முன்னெப்போதும் இல்லாத அளவிலான மின்வெட்டை (லோட் ஷெட்டிங்) சந்தித்து வருகிறது கேரளம். இப்போது ஏற்பட்டிருக்கும் மின் தட்டுப்பாட்டுக்கு கேரள மாநில மின்வாரியம் முன்னெச்சரிக்கையுடனும், தொலைநோக்குப் பார்வையுடனும் செயல்படாமல் இருந்ததுதான் காரணம் என்று பரவலாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
ஏப்ரல், மே மாதங்களில் வழக்கமாக அதிகரிக்கும் மின் பயன்பாட்டை ஓராண்டுக்கு முன்பே கேரள மின்வாரியம் உணர்ந்திருந்தும், அதை ஈடுகட்ட மின்சாரம் வாங்குவது குறித்துத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இத்தனைக்கும் கடந்த மூன்றாண்டுகளாகக் கேரளத்தில் வழக்கத்தைவிட அதிகமாக பருவமழை பொழிந்தது.
கடந்த ஆண்டு மிக அதிகமான தண்ணீர் வரவு காரணமாக அணைகள் நிரம்பி வழிந்தன. கோடைகாலத்துக்காக சேமித்து வைக்க வேண்டிய ஐந்து மாதத் தண்ணீரை மின்சார வாரியம் வீணாக்கி விட்டது என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. தாராளமாக அணைகள் நிரம்பி இருந்தும்கூட, அதை முறையாகப் பயன்படுத்தி மின் உற்பத்தியை அதிகரிக்கவும், தண்ணீரை சேமித்து வைக்கவும் தவறியதன் விளைவை இப்போது மாநிலம் எதிர்கொள்கிறது.
ஏப்ரலுடன் ஒப்பிடும்போது ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வெளி மாநிலங்களில் இருந்து பெறும் மின்சாரத்துக்கு விலை குறைவு. அந்த மாதங்களில் அணைகளில் தண்ணீரைச் சேகரித்து வைத்துக் கொண்டு, பிற மாநிலங்களில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய வாரியம் தவறிவிட்டது. அப்போது உற்பத்தியைத் தொடங்கியதன் விளைவாக, அணைகளில் இருந்த வெள்ளம் வீணாக்கப்பட்டது.
மின் பயன்பாடு ஒவ்வோர் ஆண்டும் அதிகரிக்கும் என்பது பொது நியதி; வழக்கம். அதற்கேற்றாற்போல, மின் உற்பத்தியை அதிகரித்துவிட முடியாது. தண்ணீர் மிகை மாநிலமாகக் கேரளம் இருந்தும்கூட அதன் தேவைக்கு ஏற்ப கோடைகாலங்களில் குடிநீர் கிடைப்பதில்லை என்பதுடன், போதிய மின் உற்பத்தியும் இருப்பதில்லை. மாநிலத்தின் 70% மின்தேவை பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் அதிக விலை கொடுத்து வெளியில் இருந்துதான் வாங்கப்படுகிறது.
மாநிலங்களுக்கிடையில் மின்சாரம் வாங்கிக் கொள்வதில் தேசிய அளவில் மத்திய அரசு சில நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்ததைத் தொடர்ந்து, நாடு தழுவிய அளவில் ஓரளவுக்கு மிகப் பெரிய அளவில் மின் விநியோகமும், கொள்முதல் விலையும் சீரமைக்கப்பட்டிருக்கிறது.
அவ்வப்போதைய தேவைக்கேற்ப வெளியில் இருந்து மின்சாரம் வாங்கிக் கொள்ளலாம் என்கிற நிலைப்பாட்டை கேரள மாநில மின்சார வாரியம் கையாள்வதுதான் இப்போது மாநிலம் எதிர்கொள்ளும் மின்வெட்டுக்குக் காரணம். எதிர்பார்த்ததைவிட அதிகரித்த கோடை காரணமாக வட மாநிலங்களில் மின் பயன்பாடு அதிகரித்து விட்டதால், வெளிமாநிலங்களுக்கு உபரி மின்சாரம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
குறைந்த கட்டணத்தில் மின்சாரம் பெறுவதற்கு நீண்டகால அல்லது ஒரு சில ஆண்டுகளுக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ள மின்சார ஒழுங்காற்று ஆணையம் கேரள மின்வாரியத்தைப் பலமுறை கேட்டுக் கொண்டது. ஆனால், அப்படி ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வாரியத்தால் இயலவில்லை. கடந்த பத்தாண்டு பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் இதுபோலக் கடுமையான மின்தடை ஏற்படுவது புதிதொன்றுமில்லை.
அண்டை மாநிலமான கேரளத்துக்கு எதுவோ அதுதான் தமிழகத்துக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. முந்தைய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் தமிழகத்தை எப்படியும் மின்மிகை மாநிலமாக மாற்றிவிட வேண்டும் என்று முன்னெடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள் இப்போதும் நமது
மின் தேவையை ஈடுகட்ட கை கொடுக்கின்றன. ஆனால், ஆண்டுதோறும் அதிகரித்துவரும் மின்தேவையை ஈடுகட்டுவது என்பது சுலபமல்ல.
தமிழகத்தின் கோடை வெப்பம் காரணமாக தினசரி மின் நுகர்வு 20,000 மெகாவாட்டைக் கடந்து விட்டது. அடுத்துவரும் வாரங்களில் அதுவே தினசரி 22,000 மெகாவாட்டாக உயரக்கூடும். சாதாரண காலங்களில் 16,000 மெகாவாட் தேவைப்படும். கோடை அதிகரிக்கும்போது மின்விசிறி, ஏ.சி., குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரிப்பதால் 20,000 மெகாவாட் வரையிலும் அதிகரிப்பது வழக்கம்.
தமிழக மின் வாரியத்தின் கீழ் இயங்கும் அனல் மின்நிலையங்கள் மூலம் தினசரி 4,000 மெகாவாட்; மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 6,000 மெகாவாட்; சூரிய மின்சக்தி மூலம் 6,000 மெகாவாட்; நீண்டகால கொள்முதல் திட்டத்தின் கீழ் 2,000 மெகாவாட்; நடுத்தரகால கொள்முதல் மூலம் 2,000 மெகாவாட் மின்சாரம் தற்போது கிடைத்து வருகிறது. குறுகிய கால மின் கொள்முதல் மூலம் மீதமுள்ள 2,000 மெகாவாட் பெறப்படுகிறது.
மின்சார பரிமாற்றத் திட்டத்தின் கீழ் அடுத்த முன்று மாதங்களுக்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் மின்சாரம் பெறுவதன் மூலம் தேவை ஓரளவுக்கு ஈடுகட்டப்படுகிறது. கேரள மாநிலம்போல அல்லாமல் தமிழ்நாடு மின் வாரியம் ஓரளவுக்கு முன்னெச்சரிக்கையுடன் தயாராக இருந்தாலும்கூட, தடையற்ற மின்சாரம் என்பதை உறுதிப்படுத்துவது சுலபமல்ல.
ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் வைத்துக் கொள்வதைக் கைவிட்டு, வீட்டுக்கு வீடு சூரிய மின்சக்தி மூலம் அடிப்படை மின்சாரத் தேவைகளை ஈடுகட்ட முடிந்தால் மட்டுமே, வருங்காலத்தில் மின்வெட்டிலிருந்து தமிழகம் தப்பிக்க முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
கடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வு

தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

உரிமைக்குக் குரல் கொடுப்போம்!
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


