உலகில் உள்ள மிக முக்கியமான விவசாயம் சார்ந்த பொருளாதார நாடு இந்தியா என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. பருப்பு வகைகள்; கிராம்பு; ஏலம்; மிளகு உள்ளிட்ட நறுமண மசாலாப் பொருள்கள் (ஸ்பைசஸ்); பால் உள்ளிட்டவற்றில் நாம்தான் முதன்மையாக இருக்கிறோம். அரிசி, கோதுமை, காய்-கனிகள் உள்ளிட்டவற்றில் உலகில் இரண்டாவது அதிக உற்பத்தி இந்தியாவில்தான்.
இந்தியா 2024-25-இல் முந்தைய சாகுபடி ஆண்டைவிடக் கணிசமாக உற்பத்தி அதிகரித்து இந்தியாவின் தானிய உற்பத்தி 357.7 மில்லியன் டன்னை எட்டியது. 2019-20-இல் 34.5 பில்லியன் டாலராக இருந்த நமது வேளாண் பொருள்களின் ஏற்றுமதி, 2024-25-இல் 51.1 பில்லியன் டாலரை எட்டியது.
2030-இல் நமது வேளாண் உற்பத்தி 100 பில்லியன் டாலரை எட்ட வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. வேளாண் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருக்கிறோம் என்பதும், வேளாண் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்பதும் பாராட்டுக்குரிய போக்கு என்பதில் ஐயப்பாடில்லை. உற்பத்தியின் அளவு அதிகரிப்பது போலவே, நாம் உற்பத்தி செய்யும் வேளாண் பொருள்களின் தரமும் இருப்பது அவசியம். அந்த நிலைமையை நாம் எட்டவில்லை எனும் குற்றச்சாட்டு எழுந்திருப்பது வேதனையளிக்கிறது.
அண்மையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மாம்பழங்களை ஜப்பான் நிராகரித்துத் திருப்பி அனுப்பி இருக்கிறது. அந்த மாம்பழங்கள், ஏற்றுமதிக்கு முன்பு முறையாக பதப்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு, இந்தியாவில் இருந்து ஏற்றுமதியான பச்சை மிளகாய் சீனாவால் நிராகரிக்கப்பட்டது. நரம்பு மண்டலக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடிய மெத்தாபிடோஃபோஸ் என்கிற பூச்சி மருந்து காணப்பட்டது என்பது சீனாவின் குற்றச்சாட்டு.
இது புதிதொன்றுமல்ல. 2024-இல் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய எத்திலின் ஆக்ûஸடு (இடிஓ) இருப்பதாக ஐந்து நாடுகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நறுமண மசாலாப் பொருள்களைத் தடை செய்தன. அவை திருப்பி அனுப்பப்பட்டதுடன், அதில் இருக்கும் பூச்சிக்கொல்லி மருந்து குறித்து விரிவான விசாரணைக்கு ஓரிரு நாடுகள் உத்தரவிட்டன.
நமது வேளாண் ஏற்றுமதியில் சுமார் 12% ஐரோப்பிய யூனியனுக்கு அனுப்பப்படுகின்றன. அந்த நாடுகளில், இறக்குமதிகள் கடுமையான சோதனைகளுக்குப் பிறகுதான் அனுமதிக்கப்படுகின்றன. 2020 முதல் கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து வேளாண் பொருள்களை ஏற்றிச் சென்ற 2,028 கப்பல்கள் 'பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பொருள்கள்' என்று வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
2,028 கப்பல்களின் மூலம் அனுப்பப்பட்ட பெட்டகங்களில், 1,001 கப்பல்களில் இருந்த பெட்டகங்கள் துறைமுகத்தில் இறக்கப்படாமலேயே திருப்பி அனுப்பப்பட்டன. ஏனைய 608 கப்பல் இறக்குமதிகள், எச்சரிக்கை அறிவிப்புடன்தான் நுழைவு அனுமதி வழங்கப்பட்டன. இறக்குமதி செய்யப்பட்ட வேளாண் பொருள்களில் 50% மூலிகைகள், நறுமண மசாலாப் பொருள்கள் என்றால், ஏனைய பொருள்கள் தானியங்களும், அடுமனைப் பொருள்களும் (பேக்கரி).
507 கப்பல்களில் வந்த இறக்குமதிகளில் எத்திலின் ஆக்ûஸடு அதிகபட்ச எச்ச அளவு (மேக்சிமம் ரெசிட்யூ லிமிட்ஸ்) இருந்தது என்றும், 136 கப்பல்களில் இறக்குமதி செய்யப்பட்டவை அஃப்லாடாக்சின்ஸ் அதிகமாகக் காணப்பட்டவை என்றும் சோதனை அறிக்கை தெரிவிக்கிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகளைப் போலவே பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளும் இதேபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்து நமது இறக்குமதிகளை அவ்வப்போது நிராகரித்திருக்கின்றன.
நாடுகளுக்கு நாடு எம்.ஆர்.எல். என்று அழைக்கப்படும் அதிகபட்ச எச்ச அளவு வேறுபடுகிறது. அதைக் கருத்தில் கொண்டு ஏற்றுமதிகளை வகைப்படுத்தாமல் இருப்பதும்கூட நிராகரிப்புகளுக்குக் காரணமாகின்றன. எத்திலின் ஆக்ûஸடு ஐரோப்பிய யூனியனில் 1991-ஆம் ஆண்டு முதல் வயல்களில் தெளிப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் பூச்சி மருந்துகளில் 0.1 மி.கி. அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சொல்லப்போனால், அது இந்தியாவில் ஒரு பூச்சிக்கொல்லியாகக்கூட பதிவு செய்யப்படவில்லை.
வேளாண் பொருள்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி வளர்ச்சிக் கழகத்தின் அனுமதி பெற்ற சோதனைச் சாலைகள் இந்தியாவில் போதுமான அளவில் இல்லை. அதனால், ஏற்றுமதி செய்யப்படும் வேளாண் பொருள்களை சோதனைக்கு உட்படுத்தி, அந்தச் சோதனைச் சாலைகளின் தரச் சான்றுடன் ஏற்றுமதி செய்யும் வழக்கத்தை நமது ஏற்றுமதியாளர்கள் கடைப்பிடிக்க முடிவதில்லை.
நமது ஏற்றுமதிகள் நிராகரிக்கப்படுவதற்குச் சோதனைச் சாலைகள் இல்லாதது மட்டுமே காரணமல்ல. விவசாயிகளின் அதிகரித்த பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், அவர்களுக்குப் போதுமான பயிற்சி அளிக்கப்படாமல் இருப்பது, அறுவடைக்குப் பிறகான கையாளுதலை நவீனப்படுத்தாமல் இருப்பது உள்ளிட்டவையும்கூட அதற்குக் காரணங்கள்.
ஏற்றுமதிகளில் மட்டுமல்ல, உள்நாட்டில் சந்தைப்படுத்தப்படும் வேளாண் பொருள்களும்கூடத் தரமானவையாக, நச்சுத் தன்மையற்றவையாக இருக்க வேண்டும்.
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக்கூடாது; நன்மை தராத செயலைத் தான் விரும்பவும் கூடாது.
திருக்குறள் (எண் 439) அதிகாரம்: குற்றம் கடிதல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யூரியா 83%, டிஏபி 36% இறக்குமதி அதிகரிப்பு: மத்திய அரசு

ஏற்றம் தருகின்றன ஏற்றுமதிகள்!

தற்சார்பு மட்டுமே தீர்வல்ல!

இந்தியாவின் ஜூன் மாத ஏற்றுமதி 15.5% அதிகரிப்பு
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



