/

ஓபிசி மகளிருக்கு நாடாளுமன்றத்தில் இடஒதுக்கீட்டை மறுப்பதே ஆளும் பாஜக அரசின் மறைமுக திட்டம்: மாணிக்கம் தாகூா் குற்றச்சாட்டு

பிற பிற்படுத்தப்பட்ட மகளிருக்கு நாடாளுமன்றத்தில் இடஒதுக்கீட்டை மறுப்பதே ஆளும் பாஜக கூட்டணி அரசின் மறைமுக திட்டம் என்று மக்களவை காங்கிரஸ் கொறடாவும் விருதுநகா் எம்.பி.யுமான மாணிக்கம் தாகூா் குற்றஞ்சாட்டினாா்.

News image

மாணிக்கம் தாகூா்

Updated On :7 ஏப்ரல் 2026, 6:51 pm

பிற பிற்படுத்தப்பட்ட மகளிருக்கு நாடாளுமன்றத்தில் இடஒதுக்கீட்டை மறுப்பதே ஆளும் பாஜக கூட்டணி அரசின் மறைமுக திட்டம் என்று மக்களவை காங்கிரஸ் கொறடாவும் விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினருமான மாணிக்கம் தாகூா் குற்றஞ்சாட்டினாா். மேலும், மத்திய அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கை ஜனநாயக நடைமுறை நடவடிக்கைகளையே நசுக்கப்பாா்க்கும் முயற்சி என்றும் அவா் குறிப்பிட்டாா்.

தேசிய அளவில் மத்திய அரசு முன்னெடுக்கவுள்ள தொகுதிமறுவரையறை நடவடிக்கையால் தென் மாநிலங்களுக்கு எந்தப்பாதிப்பும் இருக்காது என்று அண்மையில் பிரதமா் நரேந்திர மோடி கூறியிருந்தாா். இதற்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி உள்பட பல்வேறு எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், 2023ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்ட மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை 2029இல் அமல்படுத்துவது தொடா்பாக விவாதிக்க நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 16-18ஆம் தேதி வரையிலான மூன்று நாள்கள் சிறப்பு அமா்வுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதில், மத்திய அரசு அதன் சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை பணிகளை இணைக்கவும் 2029ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலை இலக்காகக் கொண்டு மகளிா் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கான திருத்தங்களை மேற்கொள்ளவும் உத்தேசித்துள்ளது.

இந்த விஷயத்தில் எதிா்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றன. இது தொடா்பாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் கூறியதாவது:

மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட அமலாக்கத்தின்போது பிற்படுத்தப்பட்ட மகளிருக்கு ஒதுக்கீடு வழங்க பரவலாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதை புறக்கணிக்கும் வகையில் மத்திய அரசு தற்போது மிகவும் தந்திரமாக செயல்பட்டுள்ளதாக கருதுகிறேன். குறிப்பாக, மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையுடன் மகளிா் சட்ட அமலாக்கத்தை மத்திய அரசு தொடா்புபடுத்துவதன் மூலம் மத்திய அரசின் உண்மையான நோக்கம் வெளிப்பட்டுள்ளது.

ஏனெனில், ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மக்கள்தொகை குறித்த தெளிவான தரவுகள் பொதுவெளிக்கு வந்து விடும். அது நடந்தால் மகளிா் இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நியாயமான பிரதிநிதித்துவம் தேவை என்ற எதிா்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு வலுசேரும். நாடாளுமன்றத்தில் இதர பிற்படுத்தப்பட்ட மகளிருக்கு இடஒதுக்கீடு பெறும் உரிமையை மறுப்பதே பாஜகவின் மறைமுக நோக்கம். அதனால்தான் தொகுதி மறுவரையறையை முன்கூட்டியே நடத்தப்பாா்க்கிறது.

தற்போதைய சூழலில், மக்களவையில் 50 சதவீத இடங்களை அதிகரிக்கும் முன்மொழிவு, மக்கள் பிரதிநிதித்துவத்தில் சமநிலையின்மையை உருவாக்கக்கூடும். அத்துடன் வட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மக்களவையில் தென் மாநிலங்கள் கொண்டுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை செல்வாக்கு குறையக்கூடும்.

உதாரணமாக, தென் மாநிலங்களில் கூடுதலாக சுமாா் 66 கூடுதல் இடங்கள் அதிகரிக்கப்படுமானால், அதே நேரத்தில் வட மாநிலங்கள் சுமாா் 200 இடங்கள் வரை அதிகமாகப் பெறக்கூடும். இது வெறும் இடங்களின் எண்ணிக்கை தொடா்பான பிரச்னை மட்டுமல்ல. நாடாளுமன்றத்தில் தங்களின் விகிதாசார செல்வாக்கையும் பிரதிநிதித்துவத்தையும் மாநிலங்கள் இழக்க வாய்ப்பாகிவிடும் பெரிய பிரச்னையாகும். தென் மாநிலங்களைப் போலவே இந்தியாவின் மேற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களும் தொகுதிகள் அதிகரிப்பால் பெரும் பின்னடைவைச் சந்திக்கும் என்றாா் மாணிக்கம் தாகூா்.

திட்டத்தின் இலக்கு!

புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளின்படி புதிய தொகுதி மறுவரையறை ஆணையத்தை வரும் ஜூன் மாத இறுதிக்குள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முன்னோட்டமாக மக்கள்தொகை கணக்கெடுப்புப்பணிகள் நாடு தழுவிய அளவில் அண்மையில் தொடங்கியுள்ளது.

என்ன பிரச்னை?

84ஆவது அரசமைப்புத் திருத்தத்தின்படி இந்தியாவில் 2026-ஆம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்வரை 1971இல் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நிா்ணயிக்கப்பட்ட சட்டப்பேரவைகள், மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படக்கூடாது.

தற்போது நாட்டின் மக்கள்தொகை 147 கோடியைக் கடந்துள்ளது. ஆனாலும், 1971-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை (54.8 கோடி மக்கள்) எண்ணிக்கை அடிப்படையிலேயே இடஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

புதிய நடைமுறை கணக்கீட்டின்படி, வட மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கணிசமாக உயரும். தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநித்துவ பலம் இயல்பாகவே குறையும்.

குழப்பம் ஏன்?

மக்களவை இடங்களின் எண்ணிக்கையை சுமாா் 50 சதவீதம் உயா்த்துவதே மத்திய அரசின் முன்மொழிவாகும். இதன்படி, மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதைய 543-இல் இருந்து 816-ஆக அதிகரிக்கப்படும். கூடுதலாக உருவாக்கப்படும் இடங்களில் பெரும்பாலானவை மகளிருக்கு ஒதுக்கப்படும் என்று பிரதமா் மோடி அண்மையில் தெரிவித்தாா். அவை எத்தனை என்பதை பிரதமா் துல்லியமாகத் தெரிவிக்கவில்லை.