தாமதித்திருக்க வேண்டாமே...
மகளிருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான முனைப்பு மீண்டும் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்கள்
நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்கள்
மக்களவையிலும் மாநில சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு 33% இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான முனைப்பு மீண்டும் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. 2023-இல் 106-ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது மகளிர் இடஒதுக்கீடு சட்டம். அதை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வருவோம் என்று புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிவித்தது.
2026-க்குப் பிறகு நடைபெறவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடத்தி அதன் பிறகு மகளிர் இடஒதுக்கீடு நடத்தப்படும் என்று அந்தச் சட்டத்தின் 5-ஆவது பிரிவில் கூறப்பட்டிருந்தது. இப்போது மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்க இருக்கும் நிலையில், 2011 கணக்கெடுப்பின் அடிப்படையில் அதை நிறைவேற்றுவது குறித்த ஆலோசனையில் இறங்கியிருக்கிறது மத்திய அரசு.
"நாரி சக்தி வந்தன் அதிநியம்' எனப்படும் மகளிருக்கான இட ஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப்படுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்), சிவசேனை (உத்தவ் தாக்கரே), முஸ்லிம் மஜ்லிஸ் கட்சிகளுடன் உள்துறை அமைச்சர் கலந்தாலோசித்து பேசியிருக்கிறார். அடுத்த வாரம் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, சமாஜவாதி கட்சிகளுடன் கலந்தாலோசிக்க இருக்கிறார்.
இப்போது இருக்கும் மக்களவையின் 543 இடங்களை 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 816 இடங்களாக அதிகரித்தால் என்ன? என்பது அரசு முன்மொழிந்திருக்கும் யோசனை. அதில் மூன்றில் ஒரு பங்கு, 272 இடங்களை, மகளிருக்காக ஒதுக்கீடு செய்யலாம் என்று பரிந்துரை செய்திருக்கிறது.
மக்களவையிலும் மாநில சட்டப்பேரவைகளிலும் இடங்களை 50% அதிகரித்து அதனடிப்படையில் 2029}இல் பொதுத்தேர்தலை நடத்துவதென்றும் கருத்துகள் கூறப்பட்டிருக்கின்றன.
புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவை, சட்டப்பேரவைகளின் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்றும், அப்போது இப்போதிருக்கும் ஆண்களுக்கான இடங்களின் எண்ணிக்கையைக் குறைக்காமல், மகளிருக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தலாம் என்பதும்தான் அரசின் நோக்கமாகத் தெரிகிறது. அப்படியானால் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு முடிவதற்கு பல ஆண்டுகள் எடுக்கும். 2034 மக்களவைத் தேர்தலையொட்டித்தான் மகளிருக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த முடியும் என்பதை ஆலோசனைக் கூட்டத்தில் அரசு சுட்டிக்காட்டி இருக்கிறது.
இதை மனதில் வைத்துதான், 2029 மக்களவைத் தேர்தலின்போதே வாக்குறுதி அளித்ததைப்போல மகளிர் இடஒதுக்கீட்டை நிறைவேற்றுவதில் முனைப்பு காட்டுகிறது மத்திய அரசு. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்குக் காத்திருக்காமல், 2011 கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பை நடத்தி மக்களவை, சட்டப்பேரவைகளின் இடங்களை அதிகரித்து மகளிருக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்துவது என்பது அரசின் எண்ணம்.
அது சுலபமானதல்ல, அதற்கு மீண்டும் அரசமைப்பு சாசனத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இதற்கான மசோதாவை உடனடியாக தாக்கல் செய்தாக வேண்டும். ஏப்ரல் 2}ஆம் தேதி முடிவடைய இருக்கும் இப்போதைய கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய முடியாவிட்டாலும், அதற்காக சிறப்புக் கூட்டத்தை கூட்டி மசோதாவை அரசு சட்டமாக்க முனைப்புக் காட்டும் என்று தோன்றுகிறது.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதுவரை நான்கு தொகுதி மறுசீரமைப்பு ஆணையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அவை தங்களது பணியை முடிப்பதற்கு பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டன. கடைசியாக 2002-இல் ஏற்படுத்தப்பட்ட ஆணையம் 6 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. அப்போது தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் எல்லையை மட்டுமே அந்த ஆணையம் மறுசீரமைத்தது என்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. அதனால், இப்போது அறிவிக்கப்பட இருக்கும் ஆணையம் 2029}க்குள் தனது பணியை நிறைவேற்றுவது இயலாத ஒன்று.
2023-இல் அரசமைப்பு சாசனத் திருத்தம் மூலம் மசோதாவை சட்டமாக்கிய போதே இப்போதுள்ள இடங்களில் 33% இடங்களை மகளிருக்கு ஒதுக்கீடு செய்திருக்கலாம். பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கு பிறகு உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கி மகளிருக்கான இடஒதுக்கீட்டை அதிகரித்திருக்கலாம். அப்போது செய்யாமல் விட்டதை இப்போது அவசரக் கோலத்தில் செய்ய அரசு ஏன் முனைப்புக் காட்டுகிறது என்று தெரியவில்லை.
2023 சட்டத்தில் பட்டியலினப் பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், பிற்படுத்தப்பட்ட வகுப்பு மகளிருக்கான ஒதுக்கீடு இல்லை. இந்திய மகளிரில் 40% பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மகளிர் என்பதை சமாஜவாதி கட்சியும், ராஷ்ட்ரீய ஜனதாதளமும் சுட்டிக்காட்டுகின்றன.
அதேபோல, மாநிலங்களவை- மாநில மேலவைகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு குறித்து 2023 சட்டம் குறிப்பிடவில்லை.
புதிய மசோதா தாக்கல் செய்யும்போது இதுகுறித்தும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.மக்கள்தொகை கணக்கெடுப்பு முடியும் வரை மகளிருக்கான இடஒதுக்கீடு காத்திருக்காது என்பதுவரை மகிழ்ச்சி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...