அவசியமானது... அவசரமானது!

பிரான்ஸ் நாட்டிலிருந்து மேலும் 114 ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்வது என்கிற பாதுகாப்பு அமைச்சகத்தின் முடிவு அவசியமானது மட்டுமல்ல, அவசரமானதும்கூட.
Rafale
ரஃபேல் போா் விமானம்கோப்புப் படம்
Updated on
2 min read

பிரான்ஸ் நாட்டிலிருந்து மேலும் 114 ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்வது என்கிற பாதுகாப்பு அமைச்சகத்தின் முடிவு அவசியமானது மட்டுமல்ல, அவசரமானதும்கூட. 114 ரஃபேல் போர் விமானங்கள் உள்பட மொத்தம் ரூ 3.60 லட்சம் கோடிக்கான ராணுவத் தளவாடங்களை கொள்முதல் செய்யும் முடிவுக்கு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (டிஏசி) ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்த கொள்முதல் குறித்த ஒப்பந்தம் டஸôல்ட் விமான நிறுவனத்துடன் விலை குறித்த முக்கியமான பேச்சுவார்த்தைக்குப் பிறகுதான் முறைப்படி கையொப்பமாகும்.

ஏற்கெனவே 36 ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டு இந்திய விமானப் படையின் பயன்பாட்டில் உள்ளன. தற்போதைய திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக பிரான்ஸின் டஸால்ட் நிறுவனம் 18 ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸி லேயே தயாரித்து அனுப்பும். எஞ்சிய விமானங்கள் 50% உள்நாட்டு உதிரிபாகங்களுடன் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும். இதற்கான செலவு சுமார் ரூ.3 லட்சம் கோடி என்று கணக்கிடப்படுகிறது.

பொதுப் பயன்பாட்டுக்கும், ராணுவத்துக்கும் விமானங்கள் இந்தியாவுக்கு அத்தியாவசியத் தேவையாக இருக்கின்றன. குறிப்பாக, இந்திய விமானப் படையின் படைப்பிரிவுகள் (ஸ்குவாட்ரன்ஸ்) எண்ணிக்கை குறைந்து வருவது கவலைக்குரியதாக இருந்து வருகிறது. அந்த வகையில், 114 ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்வதற்கு அனுமதி வழங்கி இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

இப்போதைய கொள்முதல் திட்டத்தின்படி, உள்நாட்டில் 50 % பாகங்கள் தயாரிக்கப்பட இருப்பது மிக முக்கியமான அம்சம். விமானப் படையின் தேவைக்கானாலும், பொதுத் தேவைக்கானாலும் இந்தியாவிலேயே விமானங்கள் தயாரிக்கப்படுவது என்பது நமது தற்சார்புக்கும், வளர்ச்சிக்கும் அவசியமானது. இந்தியாவிலேயே விமானங்களைத் தயாரிப்பதற்காக ரூ.12,511 கோடியை ஒதுக்க அரசு ஏற்கெனவே திட்டமிட்டுள்ளது. அதில் பெரும் பகுதி கட்டமைப்பு, சோதனைகள், ஒப்புதலுக்காக (சர்டிபிகேஷன்) செலவிடப்படும்.

"ஒப்புதல்' என்பது தொழில்நுட்ப ரீதியிலான சவால் மட்டுமல்ல, மிகப் பெரிய செலவை உடையது. எந்த ஒரு விமானம் தயாரிக்கப்பட்டாலும் ஐரோப்பிய யூனியன் விமான சேவை பாதுகாப்பு அமைப்பு அல்லது அமெரிக்க பெடரல் விமான சேவை நிர்வாகம் இரண்டில் ஒன்றின் ஒப்புதலை (சர்டிபிகேஷன்) பெற்றாக வேண்டும். அந்த ஒப்புதல் இல்லாத விமானங்கள் எந்த ஒரு விமான சேவை நிறுவனத்திலும் இயங்க முடியாது. சீனா, சி - 919 என்கிற பயணிகள் சேவை விமானத்தை உற்பத்தி செய்து 2023-இல் வர்த்தக ரீதியாக சந்தைப்படுத்தியது. ஆனால், இதுவரையிலும் ஒப்புதல் வழங்கப்படாததால் எந்த ஒரு நாடும் அதை வாங்கவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

விமானங்கள் தயாரிப்பு என்பது மிகப் பெரிய சவால். அதற்கான பல்வேறு பாகங்களை உற்பத்தி செய்யும் பரவலான தொழில்நுட்பச் சூழல் இருந்தால் மட்டுமே சாத்தியம். பல்வேறு பாகங்களை உற்பத்தி செய்து வழங்க ஆயிரக்கணக்கான உற்பத்தியாளர்கள் தயாரிப்பில் இணைய வேண்டும். தரையிறங்குவதற்கான லேண்டிங் கியர், விமானத்தின் "புரொப்பல்லர்' எனப்படும் விசிறி, ராடார் கருவிகள், தொலைத்தொடர்பு சாதனங்கள் என்று விமானத்தின் ஒவ்வொரு பகுதியும் நுணுக்கமான தொழில்நுட்பம் சார்ந்தவை.

அடுத்தாற்போல, விமானத்தின் மிக முக்கியப் பகுதியான என்ஜினை உள்நாட்டில் உற்பத்தி செய்துவிட முடியாது. சீனா உற்பத்தி செய்த சி 919-இல் உள்ள என்ஜினேகூட இறக்குமதி செய்யப்பட்டதுதான். அதனால், உள்நாட்டில் 50% விமான பாகங்களை உற்பத்தி செய்வது என்பது உடனடியாக சாத்தியப்படுவது கடினம்.

விமானம் உற்பத்தி செய்வது ஒரு புறம் இருந்தாலும், டஸால்டின் ரஃபேல் போர் விமானம் கொள்முதல் செய்வதுகூட எளிதல்ல. ரஃபேல் போர் விமானத்தின் உதிரிபாகங்களை வழங்கும் எல்எம்டி ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஓர் அமெரிக்க நிறுவனத்தால் வாங்கப்பட்டிருக்கிறது. அதனால், ரஃபேல் விற்பனை அமெரிக்காவின் சர்வதேச ஆயுத விற்பனை விதிமுறைகளுக்குள் வரும். எல்எம்டி பாகங்களுடன் தயாரிக்கப்படும் ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குவதற்கு அமெரிக்காவின் அனுமதி தேவை.

அடுத்த 10 ஆண்டுகளில் பயணிகள் விமான சேவைக்காக மட்டுமே 2,000-க்கும் அதிகமான விமானங்கள் தேவை. அவற்றை இறக்குமதி செய்வதைத் தவிர வழியில்லை. அதேபோல, நமது விமானப் படைக்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, கையொப்பமாக இருக்கும் ரஃபேல் போர் விமானங்கள் தவிர்க்க முடியாதவை.

பிரேஸிலின் எம்பிரேயர் நிறுவனத்துடன் இந்தியாவில் விமான உற்பத்தியை மேற்கொள்ள அதானி குழுமம் மேற்கொண்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் வரவேற்புக்குரிய நல்ல முடிவு.

விமானத் தயாரிப்பு என்பது போர் விமானம் தயாரிப்பதற்கும், உள்நாட்டு விமானங்கள் தயாரிப்பதற்கும் மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்களையும் உருவாக்கும். அதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். விமானத் தயாரிப்பு முயற்சியை இப்போது தொடங்கினால்தான் அடுத்த 10 ஆண்டுகளிலாவது சீனாவைப்போல சொந்தமாக விமானம் தயாரிக்கும் நிலைக்கு இந்தியா உயரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com