காலத்தின் கட்டாயம்!
கார்னியின் வருகையின் மூலம் இந்தியா-கனடா வர்த்தக உறவு வலுப்படுவது ஒருபுறம் இருக்க, இரு நாடுகளின் நட்புறவில் ஒரு நெகிழ்வுத்தன்மை ஏற்பட்டிருக்கிறது.


மேற்காசியாவில் மூண்டுள்ள போர் பரபரப்புக்கு மத்தியில் கனடா பிரதமர் மார்க் கார்னியின் இந்திய வருகையின் முக்கியத்துவம் உணரப்படவில்லை. சற்றே குறைந்துதான்விட்டது. ஆனால், முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவிக் காலத்தில் கனடா} இந்தியா இடையிலான உறவு விரிசல் அடைந்து, மீண்டும் வலுப்பட்டுவரும் சூழலில், கார்னியின் நான்கு நாள் பயணம் இந்தியா, கனடா இரு நாடுகளுக்கும் மிகவும் அவசியமானது.
புது தில்லியில் மார்க் கார்னியும், பிரதமர் நரேந்திர மோடியும் மார்ச் 2-ஆம் தேதி நடத்திய பேச்சுவார்த்தையில் இந்தியா}கனடா உத்திசார்ந்த கூட்டுறவு, வர்த்தகம் மற்றும் முதலீடு, வேளாண்மை, கல்வி, ஆராய்ச்சி உள்ளிட்ட முக்கியத் துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் ஒத்துழைப்பு குறித்து ஆலோசித்தனர். எரிசக்தித் துறையில் கூட்டுறவை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்லும் வகையில் ஹைட்ரோகார்பன்கள், பசுமை ஹைட்ரஜன், எரிசக்தி சேமிப்பு மீது கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டது.
இந்தச் சந்திப்பின்போது முக்கியக் கனிமங்கள் துறையில் ஒத்துழைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு உள்ளிட்ட ஒப்பந்தங்களை இரு நாடுகளும் மேற்கொண்டன. அதில், சிவில் அணுசக்தித் துறையில், நீண்டகால யுரேனியம் விநியோகத்துக்கு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மிகவும் முக்கியமானது.
2.6 பில்லியன் டாலர் (சுமார் ரூ.23,833 கோடி) மதிப்பு கொண்ட இந்த ஒப்பந்தத்தின் கீழ், 2027 முதல் 2035-ஆம் ஆண்டு வரை, அணுசக்தி உற்பத்திக்கு சுமார் 2.2 கோடி பவுண்ட் யுரேனியத்தை இந்தியாவுக்கு கனடா விநியோகம் செய்ய உள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை 2030}ஆம் ஆண்டுக்குள் 50 பில்லியன் டாலராக (சுமார் ரூ.4.58 லட்சம் கோடி) அதிகரிக்கவும், அதைச் சாத்தியமாக்கும் வகையில் விரிவான பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்வதற்கும் இரு பிரதமர்களின் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே, இந்தியாவின் வளர்ச்சி மீது கனடா கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாக கனடா ஓய்வூதிய நிதியின் 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9.15 லட்சம் கோடி) இந்தியாவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டாவது ஆட்சிக் காலம் தொடங்கியதிலிருந்தே உலக ஒழுங்கே படிப்படியாக மாறி வருகிறது. வர்த்தகத்துக்கு ஒரே நாட்டை நம்பியிருக்காமல், தங்களுக்கு உகந்த நாடுகளுடன் இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம் என்பதுதான் உலக நாடுகளுக்கு டிரம்ப் கற்றுக்கொடுத்திருக்கும் பொருளாதார பாடம். டிரம்ப்பின் கூடுதல் வரிவிதிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து பல நாடுகளும் இருதரப்பு தடையற்ற வர்த்தகத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கின்றன.
கனடாவுடன் இந்தியா மேற்கொள்ளவுள்ள விரிவான பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தம் அதிகாரபூர்வமாக தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்தான். ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள இந்த விரிவான பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை விரைவில் இறுதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 2025}26}ஆம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட பிரிட்டன், ஓமன், நியூஸிலாந்து, ஐரோப்பிய யூனியனுடான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் வரிசையில் கனடாவுடனான ஒப்பந்தமும் இணையும்.
ஒருசில உலக வல்லரசுகள் வைத்ததே சட்டம் என்ற நிலை அண்மைக்காலமாக அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழலில் வளரும் நாடுகளால் என்ன செய்ய முடியும் என்பதற்கு கனடா பிரதமர் மார்க் கார்னி ஓர் எடுத்துக்காட்டு சொல்கிறார். ஸ்விட்சர்லாந்தின் டாவோஸில் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி உலக வர்த்தக அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் மார்க் கார்னி ஆற்றிய உரை வளரும் நாடுகள் அனைத்தும் பின்பற்றத்தக்கவை.
"சக்தி வாய்ந்தவர்களுக்கு அவர்களின் சக்தி உண்டு. ஆனால், நமக்கும் ஒரு சக்தி இருக்கிறது} பாசாங்கை உடைக்கும் திறன், எதார்த்தத்தை உறுதி செய்யும் திறன். நமது பலத்தைக் கட்டியெழுப்ப ஒன்றாகச் செயல்பட வேண்டும். அதுதான் கனடாவின் பாதை. நாங்கள் அதை வெளிப்படையாகவும் நம்பிக்கையுடனும் தேர்வு செய்கிறோம். கனடா போன்ற இடைநிலை சக்திகள் பலவீனமானவை அல்ல. சக்தி குறைந்த நாடுகளின் அதிகாரம் நேர்மையுடன் தொடங்குகிறது' என்பதுதான் கார்னி உரையின் சாராம்சம்.
இந்தியா போன்ற பல நாடுகளும் இப்போது தற்சார்புக் கொள்கை என்கிற வியூகத்தை நாடுகின்றன. இதை ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளும் கார்னி, "தற்சார்பு என்பது அதிக செலவுடையதாகும்; மீள்தன்மைக்கான நடவடிக்கைகளில் தற்சார்பைவிடக் கூட்டு முதலீடுகள் மலினமானவை' என்கிறார். அதன்படி, கடந்த ஆறு மாதங்களில் நான்கு கண்டங்களில் 12 வர்த்தக மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கனடா கையொப்பமிட்டிருக்கிறது.
கார்னியின் வருகையின் மூலம் இந்தியா-கனடா வர்த்தக உறவு வலுப்படுவது ஒருபுறம் இருக்க, இரு நாடுகளின் நட்புறவில் ஒரு நெகிழ்வுத்தன்மை ஏற்பட்டிருக்கிறது.
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக முன்னாள் பிரதமர் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டால் ஏற்பட்ட மனக்கசப்பு விலகும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...