேசியாவில் இந்தியர்கள் யுபிஐ சேவையைப் பயன்படுத்த முடியும்.

வர்த்தகம், முதலீடு, தொழில் நுட்பம், செமி கண்டக்டர், பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, சுகாதாரம், மருந்துகள் உள்பட 11 ஒப்பந்தங்கள் இரண்டு நாடுகளுக்கும் இடையே கையொப்பமாகி இருக்கின்றன. இரு நாடுகளின் கூட்டறிக்கையில், அனைத்து வடிவிலான பயங்கரவாதத்துக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டி ருக்கிறது.

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு. அது குறித்து விளக்க மலேசியாவுக்கு அனுப்பப்பட்ட இந்தியக் குழுவை இஸ்லாமிய நாடான மலேசியா புறக்கணிக்க வேண்டும் என்கிற பாகிஸ்தானின் வேண்டுகோளை நிராகரித்தது அந்த நாடு. "மதத்தின் அடிப்படையிலான அணுகுமுறையில் மலேசியா உடன்படவில்லை” என்று அறிவித்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தின் மிக முக்கியமான அறிவிப்பு, கோலாலம்பூரில் உள்ள புகழ்பெற்ற மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் மையம் அமைக்கப்படும் என்பது. இந்தியாவில் கல்வி பயிலும் மலேசிய மாணவர்களுக்கு திருவள்ளுவர் பெயரில் உதவித்தொகை வழங்கப்படும் என்கிற பிரதமர் மோடியின் அறிவிப்பு அதைவிடச் சிறப்பு.

மலேசியாவில் 30 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வாழ்கிறார்கள். இரண்டு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் 18 பில்லியன் டாலரைக் கடந்திருக்கிறது. பிரதமரின் பயணத்துக்குப் பிறகு வர்த்தகம் அதிகரிப்பது மட்டுமல்லாமல், எல்லாத் துறைகளிலும் இரு நாட்டு உறவு மேம்படும் என்பதிலும் சந்தேகமில்லை. 'ஆசியான்' கூட்டமைப்புடனான இந்தியாவின் நெருக்கத்தை மேலும் வலுப்படுத்தி இருக்கிறது பிரதமர் நரேந்திர மோடியின் மலேசியாவுக்கான இரண்டு நாள் அரசு முறைப் பயணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com