

நிகழாண்டுக்கான பத்ம விருதுகள் 131 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. கலை, அறிவியல், சமூக சேவை, மருத்துவம், இலக்கியம், விளையாட்டு உள்பட பல்வேறு துறைகளில் தலைசிறந்த பங்களிப்பை நல்கிய விருதாளர்களில் வழக்கம்போல் அதிகம் அறியப்படாத, பிரபலம் அல்லாதவர்களும் தேர்வு செய்யப்பட்டிருப்பது, பத்ம விருதுகள் பரவலாகச் சென்றடைய வேண்டும் என்கிற மத்திய அரசின் முனைப்பைக் காட்டுகிறது.
மறைந்த கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன், மறைந்த பாலிவுட் நட்சத்திரம் தர்மேந்திரா சிங் தியோல், நடிகர் மம்மூட்டி, மறைந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன், டென்னிஸ் நட்சத்திரம் விஜய் அமிர்தராஜ், உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் பகத் சிங் கோஷியாரி, மறைந்த பாஜக மூத்த தலைவர் வி.கே.மல்ஹோத்ரா, கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா போன்றோர் நிகழாண்டு விருது அறிவிக்கப்பட்டிருப்பவர்களில் குறிப்பிடத்தக்க பிரபலங்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் கே.ஆர்.பழனிசாமி மருத்துவப் பிரிவிலும், தொழிலதிபர் எஸ்.கே.எம்.மயிலானந்தன் சமூக சேவைப் பிரிவிலும் பத்ம பூஷண் விருது பெற்றிருக்கின்றனர். 98 வயதிலும் மருத்துவ சேவையாற்றும் ஹெச்.வி.ஹண்டேவுக்கு மருத்துவப் பிரிவிலும், எழுத்தாளர் சிவசங்கரிக்கு இலக்கியப் பிரிவிலும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் 13 விருதுகள் (பத்ம பூஷண்-2, பத்ம ஸ்ரீ-11) அறிவிக்கப்பட்டிருப்பது நமது மாநிலத்துக்குக் கிடைத்த பெருமை.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை குரும்பர் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின ஓவியர் கிருஷ்ணன் கிட்னாவுக்கு மறைவுக்குப் பிந்தைய பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. பழங்குடியின குரும்பர் ஓவியக் கலையில் சிறந்தவராகவும், நீலகிரியின் பாரம்பரிய ஓவியக் கலையில் கலை மற்றும் கலாசார பணியில் மிகுந்த பங்களிப்பு அளித்தவராகவும் விளங்கியவர். இவரது ஓவியம் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களிலும், இத்தாலி போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டு பிரபலமானது.
சிற்பக் கலையில் கடந்த 50 ஆண்டுகளாக ஈடுபாட்டோடு பணியாற்றி வரும் சேலத்தைச் சேர்ந்த ராஜா ஸ்தபதி பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். செய்யும் தொழிலை நேசித்து உழைத்தால் அதற்குப் பலன் உண்டு என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு. இயந்திரங்களின் துணையின்றி, நுண்ணிய வேலைப்பாடுகளுடன், உயிரோட்டமாக இவர் வடித்த வெண்கல, உலோக கடவுள் உருவச் சிலைகள் வெளிநாடுகளிலும் அலங்கரிக்கின்றன.
தமிழிசை, தேவார - திருப்புகழ், சைவ வழிபாட்டு மரபு ஆகியவற்றை அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் சென்ற அரிய சேவைகளைப் பாராட்டி, திருத்தணி ந. சுவாமிநாதன் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். திருத்தணி முருகன் கோயில் மற்றும் அதன் உபகோயில்களில் ஆன்மிகச் சொற்பொழிவு மற்றும் ஓதுவராக 26 ஆண்டுகள் பணியாற்றி, கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இவர் தமிழகம் முழுவதும் கோயில்களில் தேவாரம், திருவாசகம், திருப்பாவை போன்ற இறையருள் பாடல்கள் பாடி வருகிறார்.
பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சாவூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியரும், கால்நடை மருத்துவருமான ந.புண்ணியமூர்த்தி, மாடுகளைத் தாக்கும் பல்வேறு நோய்களுக்குச் சித்த மருந்து மற்றும் வீட்டு வைத்திய முறைகளை ஊக்குவித்து, எளிய வழிகளில் கால்நடை பராமரிப்புக்கு வழிகாட்டி வருகிறார். இவருக்கு அளிக்கப்படும் விருது பாரம்பரிய வைத்தியமுறையை செய்து வருபவர்களுக்கு உந்து சக்தியாக இருக்கும்.
விளையாட்டுப் பிரிவில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள புதுச்சேரியைச் சேர்ந்த சிலம்பப் பயிற்சியாளர் கே. பழனிவேல், சிலம்பக் கலையை இலவசமாகக் கற்பித்து வருகிறார். கடந்த 40 ஆண்டுகளில் இவரிடம் சுமார் 30,000 பேர் சிலம்பப் பயிற்சி பெற்றுள்ளனர் என்பதும், இவர்களில் 500 பேர் வெளிநாட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மனிதர்களுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்கும் சிலம்பக் கலையைப் பள்ளிகளில் பாடமாக வைக்க வேண்டும் என்கிற இவரது வேண்டுகோள் ஆட்சியாளர்கள் பரிசீலிக்கத்தக்கது.
இவர்களுடன் 20 லட்சம் புத்தகங்களுடன் உலகின் மிகப் பெரிய இலவச நூலகத்தை அமைத்த கர்நாடகத்தைச் சேர்ந்த முன்னாள் பேருந்து நடத்துநர் அன்கே கௌடா, ஆசியாவின் முதல் தாய்ப்பால் வங்கியை நிறுவிய குழந்தைகள் மருத்துவரான மகாராஷ்டிரத்தின் அர்மிதா ஃபெர்னாண்டஸ், 90 வயது பழங்குடியின இசைக் கலைஞரான மகாராஷ்டிரத்தின் பிகில்யா லடாக்யா திண்டா, சத்தீஸ்கரில் நக்ஸல் பாதிப்புமிக்க பகுதியில் பள்ளிகளைக் கட்டமைத்த புத்ரி தாதி உள்ளிட்டோரும் பத்ம விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.
மொத்தம் 131 பத்ம விருதுகளில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேலாக பிரபலம் அல்லாதவர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். பிரபலம் அல்லாதவர்கள் என்ற வகையில், ஆறு விருதுகளுடன் மேற்கு வங்கம் முதலிடத்திலும், ஐந்து விருதுகளுடன் தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளன. உ.பி., மகாராஷ்டிரம், அஸ்ஸாம், ஒடிஸா, மத்திய பிரதேசம், கர்நாடகம், குஜராத் ஆகியவை தலா மூன்று விருதுகளுடன் அடுத்த இடத்திலும் உள்ளன.
சாமானியர்கள் செய்யும் செயற்கரிய பங்களிப்புகளுக்கு பத்ம விருதுகள் மூலம் அங்கீகாரம் அளிக்கும் மத்திய அரசின் பணி தொடர்கிறது. இதன்மூலம் அவர்கள் வெளிச்சத்துக்கு வருவதுடன் மட்டுமன்றி, அவர்கள் மேற்கொள்ளும் பணிகள் சமூகத்துக்குப் பெரிதும் பயன்படுகிறது. அவர்களைப் போன்று நாமும் சமூகத்துக்குப் பங்களிக்க வேண்டும் என்கிற ஊக்கத்தையும் பலருக்கு அளிக்கிறது என்பதில் ஐயமில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.